Monday, August 11, 2008

பொதிகை புனித யாத்திரை #4

மறுநாள் பயணம் அதிகாலை 5 மணிக்கே ஆரம்பித்து விடும்.
கருக்கலாக இருப்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில்
நடைபயணம் தொடர்ந்து விடும்.

முப்பது நிமிட பயணத்தில் கன்னிகட்டி
சிற்றாறு குறுக்கிடும். அங்கு காலைக் கடனை
முடித்துக்கொண்டு, நீண்டு வானளாவிய மரங்களை
இரசித்துக்கொண்டும், சந்தனமரங்களின் சுகந்தத்தை சுமந்து
கொண்டும்,
''குறுமுனிக்கு அரோகரா,
கும்பமுனிக்குஅரோகரா''
என்று பாடிக்கொண்டும் செல்வதால்
அகஸ்தியரின் திருவருள் கிட்டுவதுடன்,
மனமும் உடலும் உற்சாகம் பெறுகிறது.

அத்துடன் வனவிலங்களையும் விரட்டவும் உதவுகிறது.
சுமார் எட்டு மணிபோல் பேயாறு வந்தடையலாம்.
கோடைக்காலங்களிலும் இந்த ஆற்றில் நீர் நிறைந்தே ஓடும்.

இந்த ஆற்றில் குளித்துவிட்டு காலை உணவினை
முடித்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டும்.

90நிமிடநடைப்பயணத்திற்குபின் கல்லாறு
என்ற இடத்தை அடையலாம். இங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், அடுத்தஇலக்கு பயண ஆரம்பமாகும்.

அடுதத இலக்கு சங்கு மித்திரை. கல்லாற்றிலிருந்து
சங்குமித்திரை அடையும் வரை மூங்கில் காடுகள்.

இங்கு கல்தாமரை என்னும் அபூர்வ மூலிகைகளை
காணலாம். உயரமான பகுதியால் நடையில் தளிர்வும்
சோர்வும் ஏற்படும்.

90 நிமிட நடைக்குப் பின் சங்கு மித்திரை அடையலாம்.
சசங்கு மித்திரை கேரளாவின் எல்லை ஆரம்பமாகிறது. மலையாளிகள் பொங்கலப்பாறை என்று அழைப்பார்கள்.

இதன் பொருள் சமையல் செய்யுமிடம் என்பதாகும்.
இங்கிருந்து கேரளாக்குச் செல்லலாம்.
போனக்காடு நென்மன்காடு சென்று திருவனந்தப்புரத்தை
அடையலாம்.

சிறிய ஓய்வு, உண்வுக்குப்பின் சற்றே களைப்பை போக்கிக்கொண்டு பயணம்தொடரும். மீண்டும் கடுமையான பயண மலை ஏற்றம்.

வெறும் காலுடன்தான் செல்லமுடியும். அபாயகரமான
பாறைகளைக் கவனமாக கடந்து செல்லவேண்டும்.
இருபுறமும் படுபாதாளம். காற்று பலமாக வீசுவதால்
மெதுவாக ஊர்ந்தும், குனிந்தும் நடந்து செல்ல வேண்டும்.

இப்படி மெல்ல நடந்து 6125 அடி கொண்ட பொதிகை மலை உச்சிஅடையவேண்டும். பயணத்தின் போது நாகபொதிகை,
ஐந்து தலைப்பொதிகை மற்றும் இதரபொதிகை மலையின்
முழு தரிசனம் கிடைக்கும்.

இந்த இடம் கேரளா அரசுக்கு சொந்தமானது.
இங்குதான் அகஸ்தியர் சிலைகம்பீரமாக இருக்கிறது.
சிலையைக் கண்ட பக்தர் ஓடிச் சென்று அகஸ்தியர் சிலை வணங்கியும், கண்ணீர் மல்கியும், கீழே வீழ்ந்தும் புரள்வார்கள்.

நினைத்த பொழுது சென்று பார்க்க இயலாத
இடத்திலிருக்கும் இவ்விடம் ஆண்டுக்கு ஒருமுறைதான் சென்று காணமுடியும், வழிபடமுடியும்.

தற்போதுள்ள அகத்தியர் சிலை கேரள அரசுக்கு சொந்தமானது.
கேரள யாத்திரிகர்கள் சிவராத்திரிக்கு வந்து வணங்கி செல்வதுண்டு.

அகஸ்தியர் சிலைக்குப் பட்டு ஆடைகள் அணிவித்து,
வாசனை திரவியங்கள், பால்அபிஷேகம்,
தீபார்த்தினை காட்டி இரண்டு மணி நேரம் அகத்தியர் வழிபாடும், பன்னிருதிருமுறை பதிக பாடலையும் பாடியும் பிரார்த்தினைகளும் நடைபெறும்.

வானிலை ஒரு பொழுதுக்கு மறு பொழுது மாறும்.
மேகங்கள் கூடும், மழை பெய்யும். குளிர்வாட்டும்,
பின்னர் நீங்கும். மீண்டும் மேகம் கூடும்,
மழை பெய்யும் இப்படி மாறி மாறி நிகழும்.
பொதிகை மலையில் எவ்வளவு மழையில் நனைந்தாலும்,
கடுங்குளிரில் வாடினாலும் எவர் உடம்பும், உடல் நலமும் பாதிக்கப்படுவதில்லை.

இதற்கு அகத்தியர் திருவருளே என்று
இங்கு வரும் சாதுக்கள் கூறுகிறார்கள்.
பயணத்தின் போது கோடை மழை
கண்டிப்பாகப் பெய்யும்.

மழை இல்லாத பயணம் இல்லை என்றுகூறலாம.
பிரயாணத்தில் அட்டையின் பாதிப்பு தவிர்க்க இயலாது.

நம்மை அறியாது நம் இரத்ததைஉறிஞ்சிவிடும்.
இந்த அட்டைகள் நம்மைப் பற்றாது இருக்க காலில்
வேப்பெண்ணை, புகையிலை போன்றவற்றைத்
தடவிக்கொண்டால் சிறிது பாதுகாப்பு அளிக்கும்.

சிறந்தவைத்தியம் உப்பு. நீரில் கரைத்த உப்பை தடவினால்
உடன் பயன் தரும். [சமீப கால விஞ்ஞானம் இந்த அட்டை கடித்தால் அதனால் பல நோய் நீங்குகிறது என்கிறது.
சில நாடுகளில் இந்த அட்டை வைத்தியம் நடக்கிறது]

பொதிகை மலை செல்ல இரண்டு நாட்களாகும்.
பொதிகையிலிருந்து திரும்ப ஒரு நாள்போதும்.
காலை ஆறு மணிக்கு புறப்பட்டால் மாலை
காரையார் வந்து விடலாம்.

குறுமுனி அகஸ்தியார் அடியார்களுடன்
என்றும் இருக்கிறார் மனத்தளவில்.
"என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி
நல்வினைப் பயனிடை முழுமணித்
தரளங்கள் மன்னு காவிரி சூழ்
திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி
ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே."

-திருஞானசம்பந்த நாயனார்-- நிறைவு ---

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
.......................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

பொதிகை புனித யாத்திரை #3

பக்தர்கள் கல்விளக்கில் ஏற்றி வைக்கும் தீபம்,
அசையாமல் சுடர்விட்டு எரியும்.

முனிவரை தரிசித்து விட்டு இறங்கினால்,
காற்று ஆளைத் தூக்குவது போல அடிக்கும்.
சில இடங்களில் தவழ்ந்தபடிதான் இறங்க வேண்டும்.

அகத்திய முனிவரை தரிசித்து வரும் அனைவரும்
அங்கே அனுபவித்தாக ஒருமித்த குரலுடன்
சொல்வது புத்துணர்வு. அகநிறைவு.

அந்த சித்த புருஷனை தரிசித்தால்,
மனதில் மட்டுமல்ல வாழ்விலும் புத்துணர்வு பிறக்கும்.

அகஸ்தியர் கூடத்திற்கு நாம் நினைத்த
மாத்திரம் சென்று விட முடியாது.

சனவரி,பிப்ரவரி,மார்ச்,ஏப்ரல் மாதங்களில்
மட்டுமே செல்லலாம்.

அதற்கு கேரள வனத்துறைபினரின் முன்
அனுமதி பெற வேண்டும். ஒருமுறை சென்று வர
குறைந்தது மூன்று தினங்கள் தேவைப்படும்.

திருவனந்த புரத்தில் உள்ள வன வகுப்பு அலுவலகத்தில்
இருந்து இங்கு செல்வதற்கான அனுமதி சீட்டு
வழங்கப்படுகிறது.

பாண்டி பதின்நான்கு என்று அழைக்கப்படும்
பாடல் பெற்றத் தலங்களுள் திருக்குற்றாலமும் ஒன்று.
பொதிகைமலையுடன் சார்ந்த மலை, மூர்த்தி, தலம், தீர்த்தம்
மூன்றும் சிறப்புடையதாகும்.

பொதிகைமலைக்கு செல்லும் வழியில்
அகத்திய முனிவர் இங்கு வந்தார்.

*பாபநாசம் *

அடுத்துள்ள விக்கரம சிங்கபுரம் சேர்ந்த செல்லையா சிவபவனன்
என்ற இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார்.
இவர்கள் முறையாக அகஸ்தியரை
வணங்கி,பூஜைகள் செய்து அன்பர்களை அழைத்துசெல்கிறார்கள்.

திருநெல்வேலியிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவிலுள்ளது பொதிகை மலை.
உயரம் 6200 அடி.தமிழுக்கு இலக்கணம் வகுத்த தெய்வச்சித்தர் அகஸ்தியர்
இன்றும் வாழ்ந்து கொண்டுடிருப்பதாக ஐதீகம்.

பொதிகை மலை ஏக பொதிகை என்றும் கூறுவர்.
சிவபெருமான் பார்வதி திருமண கோலத்தைக்
காண வந்த அகஸ்தியர், சிவபெருமானின் உத்தரவு
பேரில் தென்பகுதியான பொதிகைக்கு
வந்ததால் இந்தமலை அகஸ்தியர் மலை
என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் இப்புனித பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

காரையார் அணை சென்று பின்னர் இந்திரப் படகில்
அக்கரை செல்ல வேண்டும். பின்னர் நடை பயணம் ஆரம்பமாகிறது.
நாம் நடக்கும் ஒவ்வொரு அடியும் பொதிகைச் சிகரத்தை
நோக்கியே செல்கிறது.

பொதிகை மலை உயரம் 6125 அடியாகும்.
வழியில் துலுக்கமொட்டை என்னும் இருக்கிறது.

இதன் உயரம் 1867 அடி. இம்மலையைக் கடந்துதான் செல்ல
வேண்டும்.சிரமான நடைப்பயண என்பதால் களைப்படைந்து
விடும்.முதல் நாள் நடை யாத்திரையில் இதுவே மிகவும் சிரமான பகுதியாகும்.

சுமார் ஒரு மணி நேர நடைக்கு பயணத்திற்கு பின்
உள்ளாறு என்ற ஆறு குறுக்கிடும். தெளிந்த நீரோடை.
மதிய உணவுக்கு பிறகு ஓய்வு . சுமார் ஒரு மணி நேர
ஓய்வுக்குப்பின்,மீண்டும் நடைப்பயணம் ஆரம்பமாகும்.

ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பின்
கன்னிகட்டி என்ற பகுதியை அடைந்து விடலாம்.
இங்கு ஆங்கிலயர்களால் கட்டப்பட்ட
வன இலாகா பங்களா உள்ளது. இன்று
நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

பங்களாவைச்சுற்றி அகழிகள் தோண்டப்பட்டு,
பங்களா செல்வதற்கு ஒரு நபர்
செல்லக்கூடிய பலகை பாதை இருக்கிறது.

இது யானைகள் வராதபடி செய்துள்ள ஏற்பாடு.

முதல் பயணத்தின் இறுதியில் இந்த பங்களாவில்
தங்கிச் செல்லாம். இரவில் விலங்குகளின்
நடமாட்டமும், அதன் சத்தங்களை கேட்கலாம்.
நேரம் செல்ல குளிர் அதிகமாக இருக்கும்.

--பயணம் தொடரும்-

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

Saturday, August 02, 2008

பொதிகை புனித யாத்திரை-2

இவை தவிர, கருமேனியாறு, நம்பியாறு,
தாமரையாறு, கோம்பையாறு, கோடையாறு,
வைப்பாறு, வாழைமலையாறு, தாழையூற்றாறு,
வடுகபட்டியாறு, அருச்சுனன் ஆறு, கோட்டைமலையாறு,
நிசேப நதி, காக்கா நதி, பாலையாறு போன்ற
பல சிற்றாறுகளும் கொண்டே நெல்லைச் சீமை.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 450 கோயில்கள்
உள்ளன.பெரியபெரிய கோயில்கள், வானுயரும்
இராஜகோபுரங்கள், பிரம்மாண்டமான் மண்டபங்கள்,
கண்கவர் சிற்பங்கள்,சுவைமிக்க தலவரலாறுகள்,
புனித தீர்த்தங்கள், தேர் திருவிழாக்கள் எல்லாம் உண்டு.


ஆயிரம் திருநாமங்கள் கொண்டு ஆராதிக்கப்படும்
ஆதி நாயகனான் சிவபெருமான், சிவலிங்த் திருமேனியாக
அருள்பாலிக்கிறார்.


''தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த்
தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
போற்றி மகிழ திருமூல லிங்கம்''

-என்கிறது திருநெல்வேலித் தல புராணம்.


வரலாற்று ஆய்வாளர்கள் கண்டு பிடிக்க முடியாதபடி
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்பவரே மகாலிங்கர்.
இந்த மூல மகாலிங்கத்தைத் தொழுவோர் மற்ற எல்லா
சிவலிங்கத் திருமேனிகளையும் தொழுத பலனைப் பெறுவர்.

ஆதி பிரளய காலத்தில், வேதங்கள் எல்லாம்
பூஜித்த வேத நாயகரே அவர்.
'ஆதிலிங்கம், திரிகண்டலிங்கம்,
தருமலிங்கம், கெளரிலிங்கம், நிர்குணலிங்கம்,
சகுண கற்பக மகாலிங்கம், கெளரி கல்யாண லிங்கம்,
வளர்ந்த மகாலிங்கம், மூல மகாலிங்கம்
என்று திருநாமங்களைக் கொண்டு திகழ்கிறார்.

குற்றாலம் ஐந்தாயிரம் அடி உயரம் கொண்ட
மலையின் அடிவார்த்தில், குற்றால அருவிக்கு நேராக,
சங்கு வடிவனாக அமைந்திட்ட கோயில்.

ஆடவல்லானின் ஐந்து சபைகளில் இது 'சித்திர சபை.

''கிளைகளாய்க் கிளைத்த பல கொப்பு எலாம் சதுர்வேதம்,
கிளைகள் ஈன்ற களை எலாம் சிவலிங்கம்
கனி எலாம் சிவலிங்கம், வித்து எலாம் சிவலிங்கம்
சொரூபமாக விளையும் ஒரு குறும்பலாவின்
முளைத்து எழுந்த சிவக்கொழுந்தை வேண்டுவோமே''

கோயில் வாசலை ஒரு சிறிய கோபுரம் அழகு செய்கிறது.
உள்ளே திரிகூட மண்டபம் அடுத்து நமஸ்கார மண்டபம்,
மணி மண்டபம் எல்லாம் உண்டு.

அகத்திய முனிவர்,ஈசனின் கட்டளையை ஏற்று,
தென்புலத்திற்கு வருகிறார். இங்குள்ள குற்றாலநாதர்
கோயில் வைணவ ஆலயமாக இருந்திருக்கிறது.
சிவக்கோலத்தில் இருந்த அவரை உள்ளே அனுமதிக்கவில்லை
அர்ச்சகர்.

மனமுடைந்த குறுமுனி, இலஞ்சிக் குமரனை தொழுந்தார்.
குமரன் காட்டிய வழியில் மீண்டும் வருகிறார் குற்றாலத்திற்கு.
உடல் முழுதும் 'திருமண்' தரித்து வைணவ அடியாராக,
உள்ளே சென்று 'ஆத்மார்த்த பூஜை' செய்வதாகக் கூறி,
எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு,
கதவை சார்த்திக் கொண்டார்.

--------பயணம் தொடரும்---------
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore