Wednesday, July 16, 2008

பொதிகை புனித யாத்திரை #1

தென் காஞ்சி கோட்டம் என அழைக்கப்படும்
'திககெல்லாம் புகழும் திருநெல்வேலி' எனும்
திருத்தலத்தினை மையமாகக் கொண்ட
தென் பாண்டிச்சீமை இது.

இம்மாவட்டத்தின் மக்களுக்கு பல பெருமை உண்டு.
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை
தமிழே ஓடுகிறது என்பர்.

தஞ்சை மாவட்டத்தாருக்கு இசை எப்படி உயிரோ,
அதுபோல நெல்லைச் சீமைக்காரர்களக்கு இலக்கியம்.
ரசிகமணி டி.கே.சி.யின் 'கம்பர் தரும் காட்சி'
அப்படியே மனக்கண்முன் வருகிறது.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை 'மனோன்மணீயம்'
என்ற ஒப்பற்ற நாடக நூலை ஆக்கினார்.
அதில் சீவகபாண்டியன், மதுரையின் நீங்கி
திருநெல்வேலியை தலை நகராக்கிச் சில காலம்
அரசாண்டு வந்ததாகக் கூறியுள்ளார்கள்.

நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டபோது,
நெல்லை மாவட்டத்தினர் பலர் திசைக் காவலர்களாக
அமர்த்தப்பட்டனர். ஆயுதம் தாங்கிய படையை
உடையவர்களானதால் 'பாளையக்கார்கள்' என்றும்
அழைக்கப்பட்டனர்.

வடகரை, ஆவுடையாள்புரம், ஊத்துமலை,
சிவகிரி, சிங்கம்பட்டி, அளகாபுரி, ஊர்க்காடு,
சுரண்டை, கடம்பூர், இளவரசனேந்தல்,மணியாச்சி,
பாஞ்சாலங்குறிச்சி முதலியன அத்தகைய பாளையப்Àட்டுகள் ஆகும்.

அப்படி வந்ததே பாளையங்கோட்டையும்.
நெல்லை மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை வடமேற்கு எல்லையில் துவங்கி,
நேர்தெற்காக தென்காசிக்கருகே ஒரு சிறு வளைவாகித்
தண்பொருளைப் பள்ளத்தாக்குடன் கூடிய பாவநாசம்
வரை செல்கிறது. பின் தென்கிழக்காகத் திரும்புகிறது.
மிகத் தொலைவிலுள்ள எந்த சமவெளியிலிருந்து
பார்த்தாலும் இந்த மலைத் தொடரில பல முடிகளைக் காணலாம்.

சுமார் ஐயாயிரம் அடி உயரமுள்ள, இருபதுமுடிகள்
இந்த எல்லையில் உள்ள சிவகிரியில் துவங்கி,
கள்ளக்கடை, மொட்டை, கோட்டைமலை, குளிராட்டி,
குற்றாலத்திற்கு அருகில் உள்ள பஞ்சம்தாங்கி,
அம்பாசமுத்திர எல்லையில் மத்தானம்,
பாறை பாவநாசம் அருகில் அகத்தியர் மலை,
அதற்குத் தெற்கில் ஐந்து தலைகள் கொண்ட,
ஐந்தலைப்பொதிகை, திருக்குறுங் குடியையொட்டி மகேந்திரகிரி,
பணகுடி கணவாய்க்குத் தென்கிழக்கே 'ஆரல்-ஆம்-பொழில்'
இன்று ஆரல்வாய் மொழி என அழைக்கபப்டும் எல்லை வரை.

நெல்லை மாவட்டத்தின் பேராறு தான் 'தாமிரபரணி'
என அழைக்கப்படும் 'தன்பொருணை' ஆறு.

பொதிகை முழுவதும் மலையில் தோன்றி மாவட்டம்
முழுவதும் வளப்படுத்துகிறது. தன்பொருணையுடன் சேரும் ஆறுகள்
எண்ணற்றவை. பாம்பாறு காரியாறு, ஐந்தும் மலையில் தோன்றி மலை மேலேயே பொருணையோடு சேருபவை.

சிங்கம்பட்டிக்கு அருகில் மணிமுத்தாறும்,
செங்கல் தேரிச் சோலையில் தோன்றும் வரட்டாறும்
கூசன்குழி ஆறும் சிற்றாறுகளாகும்.
கடையம் அருகில் கீழைச்சரிவில் தோன்றுவது,
சம்புநதி, கடையத்திற்கு தெற்கே
ஓடுவது ராமநதி.

இவை இரண்டும் சேர்ந்து கருணை ரவண
சமுத்திரம் அருகில் சேர்கிறது. இரண்டும் சேர்ந்து
கருணை ஆற்றோடு, வராகநதி சேருவது
திருப்புடை மருதூரில்.

களக்காட்டு மலையான வெள்ளிமலையில்
தோன்றுவது 'பச்சையாறு', 'தருவை'
என்ற இடத்தில் பேராற்றில் கலக்கிறது.

சீவலப்பேரில் வந்து கூடுவது சிற்றாறு.
இது குற்றால மலையாகிய திரிகூட மலையில்
தோன்றி குற்றாலம், தென்காசி, கங்கை கொண்டான் வழியே
அறுபது கி.மீ. ஓடிப் பாய்கிறது.

பண்புளி மலையில் தோன்றும் அநுமநதியும்,
சொக்கம்பட்டி மலையில் தோன்றும் கருப்பாறும்
வீரகேரளம்தூர் அருகில் சிற்றாறில் சேர்கின்றன.

மத்தளம் பாறையிலிருந்து வரும்அமுதக்கண்ணியாறும்,
ஐந்தருவியாறும் சிற்றாரோடு சேர்கிறது.
சிந்தாமணிக்கு அருகில் தோன்றும் உப்போடை,
சீவலப்பேரி அருகில் சிற்றாறில் கூடுகிறது.

உப்போடை, சிற்றாறு, பேராறு மூன்றும்
கூடும் இடமே முக்கூடல். தென்காசிக்கு மேற்கே
ஒரு முக்கூடலும், திருப்புடைமருதூர்
அருகில் ஒரு முக்கூடலும் உண்டு.

தண்பொருணையாறு அம்பாசமுத்திரம் சேரன் மகாதேவி,
திருநெல்வேலி வழியாகப் பாய்ந்து கொற்கை
அருகில் கடலில் சேருகிறது.

-----------பயணம் தொடரும் ----------

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark

Sunday, July 13, 2008

சதுரகிரி யாத்திரை #8 (நிறைவு)








நம்மைச் சுற்றிய உலகம் நம் கண்ணில் பிரதானமாக விழுந்தும் விழாமலும் போன்று நூற்றுக்கணக்கான உயிர் இயக்கங்கள் கொண்டது. இதில் பெரும் பகுதி நாம் அறிந்ததே இல்லை. அதிலும் மலை வாழ்விடங்களுக்குச் செல்லும்போது அங்கே நாம் காண நினைப்பது யாவும் புல்வெளியும் நீர்நிலையும்உணவங்களும்தான்.
மாறாக மலை வாழ்விடங்களில்தான் முன் அறிந்திராத
அதிகமான பூக்கள், செடிகள், மூலிகைகள், பறவைகள்
மற்றும் சிறு உயிர்கள் அதிகமிருக்கின்றன.
அவற்றை நாம் காண அக்கறை கொள்வதே இல்லை.
ரோஜாவிற்கு தரும் முக்கியத்துவத்தை வேப்பம்பூவுக்கு
தருவதில்லை. ஆனால், ரோஜா அளவிற்கு வேப்பம்பூவும்
தனித்துவமானது. மலை கற்றுக் கொடுப்பது எவ்வளவோ இருக்கிறது.
ஆனால், நாம் கற்றுக் கொள்வது மிக குறைவானதே.
காடுகளில் நமக்கு பெயர் தெரியாத மரங்களும்,
செடிகளும் இருக்கிறது. இது நமது காடுகளைப் பற்றிய
அறிவின்மைதான் காட்டுகிறது. பூக்களை புகைப்படம்
எடுப்பதில் உள்ள ஆர்வம் ''அது என்ன பூ'' என்று
அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம், நாட்டமில்லை.
காட்டில் ஏராளமான பூக்கள், மருத்துவ செடிகள்,
மூலிகை இருக்கிறது. காலில் மிதிப்பட்டு நசுங்கும்
மூலிகை எத்தனையே?எங்களின் சதுரகிரி
மலை பயணத்தின் போது உடன் வந்த அன்பர் சிவா
ஒரு இடத்தில் நின்று பாதையோரம் இருந்த ஒரு
செடியில் மிளகுபோல் கொத்து கொத்தாய்க் காய்ந்திருந்த
பழத்தினை பறித்து சாப்பிடும்படி கூறினார்.
அதன் மருத்துவ குணத்தினை கூறிய போது
வியந்தோம். இரத்த நாளங்களில் ஏற்படும்
அடைப்புகளை இந்த பிச்சிபழம் நீக்கும் என்றார்.
முறிந்த எலும்பை ஒட்டவைக்கும் மூலிகை
இலைப்பற்றி கூறும்போது மூக்கில் விரலை
வைத்து வியக்கவேண்டியுள்ளது.
ஒரு பச்சிலை காட்டி, இது புண் அல்லது
காயங்களுக்கு உகந்த பச்சிலைஎன்றார்.
உடனே ரணம் காயும் என்றார்.
ஆனால், பச்சிலையை பார்த்து உபயோக்கி வேண்டும்.
பச்சிலையின் மேல்பாகத்தைக் காயத்தில், புண்ணில்,
ரணத்தில் வைத்து கட்டவேண்டும்.
தவறாக தலை கீழாக வைத்துக் கட்டினால் காயம்,
புண் மேசமாகி பெரிதாகி விடும்; ரணமாகிவிடும்.
மலைவாசி காரணமில்லாமல் எந்தச் செடிகளையும்,
பூக்களையும் பறித்து விரயம் செய்வதில்லை.
அந்தச் செடிகளை, பூக்களை அறிந்திருக்கிறான்.
அதன் மேன்மையும் மருத்துவமும் அவனுக்குப்
புரிந்திருக்கிறது. நாம் பூக்களை வெறும் வணிகமாகவும்
அழகியல் பொருளாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறோம்.
வாகன இரைச்சலாலும் நெருக்கடியான வாழ்வுச்
சுமைகளாலும் நகரில் இயற்கையான சப்தங்களை,
சுகந்தத்தை, நெருக்கத்தை இழந்துவிட்டோம்.
காட்டை அறிந்து கொள்ள பயணிக்கும் போது
கண்ணையும் காதையும் மனதையும் திறந்து
வைத்திருக்கவேண்டும்.
காடு ஒவ்வொரு நிமிடமும் கற்றுத் தருகிறது.
நேற்றுப் பார்த்த சூரியன், மேகம், நேற்றுப் பார்த்த
குளிர் இன்றில்லை.
ஒவ்வொரு நிமிடமும் காடு மாறிக்கொண்டே இருக்கிறது.
அதை உணர்ந்து கொள்வதும் நம் கையில்இருக்கிறது.
சதுரகிரிக்கு ஒரு டூர் போய் வாருங்கள்.
தக்க ஏற்பாடுகளை முன்னமே செய்து கொள்ளுங்கள்.
விஷயமறிந்த அன்பர்களின்/தெரிந்தவர்களின் ஆலோசனை நாடி,
அறிந்து பயணம் மேற்கொள்ளவும்.
நல்ல, சுகந்த அனுவங்களைப் பெறுங்கள்.
''நம்மோடு பயணித்தமைக்கு நன்றிங்க''.
நிறைவு.
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Saturday, July 12, 2008

சதுரகிரி யாத்திரை #7

நாங்கள் சென்ற நேரம் கத்திரி வெயில் காலம்.
ஆகையால் கூட்டம் அதிகமில்லை.
ஆகையால் சற்று தாராளமாக இறங்கினோம்.
வேதங்கள் போற்றும் சிவமூர்த்தி இறைவன் சுந்தரலிங்கம்,
மகாலிங்கம், இராசலிங்கம், சிந்தனலிங்கம் என்னும்
நான்கு திருமேனிகளைக் கொண்டு இச்சதுரகிரி மலையில் எழுந்தருளியிருக்கிறார்.

பொதிகை மலையிலிருந்து மூலிகை
வளம் காண வந்த அகத்தியரால்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டு,
தமது திருமணக் காட்சியை அவருக்குத்
தந்தருளியவர் சுந்தரமகாலிங்கர்.

உமையொரு பாகராக அர்த்த நாரீஸ்வரர்
என்னும் பெயரில் எழுந்தருளும்
பொருட்டு உமையவளால் சந்தனமரத்தடியில்
பிரதிஷ்டை செய்யப்பட்டு பூசிக்கப்பட்டிருக்கும்
சந்தன மகாலிங்கர். பச்சைமால் என்னும்
ஆயர்குல முதல்வனுக்காகக் காட்சி தந்து
லிங்கவடிவாய் எழுந்தருயிருப்பவர் மகாலிங்கர்.

மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கங்களாகும்.
ஆனந்த சுந்தரம் என்னும் வணிகனுக்கும்
அவனது துணைவி ஆண்டாள் அம்மாளுக்கும்
சங்கரநாராயணராகக் காட்சி தந்து எழுந்தருளும்
பொருட்டு அருள் வடிவாய் விளங்கும் மூர்த்தி
இரட்டை லிங்கர்.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக
வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில்
வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும்,
ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும்,
மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும்
இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும்
காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள்
தீர்கின்றன.

கடந்த எனது சதுரகிரி பயண குறிப்பில் நானும் முருகேஷன் சிவாவும் கடைசியாக வந்தாக குறித்து இருந்தேன்.
எங்களின்உரையாடலில் சித்தர்கள் மட்டுமல்ல,
மூலிகை பற்றியும் இருந்தது. பல அற்புத மூலிகைகளில்
முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலைப்பற்றியும்
கூறினார்.

முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி,
இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால்
அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும் என்பதை விளக்கினார்.
சதுரகிரி மலையும் இதற்கு விதிவிலக்கன்று.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும்,
சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள்,
மூலிகைகள், இலைகள் இம்மலையில்மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற
அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று
குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு.
மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின்
மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர்
தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்'
என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல்
காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது.
இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை
மருத்தாகப் பயன்படுத்தவேண்டும்.
மலைமீது போக சில வரைமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.

சேங் கொட்டை, தில்லை, தும்புலா போன்ற மருத்துவ
குணம் கொண்ட மரங்களில் பூ பூக்கும் காலங்களில்போகக்கூடாது.
காரணம், இப்பூக்கள் மிகவும் வீரியமுள்ள நச்சுத்தன்மை கொண்டவை என்பதால், அவற்றின் மேல்பட்டுவரும் காற்றைச் சுவாசிப்பதால் மயக்கம் உண்டாகலாம்.

சில, பல சமய்ங்களில் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும்.
அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும்.

விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும்
அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன்
கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.
இடையில் மழை, காற்றினால் மரத்தை
விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல்
தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் பல போலி சாமியார்கள்
பெண்களை மிகவும் சுலபமாக ஏமாற்றி
வசியம் செய்து அவர்களை வசப்படுத்திக்
கொள்வதை தினம் தினம் கேள்விப்பட்டு
இருப்பீர்கள்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து
எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும்
மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை
விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது
ஆட்கள் போர் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும்.

அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு.
இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும்.
வெட்டினால் பால் கொட்டும்.

நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின்
பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Thursday, July 10, 2008

சதுரகிரி யாத்திரை #6

சுந்தரமாக லிங்க, மகா லிங்க மலையில் காலை
பத்து மணிக்கும், மாலை நான்கு மணி, மற்றும் ஆறு மணிக்கு
பூஜைகள் நடைபெறுகிறது.

மகாலிங்க மலை ஆலயத்தில்
மூலஸ்தானம் சுயம்புலிங்கம்.

லிங்கம் சற்று சாய்ந்தநிலையில் இருப்பதைக் காணலாம்.
இது குறித்த விபரம் கேட்டபோது, அறிந்த கதையைத்தான் சொல்லப்பட்டது.

புற்றின் மீது பசு பால் சுரந்த செய்தி.
புற்றின் மீது பால் சுரந்த போது பசுவை அடித்து இழுத்த போது
அதன் கால் சிவ லிங்கத்தின் பட்டு சுயம்பு லிங்கம் சற்று சரிந்ததுடன் லிங்கத்திலிருந்து இரத்தம் பீறியிட்டு வந்துள்ளது.

அபிஷேகத்தின் போது இந்த வடுவினை
(பசுவின் குளம்பு) தெரிகிறது. நிறைய பலாமரங்கள்,
மாமரங்களை கோவிலைச் சுற்றி இருப்பதைக் காணலாம்.

பலாமரங்களில் நிறைய பலாக்கள், பழுத்த
பலாப்பழங்கள் இருக்கின்றன. மரநிழலின் கீழ் அமர்ந்து
அண்ணாந்து பார்த்து இரசித்த போது
பாரதிதாசனின் ''கோரிக்கையற்று கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா'' என்ற வரிகள்தான்
நினைவுக்கு வந்தது.

*சிவ சித்தர் குடிகொண்டிருக்கும் புண்ணிய
கங்கை ஊற்றுக் கிணறு* புனித கங்கை ஊற்று.
இந்த ஊற்றில் இருந்து காலங்காலமாக தீர்த்தம்
எடுத்து எல்லாம் வல்ல, சித்தர்களுக்கு சித்தன்,
எம்பிரான் சுந்தர மகாலிங்கத்திற்கும்,
சுந்தர மூர்த்திக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த புண்ணிய ஊற்றில் சிவனும், சித்தர்களும்
குடிகொண்டு இருப்பதால் இந்தநீர் மருத்துவ குணமும்,
புனிதத் தன்மையும், மகத்துவமும் கொண்டது.

இந்த நீரைப் பருகுவதால் உடல் பிணியும்,
மன நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
இந்த நீரை வீடு, தொழில் நடைபெறும் இடங்களில்
தெளிப்பதால் எல்லா தோஷங்களும் தீரும்.
இந்த புண்ணிய நீரைஎல்லோரும் பருகி உடல்,
மன ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஊற்றை ஆழப்படுத்தி,
செம்மைப்படுத்தி நீரை நிலைத் தொட்டியில்
தேக்கி மலை முழுவதும் குழாய் மூலமாக
எல்லோருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காலை 10.45 புறப்பட்ட நாங்கள், மாலை 4.15 தான்
மலையை அடைந்தோம். ஏறக்குறைய ஐந்துமணி
நேரப்பயணம். ஒரு மணி நேரத்தில் ஏறி வரும்
அன்பர்களும் உண்டு.

அன்றாடும் செல்லும் அன்பர்கள்,
சுமை தூக்கும் மலைவாசிகள் ஒரு மணி
நேரத்தில் ஏறிவிடுவார்களாம்.

நண்பர் திரு.தணுஷ்கோடி இரவு உணவுக்கு
மடத்தில் ஏற்பாடு செய்து இருந்ததால்
மடத்தில் அருமையான இரவு உணவு
படைத்தார்கள். காலத்தால் செய்த உதவி
ஞாலத்திலும் மானப்பெரிது என்பார்கள்.

உண்மைதான். இரண்டு பெரியல், சாம்பார்,
இரசம் பெரிய விருந்துக்கு சமம்.
நாங்கள் அன்றிரவு தங்கி மடத்தில் தங்கினோம்.
உடல் களைப்பு, அசதி.

சாதாரண தரையில் படுத்த ஞாபகம்.
மற்றவைதெரியாது அதிகாலை வரை.
உறங்குவது போலும் சாக்காடு,
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
அனுபவ உண்மை. மறுநாள் காலை பூஜையில்
கலந்து கொண்டு, மதிய உணவையும்
முடித்துக்கொண்டு சுமார்பதினொரு
மணிபோல் இறங்கத் தொடங்கினோம்.

ஏறுவதில் ஒரு வகை சிரமம் இருந்தது போல்
இறங்குவதிலும், வேறு வகை சிரமம் இருந்தது.
FallingForce எனப்படும் கீழ் நோக்கி தள்ளப்படும்
சிரமம் இருந்தது. ஆகவே, கையில் ஒரு கோலுடன்
ஊன்றிய வண்ணம் இறங்கினோம்.

ஏறும் போது சுமார் ஐந்து மணி நேரமாகியது,
இறங்கும் போது சுமார் 3 மணிநேரமாகியது.
அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷ காலங்களில்
அதிகமான பக்தர்கள் கூட்டம் இருக்கும்
என்கிறார்கள். நடைப்பாதை நிறைந்து இருக்கும்.
மலை மேலேறும் பக்தர்கள், கீழிருக்கும் பக்தர்கள்
என மலையே அதிரும் என்கிறார்கள் உடன் வந்த அன்பர்கள்.
நாங்கள் சென்ற நேரம் கத்திரி வெயில் காலம்.
ஆகையால் கூட்டம் அதிகமில்லை.
ஆகையால் சற்று சாவகாசமாக - தாராளமாக இறங்கினோம்.--

அன்பொடு,
கிருஷ்ணன்
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Monday, July 07, 2008

சதுரகிரி யாத்திரை #5


கருப்பண்ண சாமி சன்னதிக்கு அடுத்து ஒரு மரத்தடியில் வன பேச்சியம்மன் அம்மன். அதனைத் தொடர்ந்து வரும் ஆலயம் *ஆசீர்வாத விநாயகர்.*


இங்கு நாங்கள் கொண்டு சென்ற இளநீர் மற்றும் அபிஷேகப் பொருட்களை கொடுத்து எங்கள் பயணம் விக்கனமின்றி நல்லபடி நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.


பொதுவாக விநாயகர் தும்பிக்கை, இடம்
அல்லது வலமாக இருக்கும். ஆனால் இங்கு விநாயகர் தும்பிக்கை சதுரகிரி மலையை நோக்கி இருந்தது.

*ஆசீர்வாத விநாயகர்* ஆலயத்தை அடுத்து இருப்பது *ஸ்ரீ இராஜயோக தங்க காளியம்மன்*ஆலயம். அன்னையின் ஆசி பெற்று எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

*தபசுக்குகையை* நெருங்கியதும் சித்தர் பெருமான்களை மனதில் வேண்டிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
நடைப்பயணத்தின் போது இயற்கை அழகு
மனதுக்கு இதமாக இருந்தது.

சலசலத்துபாறையின் ஊடே ஓடும் ஓடை,
கானகத்தின் குளிர்ச்சி நமக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
சுமார் ஒருமணி நேர நடைப் பயணத்திற்குப் பின்
நம்மை சுற்றிலும் நாலாபுறமும் மலைகள்தான்.

அம்மலைகளுக்கு நடுவில் எங்கள் பயணம்
தொடர்ந்தது. போகிற பாதை வலது பக்கம் திரும்புதல்,
இடது பக்கம் திரும்புதல், மேடு, பள்ளம் எனக் காணப்பட்டாலும்
அங்கிருந்து அனைத்து மலைகளையும் கடந்துதான்
சென்றுள்ளோம் என்ற விஷயம், நாங்கள்கீழே இறங்கிவந்த
போது உணர்ந்தோம். போகப் போக பாதையும், பயணமும் நீண்டு கொண்டுதான் இருந்ததே தவிர, மலை உச்சி வந்த பாடிலில்லை.

"...புல்வரம்பாய பல்துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாததோர் பொருளது கருதலும்
ஆறுகோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின..."
....போற்றித் திருவகவல்: திருவாசகம்


"தெய்வத்ததேடி அடைவதே' என்ற எண்ணம் வந்து,
பரம்பொருளைத் தேடும்போது, ஆறுகோடி மாயாசக்தி
எனக்கெதிராக படை திரட்டு கின்றனவே
எனக்கெதிராக படைதிரட்டுகின்றனவே என்கிறார் மாணிக்கவாசகர்.
அந்த நிலைதான் எனது நிலை.

செங்குத்தான பாறையின் மீது மூச்சை தம்கட்டி ஏறும்போது
உடலும், காலும் சோர்ந்து விடுகிறது.

இன்னும் எவ்வளவு என்று ஆதங்கத்தில் கேட்டால்,
உடன் வந்தஅன்பர்கள் சலிக்காமல் 'இதோ வந்துவிட்டது,
அந்த வளைவைத் தாண்டிவிட்டால்...,
அவ்வளவுதான் இடம்வந்துவிடும்'' என்பார்கள்.

அது நம்மை சோர்வடையாமல் இருக்க உற்சாகம்
மூட்டுவது. இப்படிப் பல முறை சொல்லி வந்த
நண்பர்களுக்கு நானும் ஒரு கதை கூறினேன்.
பட்டணத்து ஆசாமி ஒருவர் கிராமத்திற்குச்
செல்ல பேருந்தை விட்டு இறங்கி
அங்கிருந்து கிராமத்து ஆளிடம்
கிராமத்துப் பெயரை கூறி எவ்வளவு
தூரமப்பா என்று கேட்டிருக்கிறான்.

கிராமத்தான் பக்கந்தானுங்க, கூப்பிடும்தூரம்தான்.
ஒரு கி.மீ. துரம்தாங்க இருக்கும், எனக்கும் அந்த கிராமம்தாங்க என்றுகூறியவாறு பேசிக்கொண்டேநடந்துள்ளார்கள்.
நீண்ட தூரம் நடந்தும் கிராமம் வரவில்லை.
பட்டணத்து ஆசாமி, என்னப்பா பக்கம், கூப்பிடும் தூரமின்னு
சொன்ன இன்னும் கிராமமே தெரியவில்லை என்று கேட்டான்.

அதற்கு அந்த கிராமத்தான் ''அய்யா, நான் கூப்பிட்டாலே
ஒன்னறை கி.மீட்டர் வரை கேட்கும் என்றானாம்.
நண்பர்கள் சிரித்துக்கொண்டு இதே வந்துவிட்டோம்
என்றார்கள். உண்மையில் இடைவேளை,
சாப்பாட்டு வேளைவந்துவிட்டது.

கோரக்கர் சித்தர் குகை
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

Saturday, July 05, 2008

சதுரகிரி யாத்திரை #4









சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்
சதுரகிரி செல்ல எண்ணி இராஜபாளையத்திலிருக்கும்
நண்பர் திரு. தணுஷ்கோடி அவர்களுக்குப் போன் போட்டு
சதுரகிரிப் பயணம் குறித்த செய்தி கூறினேன்.

அவரும்வாருங்கள் நானும் வருகிறேன், செல்வோம் என்றார்.
குறிப்பிட்டபடி, குறித்த நாளில் திரு.தணுஷ்கோடியை
இராஜபாளையத்தில் சந்தித்தேன். மறுநாள் செல்வதற்கு ஏற்பாடுகளை செய்துவிட்டதாகக் கூறி, இன்று ஓய்வுஎடுத்துக்கொள்ளுங்கள்
என்று கூறினார். ஆனால்.அன்றுமதியமே வானம் இருண்டு இலேசமாக தூறல் ஆரம்பித்துவிட்டது. மாலைக்குள் மழை விட்டுவிடும் என்றிருந்த
எங்களுக்குச் சோதனையாக மழை தொடர்ந்து பெய்தது.

மறுநாளும் தொடர்ந்து மழை.

இப்படித் தொடர்ந்து மழை பெய்ததால் திரு.தணுஷ்கோடி
'இந்த மழையில் செல்ல இயலாது.
பாதைகள் ஈரமாகவும், வழுக்கலாகவும் இருக்கும்.
பயணத்தை ஒத்திவைக்கலாம் என்றார்.

அந்த ஒத்திவைப்பு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப்
பின் 25-6-2008 அன்றுநிறைவேறியது.

இம்முறை சிங்கப்பூரிலிருந்து திரு,மணியம்,
திரு.வி.ஆர்.பி.மாணிக்கம், ஈரோடிலிருந்து
திரு.திருநாவுக்கரசுடன் நண்பர்.

திரு.தணுஷ் கோடி, திரு.முருகேசன் சிவா
மற்றும் உள்ளூர் நண்பர்கள் என பத்து பேர்
சதுரகிரி யாத்திரையை தொடங்கினோம்.

நண்பர் திரு.தணுஷ்கோடி மதிய உணவுவை
வீட்டிலேயே தயாரித்து கொண்டு வந்தார்.
உடன் இரவு உணவுக்கு அரிசியையும்
கொண்டு வந்திருந்தார்.

மேலும் பூஜைக்குரிய பொருட்களும், தேங்காய்,
இளநீரும், பழங்களை ஸ்ரீவில்லிபுத்தூரிலும்
வாங்கிக்கொண்டோம். இராஜபாளையம்,
ஸ்ரீ வில்லிபுத்தூலிருந்து கிருஷ்ணன் கோயில்,
வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை வந்துசேர்ந்தோம்.
தாணிப்பாறையில் ஏற்கனவே சொல்லி வைத்திருந்த
இரண்டு சுமைகள் தூக்கும்மலையினர்
எங்களின் சுமைகளைத் தூக்கிகொண்டு புறப்பட தாணிப் பாறை மலையடிவாரத்து நுழைவுப் பாதைமுன்பு நின்று,
சித்தர்களையும் ஸ்ரீ மகாலிங்க சுவாமியை
மனதில் தியானித்துக் கொண்டு சதுர மலை மீது
ஏறத்தொடங்கும்போது காலை மணி 10.45.

மலைப்பகுதி வனங்களில் மரங்கள் நிறைத்திருப்பதால்,
மலை நடைப்பாதை நிழலில்பயணத்தை தொடர்ந்தோம்.
வழி நெடுகிலும் ஒரே ஏற்ற இறக்கமாக இருந்தது.
மலை உச்சிக்குச் செல்ல பிரதான பாதைகளோ
படிக்கட்டுகளோ கிடையாது.

குண்டுப் பாறைகள் மீது ஏறித்தான்
போக வேண்டும். சில இடங்களில் சமதளமான இடம் வரும்.
பிறகு மீண்டும் உயரமான பாறை. செல்லும் பாதை
மாறி விடாமல் இருக்க, அம்புக்குறியிட்டு
அடையாளம் காட்டப்பட்டு இருந்தது.

பயணத்தின் முதல் ஆலயமாக இருந்தது
*கருப்பண்ண சாமி* கோயில்.
சிறிய கோயில். நாங்கள் கருப்பண்ணர் சந்நிதி
கடக்கும் சமயம் அங்கு ஒரு குடும்பம் கருப்பண்ண
சாமிக்குப் பொங்கல் வைத்து சாமிகும்பிட்டுக்
கொண்டு இருந்தார்.

இரண்டு ஆடுகள் கழுத்தில் மாலையுடன் நின்று
கொண்டு இருந்தது. எந்த நிமிடமும்
வெட்டுவதற்குத் தயாராக இருந்தது.
அந்தக் காட்சியை நாங்கள் காண விரும்பவில்லை.
விரைவாக அவ்விடத்தினை விட்டு நகர்ந்து விட்டோம்.

(தொடரும்)
அன்பொடு
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

Thursday, July 03, 2008

சதுரகிரி யாத்திரை #3






அந்த வணிகனுக்காக தாம் உருவாக்கிய
வகாரத் தைலம் மேலும் மேலும் பொங்கி
வழிந்து கொண்டிருப்பதைப்
பார்த்தார் காலாங்கி நாதர் சித்தர்.

பூமியின் கீழ் ஒரு கற்கிணறு ஒன்றைக்
கொண்டு மூடிவிட்டார். துஷ்டர்கள்,பேராசைக்காரர்,
வீணர்களிடம் போய் சேர்ந்துவிடக் கூடாது
என்பதற்காக அதனைக் காக்க வேண்டி,
தைலக் கிணறு இருக்கிற சுந்தர் மகாலிங்க சுவாமி
இடத்தில் நான்கு திசைகளிலும் காவல் தெய்வத்தை
நியமித்துவிட்டு தவநிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.

சதுரகிரியில் தீர்த்தங்கள்

சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில்
'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர
தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி
ஒரு முறை நீராடினால் கொலை,
காமம், குருத்துரோகம் போன்ற
பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி
புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது
இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த
நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும்,
ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட,
ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து
ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில்
விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை
முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு.
இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும்
தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும்
உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற
இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து
வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்கம தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. உமையாள்
பிருங்க முனிவர் தம்மை வணங்காமல்
ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின்
காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து,
அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி
கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு
வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு
வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால்,
எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின்
பணிப்பெண்களான சப்த கன்னியர்கள்
தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய
'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட
'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி
முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர்,
போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட
'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்'
போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஆலயங்கள்.

கருப்பணசுவாமி கோயில், ஸ்ரீ ராஜயோக தங்கக்
காளியம்மன் ஆலயம், கணபதி சாயை,
இரட்டைலிங்கம் ஆலயம், ஓப்பிலாசாயை, பலாவடி கருப்பசாமி,
சுந்தரர் கோயில், சந்தன மகாலிங்கம் கோயில்
சந்தன மகாலிங்கம், சுந்தரலிங்கர் சன்னதி,
ஆனந்தவல்லியம்மை கோயில், பைரவ மூர்த்தி, காளியம்மை,
பேச்சியமை, கன்னிமார் கோயில், வெள்ளைப் பிள்ளையார் கோயில்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,
Singapore
For your Book Mark

சதுரகிரி யாத்திரை # 2

சதுரகிரி நுழைவாயில்:






இம்மலையின் மூலிகைகள் தவத்தியானம்
புரிந்து வருகின்ற முனிவர்களும், சித்தர்களும் பெறுவதற்கும், உலக வசியம், மோகனம்,
தம்பணம், பேதனம், மரணம், உச்சாடனம், வித்துவேடணம்
போன்ற அஷ்ட காரியங்களுக்கு அனேக மந்திர சக்திகளுக்கும் உதவுகிறது.


தவிர இம்மலையின் காற்றானது உடலில்
பட்டவுடன் சகல வியாதிகளும் எளிதில் குணமாகின்றன.
சதுரகிரியில் செம்பை தங்கமாக்கும் மூலிகை
இருப்பதாக பரவலான ஒரு செய்தி உண்டு.
பல மூலிகையின் சாற்றுடன், நவபாஷாணங்களையும் சேர்க்கையால் செம்பை தங்கமாக உருவாக முடியும்.

இந்த வித்தைகளை கற்றுக்கொள்ள தங்கள் வாழ்நாளையும்,
பொருளையும் இழந்தவர்கள் பலர்.

அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.
இது சாமானிய மக்களுக்கு கைவராத கலை.
பொருளாசை இல்லாதவர்களுக்கு மட்டும்
இது சாத்தியமாகும். யாருக்கு சாத்தியமாகும்
என்ற ஒரு விதியும்/ பிராப்த்தமும்
உண்டு.

எனக்குக் குருவாக திருவண்ணாமலையில்,
ஈட்டும், தொட்டும், சுட்டிக்காட்டியும்,
அருளும், தீட்சையும் அளித்த சித்தர்/வைத்தியர்
சி.இராமசந்திரன் அவர்கள் பல காலம் கழித்து
எனக்கு செம்பை தங்கமாக மாற்றும் வித்தையை,மூலிகையின்
கூட்டையும், நவபாஷாணத்தின் கலவை அறிவிக்கிறேன்,
கற்பிக்கிறேன் என்றார்.

ஆனால், நான் மரியாதையுடன் வேண்டாம் என்று மறுத்திவிட்டேன்.

'மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தினை எண்ணி தரம் தாழாதே,
தங்க இடம் பாரப்பா...'

-என்பதே என்பதே எனது வேண்டுகோள்.
சதுரகிரி மலையில் காலங்கிநாதரால் உருவாக்கப்பட்ட
வகார தைலக் கிணறு உண்டு. உலோகத்தைத் தங்கமாக
மாற்றும் தைல மூலிகை கிணறு.

சிருங்கேரி என்னும் நகரத்தைச் சேர்ந்த வாலைபுரம்
எனும் கிராமத்தில் இறைபக்தியும், திருப்பணி
கைங்கர்யங்களில் சிறந்த வாமதேவன்,
கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டுவதற்கு
எண்ணி தன் சொத்தை எல்லாம் விற்று
ஆலயப்பணியை தொடந்தான்.

ஆலயம் பாதிப்பாகம் கட்டி முடிவதற்குள்
பொருள் பற்றாகுறையால் பணியை தொடர இயலவில்லை.
பலரிடம் யாசித்தும் யாரும் உதவிபுரியவில்லை.
சதுரகிரியில் தவம் புரிந்துக்கொண்டிருக்கும்
காலாங்கி முனிவரைப் பற்றிக் கேள்விபட்டு
அவரை சந்திக்க சென்றான். நடந்தவற்றைக் கூறி
நின்று போன சிவாலயப் பணி தொடர வழி
செய்ய வேண்டுமென, காலில் வீழ்ந்து வேண்டி
நின்றான்.

ஆனால், காலாங்கி பதிலேதும் கூறாது மெளனமாக
இருந்தார்.
ஆலயத்தை எப்படியும் கட்டிமுடிக்க வேண்டும்
என்ற வேட்கையில் உறுதியுடன் அவருக்குப்
பணிவிடைகள் செய்து வந்தான்.
வாமதேவன் உண்மையிலேயே ஆலயம்
கட்டும் எண்ணத்தில் தம்மிடம் தங்கியுள்ளான்
என்பதை உணர்ந்து அவனது எண்ணத்தை
நிறைவேற்ற நினைத்தார்.

மலையிலிருந்த அபூர்வ மூலிகைகளான உரோம வேங்கை,
உதிர வேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி முதலியவற்றாலும், முப்பத்திரண்டு பாஷாணச் சரக்குகளாலும் முப்புக்களாலும் வகாரத் தைலத்தைச் செய்தார்.

அந்த வகாரத் தைலத்தைக் கொண்டு உலோங்களை
தங்கம் உண்டாக்கினார்.

'வணிகரே..! ஈசன் கோயில் கட்ட உனக்கு
எவ்வளவு பொன் தேவையோ அதனை எடுத்துக்
கொண்டு போய் திருப்பணி வேலைகளை முடித்து
கோயிலை கட்டி முடி போ'' என்றார்.

காலாங்கிநாதரை வணங்கி அங்கிருந்த
பொன்னை எடுத்துச் சென்ற வணிகன்
வாமதேவன் தன் விருப்படியே சிவாலாயம் கட்டி
முடித்தான்.

(தொடரும்)

அன்புடன்
சிங்கை கிருஷ்ணன்







Wednesday, July 02, 2008

சதுரகிரி யாத்திரை #1

உலக முழுதுந் தொழுதேத்தி
...உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை
...யிலிங்க மயமா யிருப்பாவைக
கலக மயக்கங் கழன்றோடக்
...கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர்
...ஆடிப்பு என்றன் முடிக் கணியே.

தென் தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில்
சதுரகிரி மலை அமைந்துள்ளது. சதுரம்-நான்கு, கிரி-மலை, நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ்ந்திருப்பதால் இதனை 'சதுரகிரி' என்றுஅழைக்கிறார்கள்.

கிழக்குத் திசையில் இந்திரகிரியும்,
தென்திசையில் ஏமகிரியும்,
மேற்குத் திசையில் வருணகிரியும்,
வடதிசையில் குபேரகிரியும்,
இவற்றின் மத்தியில் சிவகிரி,
பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சப்தகிரி
என்னும் நான்கு மலைகளும் அமைந்திருக்கிறது.

இது தவிர இந்நான்குமலைக்கு மத்தியில்
சஞ்சீவி என்ற ஓர் அற்புத மலையும் இருக்கிறது.
இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும்.

இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிடலிங்கமாகும்.
அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.
அகத்தியர் முதலான பதினெட்டுசித்தர்கள் வாழ்ந்து வழிப்பட்டதும் இத்திருத்தலம்.

இத்திருத்தலத்திற்கு ஒரு முறைவருகை தந்து
சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.

இத்தலத்தில் அமைந்துள்ள சந்திர தீர்த்தம்,
கெளண்டின்ய தீர்த்தம்,
ஆகாய கங்கைதீர்த்தம்
ஆகியவற்றில் நீராடிவர்கள்
பரமானந்த வாழ்வைப் பெற்று மகிழ்வார்.
புத்துணர்வு பெறுவர்.

திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி;
சிதம்பரத்தை வணங்கினால் முக்தி;
திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும்.;
காசியில் இறக்க முக்தி.
இந்தச் சதுரகிரி தலத்திலோ
இந்த நால்வகை முக்தி கிடைக்கும் என்பர்.

இம்மலைத் தலத்தின் சஞ்சீவி மூலிகைக்
காற்றில்னால் ஆயுள் அதிகரிப்பதோடு,
நோயில்லா வாழ்வு அமையும் என்கிறார்கள்.
*சதுரகிரியில் சஞ்சீவி மலை* இராமாயணப் போரில்
இந்திரஜித்து, இலக்குவன் முதலானோரைத்
தனதுபிரம்மாஸ்திரத்தால் மூர்ச்சித்து மயங்கி
கீழே விழும்படி செய்ய, இது கண்டுவருந்திய இராமன்,
சுக்ரீவன் முதலானோர் வாயுபுத்திரனாகிய
ஆஞ்சநேயரிடம்விபரம் கூறி சஞ்சீவி மலையிலுள்ள
சஞ்சிவி மூலிகையை எடுத்து வரும்படிசொல்ல,
அனுமன் உடனே அங்குச் சென்று
அம்மலையையே தூக்கிக் கொண்டு வந்து இலக்குவன்
முதலானோரை மூர்ச்சைத் தெளிவித்த பின்பு,
திரும்பவும் அம்மலையை இருந்த இடத்திலேயே
வைத்துவிட்டு வருவதற்காக, வடதிசை
நோக்கிப் பறந்து செல்கையில்,
சதுரகிரியில் தவம்செய்து கொண்டிருந்த
சித்த முனிவர்கள் அந்த சஞ்சீவி கிரியில்
தங்களுக்கு வேண்டியஅனேக மூலிகைகள்
இருப்பதை தங்களது ஞான திருஷ்டியினால்
தெரிந்து கொண்டு அம்மலையின் ஒரு பகுதி,
இந்நான்கு கிரிகளுக்கும் [சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்தகிரி]
மத்தியில் விழவேண்டும் என்று நினைத்தவுடனே
அவர்களது பிரம்ம ஞான தவ வலிமையால்
பெரிய காற்றை உண்டாகியதால் அச்சஞ்சீவி
மலையின் ஒரு பகுதியானது இச்சதுரகிரிக்குமத்தியில் விழுந்தது.

<http://mail.google.com/mail/ui=1&attid=0.1&disp=inline&view=att&th=11a89e1b63fa5e1a>
(சதுரகிரி-தாணிப்பாறை மூலிகைவனம்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
தமிழ் எமது மொழிஇன்பத்தமிழ் எங்கள் மொழி

Krishnan,
Singapore
For your Book Mark:
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/