Friday, October 24, 2008

சபரிமலை நடை பயணம் - #1

புராணங்கள் வெறும் கட்டுக்கதைகளல்ல.
பொழுது போக்காய் எழுதப்பட்டதோ,
படிக்கப்படுவதோ அல்ல.
நாம் கடை பிடிக்க வேண்டிய
நெறிமுறைகளை அவை வலியுறுத்தும்,
நல்வாழ்வின் இரகசியங்களை வெளிப்படுத்தும்.

அவைகள் கட்டுக்கதையாகக்
கூட இருக்கலாம் அல்லது
புனை கதையாகக் கூட இருக்கலாம்.

அதில் சொல்லப்படும் நீதிகளை,
வாழ்க்கைத் தத்துவங்களை,
தர்மங்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

மனிதர்கள் எப்போதும் தர்மத்திலிருந்து,
தடம் புரண்டு அதர்மத்தில் தங்களை
அழித்துக் கொள்ள முற்படுகிறார்களோ
அப்போது புராணங்களில் கூறப்படும்
சாரங்களை எண்ணிப்பார்த்தால்
அதன் உள்ளார்ந்த பொருள் விளங்கும்.

ஐயப்பன் எடுத்த அவதாரம் தர்மத்தையும்,
சத்தியத்தையும் உலகில் நிலை நாட்டுவதற்குத்தான்.
நற்பண்புகளை வளர்த்துக் கொண்டவர்கள்தான்
தடைகளை உடைத்து, பிரச்சினைகளை ஊதித்தள்ளி,
சவால்களை வென்று தங்கள் வாழ்க்கையை
ஒளிமயமாக்கி கொள்ள முடியும்.

சபரி மலை நடை பயணமே வாழ்க்கைப்
பயணத்தின் தத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

அது சரணாகதித் தத்துவம்.
''உன்னை இறைவனிடம் முழுமையாய்
ஒப்படைத்துக் கொள். அவனை பூரனமாய் நம்பு.
உன்னைக் காப்பது அவன் பொறுப்பு.
ஐயத்தையும், அச்சத்தையும் விட்டுவிடு''
இதுதான் அந்தத் தத்துவம்.

போகிற வழியில் எத்தனையோ
கொடிய விலங்குகள் (வாழ்க்கை அவை பிரச்சினைகளாய்,
சவால்களாய் இடம் பெறும்) எதிர்ப்படலாம்.
இறைவனின் மீது நம்பிக்கை வைத்தால்
அவன் ஆபத்துகளிலிருந்தும்,
பேரபாயங்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவான்.

'ஐயனே, எல்லாம் உன் விருப்பம்'
என்று ஐயப்ப பக்தர்கள் முடிவை
அவனிடமே விட்டுவிட வேண்டும்.

பகவானின் வாசலை அடையும்போது
கர்மங்கள் எல்லாம் நீங்கி விடுவதாய்
ஐதீகம். அங்கே தன்னுடைய
கர்ம வினைகளற்றவனாய் மனிதன் நிற்பான்.

பக்தன் கடந்து செல்லும் பதினெட்டு
படிகளும் தத்துவார்த்தமானவை.
தேங்காய் உடைப்பது இறைவனோடு
இரண்டறக் கலத்தலைக் குறிக்கும்.

அப்போது உடல் உதறப்பட்டதாய் கருதப்படும்.
உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகள் நெருப்பில்
வீசப்படுகின்றன. அது உடல் அழிவதைக் குறிப்பதாகும்.

புனிதமான வாழ்க்கைதான் மனிதர்களைப் புனிதர்களாக்கும்.

சூரியனின் பயணப்பாதை தெற்குப் பக்கம்
திரும்பும் காலம் ஆடி மாதம்.
பொதுவாக தெற்கு என்பது எமனுக்கு
உரியது என்பார்கள்.

கால தேவனைக் கட்டுப்படுத்துவதும் ஆற்றல்,
அம்பிகைக்கு மட்டுமேஉண்டு என்கிறது புராணம்.

அதனால்தான், மார்க்கண்டேயனைக்
காப்பாவதற்காக தர்மதேவனை,
அம்பிகை தன் உடலில் அமைந்திருக்கும்
இடது பாகத்துக்கு உரிய இடக்காலால்
உதைத்தாராம் ஈசன்.

உயிர்களின் ஆரோக்யத்துக்கு காரணமானவன்
சூரியன் என்பது மெய்ஞானமும் விஞ்ஞானமும்
ஏற்றுக்கொண்ட விஷயம்.

அடுத்து, ஆடி மாதத்தில் காற்றும் மழையும் இருக்கும்.
'கால்' எனும் காற்றைக் கட்டுப்படுத்துபவள்.
காரி, மாரியாகிய மழைக்கு தெய்வம், மாரியம்மன்.

இன்னொரு முக்கிய விஷயம் ஆடி மாதத்தின்
போது ஏற்படும் பருவகால் மாறுபாட்டால்
பரவக்கூடிய நோய் கிருமிகளை கட்டுப்படுத்தும்
ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும்
இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

அதனால்தான் அம்மன் கோயில்களில்
ஆடி மாதம் பூஜைகள் அதிகம் இடம் பிடிக்கின்றன.

வழிபாட்டு முறைகளாக நம் முன்னோர்கள்
ஏற்படுத்தி வைத்தவை எல்லாமே நம்
நலத்தைக் காப்பவை.

ஆகவே நாங்களும் ஆடி மாதம்
எங்களின் நடை பயணத்தினை
தொடங்கினோம். பல ஆண்டுகளுக்கு
முன் ஒருமுறை சபரி நடை பயணம்
மேற்கொண்டுள்ளேன்.

இரண்டாம் முறையாக செல்ல நேர்ந்தது
எதிர்பாராத பயணம். சிங்கப்பூரில் நமக்கு நன்கு
அறிமுகமான மூன்று நண்பர்கள் சபரி மலை
செல்ல வேண்டும், வழிமுறைகளை
சொல்லவேண்டும் என்று கேட்டனர்.

இவர்கள் யாவரும் சிங்கப்பூரில் இருந்து
முதல் முறையாக சபரி செல்பவர்கள்.
அத்துடன் அரசாங்கத்துறையில்
வேலை செய்பவர்கள்.
ஆகையால் நீண்ட நாட்களுக்கு
விடுமுறை கிடைப்பதில் சிக்கலுண்டு.

இரண்டு வாரத்தில் போய் வரவேண்டும்
என்ற நிலை, ஆவல். தமிழ் மாதம் பிறந்த
முதல் ஐந்து நாட்கள் சபரி நடை திறக்கப்படும்.

ஆகவே ஆடி மாதத்தினை தேர்தெடுத்து
புறப்பட தீர்மானித்து, விரதமும், நோன்பும்
மேற்கொள்ளப்பட்டது.

48 நாட்கள் விரதமிருந்து சிங்கப்பூரிலிருந்து
புறப்பட்டு தென்காசி அடுத்துள்ள ஆய்க்குடியிலிருக்கும்
'மகாலிங்கமலை சென்று அடைந்தோம்.
இன்றும் சித்தர்கள் அருவுருவாக தவம்புரிந்து வருகிறார்கள்
இந்த மகாலிங்க மலையில்.

மகாலிங்க மலையிலிருந்து மேலும் சில
அன்பர்கள் சபரி மலைக்கு செல்லத்
தயார் நிலையில் இருந்தார்கள்.

அன்று மாலை சுமார் 50 முறை சபரி
சென்று வந்த அனுபவமிக்க ஒரு பெரியவர்,
குருசாமி எங்களுக்கு மாலைபோட்டு
இருமுடி கட்டி அங்கிருக்கும்
சாஸ்தாவை வணங்கி வலம் வந்தோம்.
மறுநாள் காலை 6 மணிக்கு
ஒரு சிறிய பேருந்து மூலம்
மூன்று கன்னி சாமிகள்,
மற்றும் 13 பேர்கள் ஆக
16 ஐயப்ப சாமிகள் புறப்பட்டோம்..

ஒரு பக்கம் மலைகளும் மறுபக்கம்
கடலுமாய் அமைந்தது கேரள தேசம்.
குன்றாத நீர்வளமும், நில வளமும்
கொண்ட அத்தேசத்தில் வட்ட வடிவில்
இருப்பது பந்தள நாடு.

வானுயர்ந்த மாளிகைகள்,
மணி மண்டபங்கள் செல்வச்
செழிப்புடைய பண்டக சாலைகள்
நிறைந்திருந்தன. பம்பையாறு அப்பகுதியில்
செந்நெல்லும் செங்கரும்பும் அமோகமாய்
விளையச் செய்திருந்தன.

பந்தள நாட்டுக்கு மன்னனான இராஜசேகரன்
பாண்டிய வம்சத்தை சேர்ந்தவன்.
பக்தி நெறிபூண்டொழுகிய அம்மனின்
ஆட்சியில் மக்கள் குறையின்றி வாழ்ந்து
வந்தனர். மன்னனுக்கு மட்டும் ஒரேயொரு
குறையிருந்தது.

தன் வம்சத்தை விளங்க வைக்க
ஒரு வாரிசு இல்லையே என்ற குறை.
இராஜசேகரன் மக்கட்பேறு வேண்டி
பல தான தருமங்கள் செய்தான்.
வேள்விகள் நடத்தினான்.

நாளும் இறைவனை வழிபடும் போது
அவன் நயந்து வேண்டியது பிள்ளைவரம் மட்டுமே.
கடவுள் கண் திறப்பதற்கும் காலம் கனிந்து
வரவேண்டுமல்லவா?

மன்னனுக்குப் பல கடமைகள் உண்டு.
பகை நாட்டிடமிருந்தும், பஞ்சத்திலிருந்தும்
காப்பது உட்பட. அதில் வனவிலங்குகளிடமிருந்து
குடிகளைக் காப்பதும் ஒன்று.

ஒரு சமயம் பந்தள நாட்டின் எல்லைப்
பகுதியில் காட்டு மிருகங்கள் புகுந்து
அட்டூழியம் செய்துவருவதாய் மன்னனுக்குச்
செய்தி வந்தது.

அங்குள்ள மக்களைக் காப்பதற்காக வேண்டி
மன்னன் வேட்டைக்குச் செல்ல சித்தமானான்.
வீரமுடன் விலங்குகளை வேட்டையாடிய
மன்னன், அந்திப் பொழுதில் சற்றே இளைப்பாறினான்.
சோர்வு நீங்க பம்பையாற்றில் நீராடினான்.

சிவ தியானம் செய்ய அமர்ந்தான்.
அத்தருணத்தில், எங்கோ ஒரு குழந்தையின்
அழுகிற குரல் கேட்டது.
குரல் வந்த திக்கில் பார்வையையும்
கவனத்தையும் செலுத்தினான் மன்னன்.

மனித சஞ்சாரமற்ற காட்டுக்குள்
மழலையின் அழுகையொலியா?
என்று வியப்படைந்தான்.

பரிவாரங்கள் சூழ அழுகுரல் கேட்ட
திசை நோக்கி நடந்தான். அவர்கள்
தொலைவில் ஓர் ஒளிப்பிழம்பு தெரியக்
கண்டனர். அங்கே, பம்பையாற்றின் கரையில்
குழந்தையொன்று பிரகாசத்துடன் காணப்பட்டது.
எல்லோரும் வியப்புடன் அக்குழந்தையை நோக்கினர்.

பிரகாசத்துடன் காணப்பட்ட குழந்தை
மானிடப்பிறவியாய் இருக்கமுடியாது.
தெய்வத்தின் அவதாரம் என்று எண்ணினான்.
மணிமாலையுடன் கண்டத்தை உடைய
இக்குழந்தை பிற்காலத்தில் மணிகண்டன்
என்ற திருநாமத்துடன் விளங்கியது.

இறைவன் காட்டு விப்பானே தவிர
ஊட்டுவிப்பதில்லை. ஆனால், மன்னன்
இராஜசேகரன் விஷயத்தில் அவன்
ஊட்டுவிக்கவும் செய்தான்.

குழந்தையைக்காய் தவம் கிடந்தவனுக்கு
ஓர் உன்னதக் குழந்தையை வழங்கியதோடு
அதன் அற்புத சக்தியையும் அல்லவா
முன் கூட்டியே உணர்த்தி இருக்கிறான்.

பம்பைக் கரையில் அவதரித்து
பந்தள அரண்மனையில் கால்பதித்த
மணிகண்டன் தவழ்ந்து, எழுந்து நடந்து,

அரண்மனை எங்கும் ஓடியாடி விளையாடினான்.
ஐந்து வயதானபோது முறைப்படி
கல்வி பயில குருகுலவாசத்திற்கு
அனுப்பினான் மன்னன்.

வேதங்களையும், சாஸ்திரங்களையும்,
கலைகளையும் பிழையறக் கற்றுத்
தேர்ந்த ஐயப்பன் குருகுல வாசத்தைக்
குறுகிய காலத்திலேயே முடித்து விட்டான்.

அரசமரபினர்க்குரிய போர்க் கலைகளையும்
அவ்வாறே திறம்படக் கற்றான்.
சிவசக்தி அம்சங்களை ஒருங்கே பெற்றவனுக்கு
குருவித்தை அவசியமே இல்லைதான்.

ஆனால், அவதார இயல்புடன்
பொருந்தியிருக்க வேண்டுமல்லவா.
'இவன் சாதாரண மனிதப்பிறவியல்ல' என்பதை
பயிற்றுவிக்கும் காலத்திலேயே
அறிந்துகொண்டார் குருதேவர்.

பயிற்சி முடியும்போது இவன் தெய்வத்தின்
அவதாரம் என்பதைப் பூரணமாகவே
உணர்ந்துவிட்டிருந்தார்.

நேற்று போல் இன்றோ
இன்று போல் நாளையோ இருப்பதில்லை.

மாற்றங்களைக் கொண்டு வரும் காலம்.
அதுவரை கருத்தரித்திராத அரசி
கோப்பெருந்தேவி கருவுற்றாள்.

திருவருளால் அரசி ஓர் ஆண் மகவினைப்
பெற்றெடுத்தாள். பிள்ளைக்கு
இராஜராஜன் என்று பெயரிட்டனர்.

(தொடரும்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

தமிழ் எமது மொழி இன்பத்தமிழ் எங்கள் மொழி
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com
http://singaporekovilgal.blogspot.com

No comments: