Saturday, August 02, 2008

பொதிகை புனித யாத்திரை-2

இவை தவிர, கருமேனியாறு, நம்பியாறு,
தாமரையாறு, கோம்பையாறு, கோடையாறு,
வைப்பாறு, வாழைமலையாறு, தாழையூற்றாறு,
வடுகபட்டியாறு, அருச்சுனன் ஆறு, கோட்டைமலையாறு,
நிசேப நதி, காக்கா நதி, பாலையாறு போன்ற
பல சிற்றாறுகளும் கொண்டே நெல்லைச் சீமை.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 450 கோயில்கள்
உள்ளன.பெரியபெரிய கோயில்கள், வானுயரும்
இராஜகோபுரங்கள், பிரம்மாண்டமான் மண்டபங்கள்,
கண்கவர் சிற்பங்கள்,சுவைமிக்க தலவரலாறுகள்,
புனித தீர்த்தங்கள், தேர் திருவிழாக்கள் எல்லாம் உண்டு.


ஆயிரம் திருநாமங்கள் கொண்டு ஆராதிக்கப்படும்
ஆதி நாயகனான் சிவபெருமான், சிவலிங்த் திருமேனியாக
அருள்பாலிக்கிறார்.


''தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த்
தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
போற்றி மகிழ திருமூல லிங்கம்''

-என்கிறது திருநெல்வேலித் தல புராணம்.


வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடிக்க முடியாதபடி
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்பவரே மகாலிங்கர்.
இந்த மூல மகாலிங்கத்தைத் தொழுவோர் மற்ற எல்லா
சிவலிங்கத் திருமேனிகளையும் தொழுத பலனைப் பெறுவர்.

ஆதி பிரளய காலத்தில், வேதங்கள் எல்லாம்
பூஜித்த வேத நாயகரே அவர்.
'ஆதிலிங்கம், திரிகண்டலிங்கம்,
தருமலிங்கம், கெளரிலிங்கம், நிர்குணலிங்கம்,
சகுண கற்பக மகாலிங்கம், கெளரி கல்யாண லிங்கம்,
வளர்ந்த மகாலிங்கம், மூல மகாலிங்கம்
என்று திருநாமங்களைக் கொண்டு திகழ்கிறார்.

குற்றாலம் ஐந்தாயிரம் அடி உயரம் கொண்ட
மலையின் அடிவார்த்தில், குற்றால அருவிக்கு நேராக,
சங்கு வடிவனாக அமைந்திட்ட கோயில்.

ஆடவல்லானின் ஐந்து சபைகளில் இது 'சித்திர சபை.

''கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம்,
கிளைகள் ஈன்ற களை எலாம் சிவலிங்கம்
கனி எலாம் சிவலிங்கம், வித்து எலாம் சிவலிங்கம்
சொரூபமாக விளையும் ஒரு குறும்பலாவின்
முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே''

கோயில் வாசலை ஒரு சிறிய கோபுரம் அழகு செய்கிறது.
உள்ளே திரிகூட மண்டபம் அடுத்து நமஸ்கார மண்டபம்,
மணி மண்டபம் எல்லாம் உண்டு.

அகத்திய முனிவர்,ஈசனின் கட்டளையை ஏற்று,
தென்புலத்திற்கு வருகிறார். இங்குள்ள குற்றாலநாதர்
கோயில் வைணவ ஆலயமாக இருந்திருக்கிறது.
சிவக்கோலத்தில் இருந்த அவரை உள்ளே அனுமதிக்கவில்லை
அர்ச்சகர்.

மனமுடைந்த குறுமுனி, இலஞ்சிக் குமரனை தொழுந்தார்.
குமரன் காட்டிய வழியில் மீண்டும் வருகிறார் குற்றாலத்திற்கு.
உடல் முழுதும் 'திருமண்' தரித்து வைணவ அடியாராக,
உள்ளே சென்று 'ஆத்மார்த்த பூஜை' செய்வதாகக் கூறி,
எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு,
கதவை சார்த்திக் கொண்டார்.

--------பயணம் தொடரும்---------
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

No comments: