Tuesday, August 31, 2010

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #3

அப்போது குருமூர்த்தியையும் உடன் வந்த
அடியவரையும் கண்டிலர் நமச்சிவாயர்.
உடனே நமச்சிவாய மூர்த்தி ''இச்செயல்
சிவபிரானுடைய அருட்செயலே''.
வம்பான சொற்களைக் கூறி வலக்கை தூக்கிச்
சைகை செய்து வந்த நாம், சிவபிரானை
உளமாரக் கைகூப்பி வணங்கவேண்டும்
எனபதற்காகவே சற்குரு நம்மை அடித்தார்
என்று உணர்ந்து கொண்டார்..

நமச்சிவாயரைப் பிரம்பால் அடித்த யோகியும்
நமச்சிவாயரும் சிவஞானம் கைகூடப் பெற்றமையால்
ஒருவரை ஒருவர் காணும் இடங்களில்
எல்லாம் அன்புற வணங்கி அளவளாவினர்.

உண்மை அடியாருடைய பண்பு இதுவென்று
பிறர்க்கும் உணர்த்தினர். பழைய வழக்கத்தினை
மாற்றிக்கொண்டு ஆலயத்துட் புகுந்து
அண்ணாமலையாரை கைகூப்பி வணங்கும்
வழக்கத்தினை மேற் கொண்ட நமச்சிவாயரும்,
சிவாகமங்ககளை தெளிவாகக் கற்றுணர்ந்த
சிவாக்கிரம யோகியும் அடியார்க்குரிய
அனைத்துப் பண்புகளும் நிறைய பெற்று,
முன்பிருந்த குறைகள் நீங்கப் பெற்று
வழிபாடாற்றி வந்தனர். குறைகள் நீங்க
பெற்று வழிபாடாற்றி வந்தனர். பின்பு
அந்தச் சிவாக்கிரயோகி சென்ற இடம்
தெரியவில்லை.

நமச்சிவாய மூர்த்தி அண்ணாமலையிலேயே
தங்கினார். அண்ணாமலையாரும் திருவுளம்
மகிழ்ந்து நமச்சிவாயர் தம் உண்மை அடியார்
என்பதனைப் பலகையாக உலகிற்கு உணர்த்தியருளினார்.

ஊரினிடத்தும் நாட்டின் கண்ணும் உலாவிக்
கொண்டிருந்த நமச்சிவாயரைப் பெரிய மலையிடத்தே
வசிக்குமாறு இறைவன் அருள் புரிந்தமையால்
குகை நமச்சிவாயன் என்ற பெயர் எங்கும் பரவிற்று.
குகை நமச்சிவாயருக்கு வேண்டிய பொருள்கள்
அனைத்தும் யாரவது வாயிலாக கிடைக்கும்படி
அண்ணாமலையார் அருள் புரிந்தார்.

இந்தக் குகை நமச்சிவாயருக்கு தகுதி நிறைந்த
சீடர் ஒருவர் இவாகக் கூடிய பெருமையை பெற்றார்!''
என்று பாராட்டினார். அன்று முதல் அவருக்குக்
குரு இருந்தார். அந்த சீடர் ஒருநாள்
குகைநமச்சிவாயர் தன் திருவடிகளைப்
பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தபோது,
ஆடையை அச்சத்துடன் பிடித்துக் கசக்கினர்.
அதனைக் கண்ட குகை நமச்சிவாயர்
'' ஏன் இவ்வாறு செய்தனை?'' என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சீடர், ''தில்லை மாநகரிலே
திருச்சிற்றம்பலத்தி தொங்கவிடப்பட்டிருந்த
திரைச் சீலையிலே தீப்பற்றியது. அத்தீயை
அகற்ற கசக்கினேன்'' என்றார். அப்போது
குகை நமச்சிவாயர் தம் அருகிலிருந்த
சீடனைக் கட்டித்தழுவி.....,, ''
‘’இனி நீ குரு நமச்சிவாய மூர்த்தி
என்ற பெயரால் வழங்குவதாக’’ என்றார்.

ஒருநாள் குகை நமச்சிவாய சுவாமிகள்
சீடராகிய குரு நமச்சிவாயரை பார்த்து,
''நாம் இருவரும் ஓர் ஊரில் இருப்பது
ஒரு மரத்தில் இரண்டு யானையைக்
கட்டி வைத்திருப்பது போன்றதாகும்;

ஆகவே நீ தில்லைமாநகருக்குச் செல்க!
என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பினார்.
மல்லிகார்ச்சுனத்திலிருந்து இவருடன் வந்து,
பூவிருந்தவல்லியில் குருவின் கட்டளைப்படி
அருஞ்செயல் புரிந்த விரூபாட்சித்தேவர்,
குருவின் குகைக்கு மேலே குகை
அமைத்துக் கொண்டு, ஆசிரியர்க்குப் பல
பணிகளையும் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் அன்பர் பலருடன் தம் குகையில்
அமர்ந்திருந்தபோது, அவருடைய திருமேனி
மறைந்தது. அங்கு, விபூதிலிங்கம் தோன்றியது.
அந்த லிங்கம் இன்றுவரை இருந்து வருகிறது.

ஒருநாள், ஓரிடையன் இறந்த சினையாட்டினைத்
தாங்கி நின்று ''இந்த ஆட்டின் வயிற்றில்
இரண்டு குட்டிகள் உள்ளன; விருப்பம் உடையவர்
விலைகொடுத்துப் பெற்றுக் கொள்க'' என்று
பலரும் அறிய உரைத்து நின்றான்.
அங்கு வந்தவருள் ஒரு தீயவன்
இடையனை நோக்கி, '' இந்த மலையின்கண்
உள்ள குகையிலே ஊன் அருந்துவதில்
மிகுந்த இச்சையுடைவன் ஒருவன் இருக்கிறான்,
அவனிடம் கொண்டுபோ; நல்ல விலைக்கு
வாங்குவான்'' என்றான்.

அவன் உரைத்தவற்றை மெய் என்று கருதிய
இடையன் குகை நமச்சிவாய மூர்த்தியிடம்
சென்று நிகழ்ந்தவற்றைக் கூறினான். குகை
நமச்சிவாய சுவாமிகள் சினங்கொள்ளாமல்,
ஆட்டின் விலை எவ்வளவு என்று கேட்டறிந்து
விலைப் பொருளை நாளைத் தருகிறோம்
சென்று வருக!'' என்று அனுப்பிவிட்டார்.

கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை
நினைந்து பெருமானே இன்று ஏன் இறந்து
போன ஆட்டினை என்னிடம் அனுப்பினீர்?
என்று ஒரு இனிய பாடலை பாடி, திருநீற்றில்
ஒரு துளியினை எடுத்த ஆட்டின் மேலிட்டார்.
உடனே ஆடு உயிர் பெற்றெழுத்து இரண்டு
குட்டிகளை ஈன்றது

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்...-குகை நமச்சிவாயர் #2

அவ்வாறு செய்ய உம்மால் இயலுமா?'' என்று
கேட்டான். அப்போது நமச்சிவாய தேவர்,
''பரம்பொருளாகிய சிவபிரானை உள்ளத்தே
நினைந்துருகிச் சிவாபிரான் திருவருளைத்
துணையாககொண்டு அவ்வாறு செய்யக்கூடும்''
என்று சொல்லித்தம் மாணவராகிய
விரூபாட்தித் தேவரை நோக்கினார்.
மாணவர் புரிந்து கொண்டார்.

புறமதத்தைச் சார்ந்த அரசன் விதித்த
நிபந்தனைகட்கு உட்பட்டு இணங்கினார்.
உடனே அரசன் கட்டளைப்படி இரும்புத்
துண்டம் ஒன்று நெருப்பிலிட்டு காய்ச்சப் பெற்றது.
இரும்பு துண்டு சூடேறியதை விரூபாட்சித்
தேவரிடம் தெரிவித்தனர்.

அப்போது விரூபாட்சித்தேவர், ''அந்த இரும்பு
இப்போதுதான் பூத்திருக்கிறது; மேலும் பக்குவம்
அடைய வேண்டும்'' என்றார். கொவ்வைக்
கனியினும் மேலாக சிவந்தவுடன்
விரூபாட்சித்தேவரிடம் தெரிவித்தார்கள்.

தீவண்ணராகிய சிவபெருமானை உள்ளத்தே
நினைத்துக்கொண்டு, ''கையில் அனல் ஏந்தி
விளையாடும் ஐயா போற்றி,"
செந்தழல் மேனிச் சிவனே போற்றி'' என்று
சிவபிரானைச் சிந்தனை செய்து, பழுக்கக்
காய்ச்சிய இரும்பைப் பார்த்துகொண்டே,
'சைவ சமயமே சமயம், அச்சமயம் சார்ந்த
சிவனே பரம்பொருள்'' என்று உரைத்தருளினார்.

பிறகு,..,

''அரியும், அயனும், அமரும் அஞ்சியோடுதற்குக்
காரணமாயிருந்த ஆலகால நஞ்சினை, அமுதத் திரள்
எனக்கருதியுண்டு. அனைவருக்கும் அடைக்கலம் தந்து,
நீலகண்டத்துடன் நிமிர்ந்து நின்ற சிவபிரானுக்கு
அடியவராகிய எமக்குப் பழுக்கக் காய்ச்சிய இவ்விரும்பும்
பழுத்ததொரு கனியேயாம்'' என்று சொல்லிக்கொண்டே
உட்கொண்டுவிட்டார்.

இந்நிகழ்ச்சிகளையும் நேரில் பார்த்துகொண்டிருந்த
புறச்சமயத்தைச் சார்ந்த அரசனும், அமைச்சரும்,
மக்களும் வியப்படைந்து விதிர்விதிர்த்து நின்றனர்.
பிறகு,வேற்று மதத்தினை சார்ந்த அம்மன்னன்
நமச்சிவாயருக்கும் அவர் மாணவராகிய
விரூபாட்சித் தேவர்க்கும், அவருடன் வந்த
முன்னூறு அடியவர்க்கும் வேண்டிய
சிறப்புகளை எல்லாம் செய்து பாராட்டினான்.

பிறகு, அங்கிருந்து புறப்பட்டு அடியவர்கள்
சூழ்ந்து திருவண்ணாமலை சென்று சேர்ந்தார்.
திருக்கோயிலுக்குச் சென்ற போது,
அண்ணாமலையாரைக் கைகூப்பி வணங்காமல்.

''நீர் நலமாக இருக்கின்றீரோ?'' என்று கையால்
சைகையால் செய்து வந்தார். நமச்சிவாய சுவாமிகள்
செருக்கினால் அவ்வாறு செய்தார் அல்லர்;
அவர்கள் பின்பற்றும் வீராகமம், ''அடியவர் சூழ
குருமூர்த்தியாக வந்த சிவபிரான் கோலத்தையன்றிப்
பிறரைக் கைகூப்பி வணங்குதல் கூடாது'' எனக்
கூறுவதனால் அவர் வணங்காமல் இருந்தார்.

''குரு லிங்க சங்கமம் எனும் முப்பொருளை யன்றிப்பிறரை
வணங்குதல் கூடாது'' என்னும் மரபினை ஒட்டி
அவ்வாறு நடந்தார். ''இலிங்கம் என்பது தம்
மார்பகத்தே எழுந்தளியிருக்கும் சிவபெருமானே
என்பது அவர்தம் கோட்பாடு';

அண்ணாமலையார் கட்டளைப்படியே தாம்
அவ்வூர்க்கு வந்திருப்பதனை உணர்ந்தாரில்லை;
என்றாலும் செந்தமிழ் மொழியில் அவர்க்குண்டான
மேம்பட்ட தெளிவினால் அண்ணாமலையாரை
சிறப்பித்து வெண்பாவினைப் பாடத்தொடங்கினார்.

கன்னட மொழியை அன்றி வேறு மொழியினை
அறியாத நமசிவாயர் மேலான தமிழ்ப்புலவர்களும்
பாராட்டத்தக்க வகையால் வெண்பாக்களைப்பாட
அருள் செய்தார் சிவபிரான்.

'நமச்சிவாயர் சிவபிரானிடம் சிறிதும்
அன்பில்லாதவர் என்றும் மற்றவர்கள்
கருதக்கூடிய வகையில் கைக்காட்டி வந்ததனை
அறிந்த சிவாக்கிரயோகி என்பார்,
உடல் பெரிதும் வருந்துமாறு நமச்சிவாயரைப்
பிரம்பினால் அடித்தார்.

''நல்ல சற்குருவாக வந்து இறைவன் என்னை
மோதியது கொல்வதற்காக அன்று; என்பாலுள்ள
தீக்குணங்களைப் போக்குதற்கேயாம்'' என்ற
கருத்தமைய ஒரு வெண்பாவினை இயற்றினார்,
நமச்சிவாயர்.

நமச்சிவாயருடைய உயர்ந்த மனநிலையை
உணர்ந்த சிவாக்கிரயோகியார் தாம் பிரம்பாலடித்தது
பற்றி வருந்தினார். நமச்சிவாயர் அவ்விடத்தை
விட்டு அகன்று, ''கோயிலுள் சென்று இறைவனை
வணங்குதல் சிறந்தது.'' என்று எண்ணினார்.

அப்போது அவர்க்கு அருகிலே, முன்னொரு
நாளில் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்திய
சற்குருவானவர் கல்லாடையுடுத்த தொண்டர்கள்
சூழ்தர முன்னே தோன்றினார்; தோன்றியவர்
உரிமையுடன் இவரோடு சில பேசி அடியார்
நமச்சிவாயர் குழாத்துடன் கோயிலுக்குள்
சென்றார் கருதினார்.

அதனைக் கண்ணுற்ற, '' குருமூர்த்தி
எழுந்தருளியிருக்கும் இடம் இதுதான் போலும்'' என்று.

அடியாருடன் சென்ற குருநாதர் தம்முடன்
வந்த மாணவர்களோடு அண்ணாமலையார்
அடிக்கமலங்களில் வீழ்ந்து பணிந்து எழுந்தார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

சித்தர்களின் வழியில்.., - குகை நமச்சிவாயர் #1

கன்னட நாட்டில், திருப்பருப்பதம் அல்லது மல்லிகார்ச்சுனம்
என்ற ஊரில் சிவனது திருவருளைப் பெற்றுச் சிறப்புற்றிருந்த
அன்பர் ஒருவர் இருந்தார். அந்த அடியவரிடம்
அண்ணாமலையார் தோன்றி திருவண்ணாமலைக்குச்
சென்று அங்கு ஞானகுருவாக எழுந்தருளி
இருக்குமாறு கட்டளையிட்டார்.

அந்த அடியவர் பெயர் நமச்சிவாயர். உடனே
நமச்சிவாயர் தென்திசை நோக்கிப் புறபட்டார்.
புறப்பட்டு வரும் வழியிலே உடன் வந்த அடியாருடன்
ஓரூரை அடைந்தார். அவ்வூரில் ஒரு திருமணம்
நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அவ்வழியில்
வந்த அடியாரை திருமண வீட்டிற்குரிய தலைவன்,
மாலை அணிவித்து வரவேற்று திருமண வீட்டிற்கு
அழைத்துச் சென்றான்.

திருமண வீட்டாரும் அங்கு வந்திருந்தவரும்,
திருநீறு பெற்றுக் கொண்ட பின், வீடு தீப்பற்றிக்
கொண்டது. தீருநீறு அத்தகைய சக்தியும்,
அனலும் கொண்டது. ''இவ்வடியார் கொடுத்த
திருநீற்றினால்தான் வீடு எரிந்து போயிற்று'' என்றனர்.

அவர்கள் உரைத்தவற்றைக் கேட்ட அடியவர்
சிந்தை நொந்து சிவபிரானை நினைந்து மீண்டும்,
எரிந்தவற்றை எல்லாம் படைத்தருளினார்.
வெந்து போன்வெல்லாம் மீண்டும் உண்டான
அருஞ்செயலைக் கண்டவர்கள்,
இந்த சிவனேயாவர் என்று போற்றினர்.

அங்கிருந்தவர் அனைவரும் அகம் மகிழ,
''நான் இனி ஒருவர் மனையிடத்தும் செல்லேன்''
என்னும் ஒரு விரதத்தினை மேற்கொண்டு
அவ்விடம் விட்டுப் புறப்பட்டார். புறப்பட்ட நமச்சிவாயர்
மாணவரோடும், அடியவரோடும் காலையில்
பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தார். அவர்கள் அனைவரும்
சிவபூசை செய்யும் பண்பினர். ஆதலால், ஊரில் உள்ள
தோட்டங்கள் எங்கும் உள்ள மலர்களை பறித்தனர்.
அம்மலர்கள் அங்குள்ள கோயில் வழிபாட்டிற்குரிய
மலர்கள். செய்தி அரசுக்கு எட்டியது.

ஆகவே, அவ்வூர் அரசு அலுவர்கள் நமச்சிவாயரை
அழைத்து,''உரியவைக் கேளாமல் தோட்டங்களில்
புகுந்து கோயில் பூசைக்கும் மலரில்லாமல்
பூக்களைப் பறித்தது குற்றமாகும்..
இதற்கு என்ன சொல்கிறீர்?'' என்றனர்.

அப்போது நமச்சிவாயர், தங்கள் மேல் குற்றம்
சுமத்துவோரை நோக்கி,, ''நாங்கள் பறித்த பூக்கள்
எல்லாம் நீங்கள் சொல்லும் கோயிலில் உறையும்
இறைவனுக்கே சார்த்தப் பெற்றன..
அம்மலர்கள் வீணாக்கப்படவில்லை'' என்றார்.

அதற்கு அவர்கள்., ''கேட்ட கேள்விக்கு நேரான
விடை சொல்லாமல் உயர்ந்த தத்துவம் பேசுகின்றீர்;
உங்கள் சொந்தப் பூசையில் உங்கள் வழிபடு தெய்வத்திற்கு
அணியப் பெற்ற பூக்களை இவ்வூர்க் கோயிலில்
உறையும் இறைவன் ஏற்றுக்கொண்டான் என்று
நீங்கள் சொல்வது உண்மையானால், இவ்வூர்க் கோயிலில்
உள்ள சிவலிங்கத்திற்கு அணியப்பெற்றுள்ள மாலையானது
அனைவரும் காணும்படி, உம் கழுத்திடம்வருதல் வேண்டும்'' என்றார்.

அதற்கு நமச்சிவாய மூர்த்தி உடன்பட்டு சிவபிரானுடைய
திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சிவபிரான் கோயிலில் உள்ள
அருச்சகர்கள் இறைவனுக்குச் சார்த்தியுள்ள மாலையின்
பின்புறத்தில் ஒரு கயிற்றினைக் கட்டி, ஒரு சிறுவனைச்
சிவலிங்கத்தின் பின் புறமாக அமரச்செய்து, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்குமாறு செய்தனர்.

நமச்சிவாயர், ''நற்றுணையாவது நமச்சிவாயவே'' என்று
பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டு இறைவன் முன்பாக
நின்று கொண்டிருந்தார். அப்போது அனைவரும் காணச்
சிறுவன் பிடித்திருந்த கயிறு அறுந்து மாலையானது
நமச்சிவாயரின் கழுத்தில் மிளிர்ந்தது.

கண்டவர் அனைவரும் வியப்புற்று நமச்சிவாயரைப்
பெரிய ஞானியாராக ஏற்றுப் பாராட்டினர். இந்நிலையில்,
அந்தப்பகுதியில் ஆட்சி செய்த புறமதத்து அரசன்,
நமச்சிவாயாரையும் அவர் மாணவர்களையும் ஆழமாகச்
சோதனை செய்து பார்க்க விரும்பினான்.

நமச்சிவாயரை பார்த்து, ''உங்கள் சைவ சமயம்
உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட சமயம்; எல்லா
வகையிலும் உயர்ந்து விளங்கும் சமயம் என்று
உம் போன்றவர்கள் பேசப்படுவது உண்மையானால்,
நான் சொல்கின்றவாறு மெய்ப்பித்துக் காட்ட
இயலுமா?'' என்று கேட்டான்

''இறைவன் திருவருளைத் துணையாகக் கொண்டு
உம் விருப்பம் போல் மெய்பிக்காட்ட இயலும்'' என்றார்.
அரசன் நமச்சிவாயரை, ''பழுக்கக் காய்ச்சிய இரும்பினை
கையில் பற்றிக்கொண்டு, சைவ சமயமே சிறந்தது;
அச்சமயத்திற்குரிய தெய்வம் சிவபிரானே!
என்று சொல்ல வேண்டும்,

[தொடரும்]
--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

Friday, August 27, 2010

சித்தர்கள் வழியில்.....

சித்தர்களின் வழியில்...,

ரிஷி, சித்தர், முனிவர், ஞானி, மாதவர், யோகிகள்
முதலிய சொற்கள் யாரைக் குறிக்கின்றன?
அமானுஷ்ய ஆற்றல்களைப் பெற்ற அதிமனிதர்களை
இச்சொற்கள் குறிக்கின்றன. தற்சமயத்துக்கு இச்சொற்களுக்
குரியவர்களைப் பற்றி விவரிக்காமல், சித்தர்களைப் பற்றி மட்டுமே பார்க்கலாம்.

புலன்களை அடக்கி அகக்கருவிகளுல் ஒன்றாகிய
‘சித்தத்தைச்’ சிவபரம் பொருளிடம்
வைத்து மன ஓட்டத்தை தடுத்தவரகளே சித்தர்கள்.
சித்தர் இங்கேயே சிலலோகம் தரிசித்தவர்கள் என்பர்.

திருமூலர் எட்டுவகை யோக நெறியில் பயின்று
எண்வகை சித்திகளை அடையப் பெற்றவர்.
அவற்றை ‘அட்டமா சித்திகள்’ என்பர். இதனை உலக
நன்னைக்கும் பொது மக்களின் மேன்மைக்கும்
பயன் படுத்துவார்களே தவிர தங்களது சுய

தேவைகளை நிறைவு செய்யவோ அல்லது
தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ
முற்படமாட்டார்கள்.

மனித வாழ்வு நிலையற்ற ஒன்று. ஆயினும்
இதனை நீண்டதாக ஆக்க வல்ல ‘ஊனினைச்
சுருக்கி உள்ளொளி பெருக்கும்’ தன்மையினைக்
கண்டு தெளிந்து போற்றுவார்கள்

சித்தர்கள். மனித யாக்கையில் வாழுகின்ற
மாக்களை மனிதப் பண்பு மக்களாக மாற்றிய
பின்னர் அவர்களுக்கு அமர நிலை தருதல்
வேண்டும் என்ற பரந்த நோக்கம் கொண்டவர்களே
சித்தர்கள். இயற்கையோடு ஒன்றி வையத்தை
வாழவைக்கும் குறிக்கோளே அவர்களுடையது.

சித்துக்களை அடைவதற்கு இறையருள்
முக்கியமானது. பல சித்தர்கள் உபாசனைகளின் மூலம்
சித்துக்களை அடைந்தார்கள். இந்து சமயத்திலுள்ள
சித்தர்கள் முக்கியமாக புவனேஸ்வரி, பாலா,
வாராஹி போன்ற தெய்வங்களை வழிபட்டார்கள்.

பாலாவுக்கு சித்தேஸ்வரி, சித்தவித்யா, சித்தமாதா
என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அணிமா, மகிமா,
லகுமா, கரிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்துவம்,
வசித்துவம் ஆகிய அடங்கும்


சித்தர் என்ற சொல்லுக்கு மூலம் எது என்பதில்
ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன.
மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் வரிசையில் சித்தம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியது என்று சிலர் கருதுவர்.

எல்லாத் தத்துவங்களும் சித்தத்தின் சலனத்திலிருந்தே
தோன்றுகின்றன. சுருங்கக்கூறின் பிராண
வாயுவின் சலனத்தையும் பிராணனின் சலனத்தையும்
பொருத்தது சித்தத்தின் சலனம்.

பிராணவாயுவின் அசைவுகூட சித்தத்தின் சலனம்தான் என்று கூறுவர்.ஆகவேதான் எத்தகைய சித்திகளுக்கும்
யோகத்துக்கும் 'சிந்தையிலே தெளிந்திருப்பவன்;
செகமெல்லாம் சிவமென்றே அறிந்தவன்; தத்துவத்தை
உணர்ந்தவன்; இவன் சித்தன்', என்று சில சித்தர் பாடல்கள்
கூறும். இன்னொரு அர்த்தமும் காண்பார்கள்.
'சித்தி' என்றால் அடைவது என்று பொருள்.

'குறியான சிவயோகம் சித்தியாச்சு' போன்ற
வரிகள் சித்தர் பாடல்களில். பெறற்கரிய
பேறுதனைப் பெறுதல் சித்தி. அதனைக்
கைவரப்பெற்றவர் சித்தர் என்பதும் ஒரு கருத்து.
சத் சித் ஆனந்தம்' என்றவற்றில்'சித்'திலிருந்து
சித்தர் என்ற சொல்லைப் பெற்று பொருள்
காண்பார்கள் சிலர். சிவனுக்கே சித்தன் என்ற
பெயரும் உண்டு. சிவனைச் சித்தனாகக்
கண்டு சமயத்துக்கும் அப்பாற்பட்ட நிலையில்
உணர்ந்த யோகிகள்தாம் சித்தர் என்றும்
சொல்வார்கள். மொத்தத்தில் சிவயோக சித்தி
கைகூடப்பெற்று, சிவானுபூதியைப்
பெற்றவர்களையும் அட்டமாசித்தி போன்ற
ஆற்றல்களைக் கைவரப் பெற்றவர்களையும்
சித்தர்கள் என்பதே வழக்கம்.

இனி வரும் இழையில் ஒரு சில சித்தர்களின்
அற்புதங்கள்,சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய
பணிகள் போன்ற சேதிகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ள விழைகிறேன்

நன்றி, வணக்கம்
--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/