இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு கவிஞர்
இருந்தார். அவர் பாடிய கவிகள் அபார வேகங்
கொண்டனவாயும் கேட்பவர் உள்ளத்தைக்
கவர்வனவாயும் இருந்தன.
கவிஞர், கொச்சி என்று இப்போது வழங்குகிற
வஞ்சியில் சில ஆண்டுகள் இருந்தார். மன்னனும்
சகாக்களுமாகக் குழுமி இருக்கும்போது பாடலைப்
பாடுவார். கவியைக் கேட்டு அதிசயித்துப் போனார்கள்.
நண்பர்களைப் பார்த்தால் கவி மூலமாக பாடல்
பாடிக் கேட்பார். கவிஞரை நண்பர்கள் வெகுவாக
புகழ்ந்தார்கள்.
இரண்டொரு ஆண்டுகள் ஓடின. பாடல்களை
கணக்கிட்டுப் பார்த்ததில் தொள்ளாயிரம் என்று
கண்டார்கள். வாய் நிறைந்த எண்ணாய் இருந்தது.
‘சேரத் தொள்ளாயிரம்' என்று பெயர் கொடுத்து
நூலைப் போற்றி வந்தார்கள்.
சேர மன்னன் பல பரிசுகளைக் கவிஞருக்கு
கொடுத்தான். மன்னனிடம் விடை பெற்றுக் கொண்டு
வஞ்சியிலிருந்து உறையூருக்குச் சென்றார்.
உறையூரில்தான் சோழ மன்னன் அப்போது
வசித்து வந்தான். சோழனைப் பற்றி தினம் தினம்
கவியொன்று பாட, அதுவும் ஒரு தொள்ளாயிரம்
ஆயிற்று.
கடைசியாக மதுரைக்குச் சென்று, பாண்டியனுடைய
பாராட்டுதலை எல்லாம் பெற்றார். அற்புதமான
கவிகளைப் பாண்டியன் மீதும் பாடினார். அவைகளும்
தொள்ளாயிரமாயின. ஆகவே, சேரன் சோழன்
பாண்டியன் இவர்கள் மீது பாடிய தொள்ளாயிரம்
தொள்ளாயிரமான மூன்று தொள்ளாயிரங்களும்
சேர்ந்து ஒரு நூலாகி, ''முத்தொள்ளாயிரம்" என்ற
பெயரோடு வழங்கி வந்தன.
கவிஞரைப் பற்றிய பெயர் தெரியாது.
ஊர் தெரியாது. காலமும் தெரியாது ஆனாலும்,
பாடல்களைப் பார்க்கும் போது, ஏதோ இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னுள்ள என்று சொல்ல
வேண்டியிருக்கிறது.
வெண்பாவில் அமைந்துள்ள எதுகைகளும்
மோனைகளும் அற்புத சுவையைக் காட்டுகின்றன.
உள்ளத்தில் கண்ட ஒவ்வொரு உண்மையும்
அற்புதமான கவியாக உருவெடுத்து ஒளி
வீசுகிறது. இந்த விதமாக இரண்டாயிரத்து எழுநூறு
பாடல்களை உதவிப் போயுள்ளார் கவிஞர்.
காலம்:-
கவிஞர் பற்றிய விரிவான விபரம், ஊர், காலமும் தெரியாது.
பாடல்களைப் பார்க்கும் போது, ஏதோ இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னுள்ளன என எண்ண
வேண்டியுள்ளது. வெண்பாவில் அமைந்துள்ள
எதுகைகளும் மோனைகளும் அபூர்வமான வைப்பைக்
காட்டுகிறது.
கவிஞருக்கு, மக்கள் இதயப் பண்பு இன்னதென்று
தெரிந்திருக்கிறது; தமிழ்ப் பண்பு இன்னதென்று
தெரிந்திருக்கிறது; எல்லாவறையும் விட,
கவிப் பண்பு இன்னதென்று தெரிந்திருக்கிறது.
உள்ளத்தில் கண்ட ஒவ்வொரு உண்மையும்,
எப்பேர்பட்ட உண்மையானலும் சரி,
அற்புதமான கவியாக உருவெடுத்து ஒளி
வீசுகிறது. இந்த விதமாக 2700 பாடல்களை
பாடியுள்ளார். சமீப காலம் வரை, அதாவது
நானூறு ஐந்நூறு வருஷங்களுக்கு முன் வரை
முத்தொள்ளாயிரத்தை சிலர் போற்றி
வந்திருக்கிறார்கள். அவர்கள் கையில்
முத்தொள்ளாயிர ஏடு இருந்தது என்பது
தெரிய வருகிறது. பிறகு ஏட்டைப்பற்றி ஒன்றும்
தெரியவில்லை.
கடைசியாக, புறத்திரட்டு எனும் நூலை
யாரோ ஒருவர் தொகுக்க நேர்ந்தது. விஷயங்களை
நாலடியார் திருக்குறள் முதலிய நூல்களில்
பாகுபாடு செய்ததது போல் வாழ்த்து, அவை
அடக்கம், நீத்தார் பெருமை, பொறையுடைமை,
அரண், கைக்கிளை[காமத்துப்பால்] என்று
அந்த அதிகாரங்களுக்கு ஒத்த செய்யுளை
யாத்துள்ளனர். அந்த ஏட்டிருந்தும் சில பாடல்களைப்
புறத்திரட்டில் ஆங்காங்கு பெய்து வைத்தார்.
நமக்குக் கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்கள்
எல்லாம் புறத்திரட்டில் பெய்துள்ளவைதான்.
அப்படி கிடைத்த பாடல்கள் 108 மேல் இல்லை.
ஆக 2700-108=2593 பாடல்கள் ஒழிந்து
போயின. அத்துனை அற்புதமான பாடல்களை-
மணிகளை இழந்தது தமிழுலகமும், தமிழரும்.
அந்த 2700 பாடல்கள் கிடைத்திருந்தால் நம்முடைய
சந்ததியரும் அனுபவித்து இருக்கலாம். இந்த
அனுபவித்திலிருந்து அரிய நூல்களையும்,
தமிழையும் வளப்படுத்தி இருக்கலாம்.
தமிழர்கள் இசையிலும், நாடகத்திலும் சிறந்து
விளங்கியவர்கள் என்று நாம் அறிந்த ஒன்று.
கோவை பிரபந்தங்களைப் பார்த்தால், எல்லாச்
செய்யுள்களும் நாடகத் துறைகளாகவே
இருந்துள்ளது. அவ்வளவு ஆர்வம், ஆசை
நாடகத்தில் நம்மவர்களுக்கு.
ஒரு நீதியைச் சொல்ல வந்த இடத்திலும் ஒரு
நாடக நிலையில் நின்று பேசுவார்கள் நம்மவர்கள்.
தோழியைப்பார்த்து நாயகி சொல்கிறதாக ஒரு பாடல்.
‘'நாயகன் ஏதோ ஒரு முக்கியமான காரியத்தில்
ஈடுபட்டுள்ளான். சரி, அப்படியானால் வர இயலாது
என்றுதானே சொல்லவேண்டும். அதை விட்டு விட்டு
இங்கே நம்மிடம் ‘மாலை வருகிறேன்' என்று
வேண்டுமென்றே பொய் சொன்னான் அல்லவா?
இந்த ஆற்றாமையை நாலடியார் செய்யுள்
ஒன்று விளக்குகிறது.
இசையா ஒரு பொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று, வையத்(து) இயற்கை; நசையழுங்கச்
சென்றோடிப் பொய்த்தல் நிறைதொடீஇ! செய்ந்நன்றி
கொன்றாரில் குற்றம் உடைத்து.
[ஆசையினால் மனஞ் சோரும்படி,தோள்
வளையங்களை ஒழுங்காய் அணிந்த தோழியே
ஒருவர் செய்த குற்றத்துக்கு மாறாகத் தீமை
விளைத்தல் போன்ற பாதகமல்லவா இது.!]
இதுபோலக் காதலனது நாட்டு வளத்தையும்
நகர வளத்தையும் சேனை வளத்தையும்
நாயகி மூலம் வெளிப்படுத்துவது, காதல்
துறையைச் சேர்ந்தது.
முத்தொள்ளாயிரத்தில் வந்துள்ள வர்ணனைகள்,
தனித்த முறையில் பார்த்தாலே மிக
அழகாய், சுவையாய் உணரலாம். காதல் துறையில்
வைத்துப் பார்க்கும் போது,
வர்ணனைகள் ஒளிப்படலம் போல்
தெளிவாக தெரிகிறது.
பாத்திரப் படைப்பில் நான்கு முக்கிய பாத்திரம்.
முதலாவது நாயகியாகிய பெண். இரண்டாவது
பெற்ற தாய்.'' ஐயோ.காதல் மோகத்தில் இருக்கும்
மகளை ஊரார் தப்பாக சொல்வார்களே! ‘'
என்று மகளைக் கண்டிக்கிற காரிய நாடகப் பாங்கு.
மூன்றாவது, நாயகியை வளர்த்தெடுத்த
செவிலித் தாயர்கள். உளவு செய்யவும்,ஆறுதல்
சொல்பவர்களாகவும் இருப்பார்கள்.
நான்காவது தோழிகள். காதல் சம்பந்தமான
எந்த விழயமாக இருந்தாலும் அவர்களிடம் மனம்
விட்டு பேசுவார்கள். உடனாகவும், தூது செல்லவும்
தயாராய் இருப்பார்கள்.
------------------------------------------------
முத்தொள்ளாயிர ஆசிரியருக்கு உலக சாஸ்திரம்
தெரிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.
கொச்சி (வஞ்சி), உறையூர், காவிரி, காஞ்சி, தஞ்சாவூர் போன்ற
நகரங்கள அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருந்து
இருக்கலாம். பாண்டி நாடு, திருநெல்வேலி, தாம்பிரபரணி
உற்பத்தியாகிற பொதிகை மலைச்சாரல்களையும்
வெகுவாக இரசித்துள்ளார்.
ஏதோ நூறு பாடல்களை வைத்துக்கொண்டு நாம்
இப்போது பேசுகிறோம். தொலைந்து போன 2600 பாடல்களையும்
பார்த்தால் அவரின் விலாசமான பார்வை பற்றி அறிய முடியும்
கவி என்று சொல்லும்போது ஏதோ ஒரு சேதியைச்
சொல்ல வந்தது போல் தோன்றும் பலருக்கு.
வேறு சிலர் அதிலுள்ள உணர்ச்சிகளை தெரிந்து
கொண்டால் போதும் என்று எண்ணலாம்.
ஆனால், உணர்ச்சியானது பாவ உருவத்தில்
வெளிப்படுகிறதா என்று முக்கியமாக கவனத்தில்
கொள்ளலாம். இந்த உருவத்தின் மூலம் கவிஞரது
உணர்ச்சி தாளங்கள் இயல்பாக உள்ளத்தில்
எழுவதை காணலாம்.
முத்தொள்ளாயிரம் என்னும் பெயரோடு நமக்குக்
கிடைத்திருக்கும் 99 பாடல்களை நாம் பாடி,
படித்து அனுபவிக்கலாம். மக்களது நேர்
அனுபவமான உணர்ச்சிகளைக் கொண்டது
முத்தொள்ளாயிரப் பாடல்கள்.
அன்பொடு,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாழ்த்துகள் ஐயா
முத்தொள்ளாயிரம் பரப்பலுக்கு நன்றி.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
வருக முனைவர் மு.இளங்கோவன் அவர்களே. தங்களின் பாராட்டுக்கு
மிக்க நன்றி. முத்தொள்ளாயிரம் அருமையான இலக்கியம்.
அன்புடன்
கிருஷ்ணன்
சிங்கை
முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்றிற்கு முறையாக இசையமைத்துள்ளேன்.
"தாயார் அடைக்க மகளிர் திறக்க..."
உங்களுக்கு அனுப்பி தருகிறேன்.
உங்கள் தமிழ்ச்சேவை வளர வாழ்த்துக்கள்.
அன்புடன்
நாஞ்சில் பீற்றர்
மெரிலாண்ட்
www.twitter/naanjil
// naanjil said...
முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்றிற்கு முறையாக இசையமைத்துள்ளேன்.
"தாயார் அடைக்க மகளிர் திறக்க..."
உங்களுக்கு அனுப்பி தருகிறேன்.
உங்கள் தமிழ்ச்சேவை வளர வாழ்த்துக்கள்.
//
அன்பிற்குரிய நாஞ்சில் பீட்டர் அவர்களே, வணக்கம்.
தாங்கள் அனுப்பித் தந்த முத்தொள்ளாயிரப் பாட்டு கேட்டு
மனமகிழ்ந்தேன்.
மிக மிக நன்றி.
அதனைப் பதிவில் ஏற்ற முயன்றும்
இயலவில்லை. ஏதோ error வருகிறது. விரைவில் சரி செய்து பதிவேற்றம் செய்கிறேன்.
நன்றி.
வணக்கம்.
கிருஷ்ணன்
சிங்கை.
Post a Comment