Monday, November 02, 2009

முத்தொள்ளாயிரம் - 3

ஒரு பெண் சேரனைக் கண்டு காதல் கொண்டுவிட்டாள்.
அவனை மணந்து வேண்டுமென்று தனியா ஆவல்
கொண்டாள். தானாகக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள
முடியுமா? முடியாது. இந்த நிலையில், தனியான ஒரு
இடத்தில் அமர்ந்து என்ன எப்படியெல்லம் செயலாம்
என்று சிந்தனை செய்கிறாள்.

தன்னந் தனியாகத் தான் இருக்கிறாள். ஆனாலும்,
தன்னை ரொம்பவும் பாராட்டி வந்த ஊரார், தன்
முன்னிலையில் நிற்பதாகப் பகல் கனவு காண்கிறாள்.
அப்படியே அவர்களிடத்தில் பேசுகிறாள்.
இந்த உருவெளித் தோற்றத்தோடு பேசுகிறதெல்லாம்,
காதல் போதையிலிருந்து உண்டாவதுதான்.

நீரும் நிழலும் போல் நீண்ட அருளுடைய
ஊரிரே! என்னை உயக்கொண்மின் ! போரிற்(கு)
உழலுங் களியானைப் பூழியர்கோக் கோதைக்(கு)
அழலும்என் நெஞ்சம் கிடந்து.

(காதல் நோயால் என் நெஞ்சு சதா கொதித்த வண்ணமாக
. ஊரிரே என்னை உயக்கொண்மின் ! )
====================================================

ஒரு பெண்ணுக்குப் பாண்டியன் மீது அபாரமான
காதல் விளைந்துவிட்டது. தண்ணீர்த் துறைக்குப்
பாண்டியன் சவாரி செய்யும் குதிரையை
நடத்திக் கொண்டு போகும் போது,
அவள் நாணத்தோடு வாசற்கதவைச் சிறிது
சாய்த்த வண்ணமாய் பார்த்தாள்.
குதிரையோடு பேசுகிறாள் - தன்னந்தனியாக
நின்றுகொண்டுதான்!

“ குதிரையே ! எதிரிகளைத் துரத்தும்போது
போர்க் களத்தில் வேகமாய்ப் பாய்வாய்;
அது சரித்தான், ஆனால், ஊருக்குள் எதிரிகள்தான்
கிடையாதே; ஒரே படியாகப் பாய்ந்து ஓடாமல்,
மெல்ல நடந்து போனால் என்ன கேடு !“

போரகத்துப் பாயுமா! பாயா(து) ஒருபடியா,
ஊரகத்து மெல்ல நடவாயோ ! - பார
மதவெங் களியானை மாறன் தன் மார்பம்
கதவங்கொண்(டு) யாமும் தொழ.

[ இந்தக் கவி பெண்ணின் கூற்று என்பது மறைவாய்
கிடக்கிறது. மார்பம் தொழ, கதவங்கொண்டு, என்னும் சொற்களை
வைத்துத்தான் காதலுற்ற பெண் பேசுகிறாள். இப்படிக் காதலை
மறைவில் வைத்து சொல்வதிலிருந்து ஒரு நாண பாவம்
இருப்பதை தெளிவாக்குகிறது ]

அவள் சோழனோடு மாலை நேரத்தில் கூடிக்
குலாவுவது வழக்கம். மாலை நேரம் வந்ததும்
நாயகனிடத்தில் ஒரே நாட்டம். நாயகன் வரக்
கொஞ்சம் தாமதம் ஆனாலும் சரி, அவளுக்கு
சங்கடம், ஏக்கம். மாலை நேரம் வந்ததைக்
காட்டும் அடையாளங்களில் ஒன்று இடைப்
பையன் பசுக்களை மேய்ச்சல் புலங்களில்
இருந்து ஊருக்கு ஓட்டிச் செல்வது.

இடைப்பையனின் புல்லாங்குழலை இதமாக
வாசித்து வருகிறான் இந்தப் புல்லாங்குழல்
இசையானது நாயகிக்கு, அந்தி நேரத்தையும்,
நாயகன் வரவில்லை என்ற ஆத்திரத்தையும்
தூண்டிவிடுகிறது.

நாயகி தனக்குள்ளே பேசிக்கொள்கிறாள்.
‘சோழன், ஏதோ நாட்டிலுள்ளவர்களுக்குத்
துன்பம் ஏற்படாமல் காக்கிறான் என்கிறார்கள்;
எனக்கொன்றும் விளங்கவில்லை, துன்பம்
செய்கிறதைத் தடுத்தால் அல்லவா பாதுகாக்கிறான்
என்று சொல்ல முடியும்.

தெண்ணீர் நறுமலர்த்தார்ச் சென்னி இளவளவன்
மண்ணகம் காவலனே என்பரால் - மண்ணகம்
காவலனே ஆனக்கால்க் காவானே - மாலைக்கண்
கோவலர்வாய் வைத்த குழல்

[தெளிந்த நீர்நிலைகளில் பூத்த செங்கழுநீர்
மலர்களை மாலையாய் தொடுத்த அணிந்த
சென்னி என்றும் இளவளவன் என்றும்
பாராட்டப்படுகிற சோழன் உலகத்தைக்
காக்கிறான் என்று சொல்லுகிறார்கள்.
கட்டளை இட்டு தடுக்க மாட்டானா
இந்த மாலைப் பொழுது வந்துவிட்டதை அறிவிக்கும்
வாய்வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலை]

இந்த கவியில் காதல் நோயினால் ஏற்படும்
பரிதாபம் இருக்கிறது. அதனூடே நகைச் சுவையும்
இருக்கிறது. பாட்டின் உருவம் பூர்வமான
கவிப்பண்பைக் காட்டுகிறது.
--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/