Monday, July 07, 2008

சதுரகிரி யாத்திரை #5


கருப்பண்ண சாமி சன்னதிக்கு அடுத்து ஒரு மரத்தடியில் வன பேச்சியம்மன் அம்மன். அதனைத் தொடர்ந்து வரும் ஆலயம் *ஆசீர்வாத விநாயகர்.*


இங்கு நாங்கள் கொண்டு சென்ற இளநீர் மற்றும் அபிஷேகப் பொருட்களை கொடுத்து எங்கள் பயணம் விக்கனமின்றி நல்லபடி நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.


பொதுவாக விநாயகர் தும்பிக்கை, இடம்
அல்லது வலமாக இருக்கும். ஆனால் இங்கு விநாயகர் தும்பிக்கை சதுரகிரி மலையை நோக்கி இருந்தது.

*ஆசீர்வாத விநாயகர்* ஆலயத்தை அடுத்து இருப்பது *ஸ்ரீ இராஜயோக தங்க காளியம்மன்*ஆலயம். அன்னையின் ஆசி பெற்று எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

*தபசுக்குகையை* நெருங்கியதும் சித்தர் பெருமான்களை மனதில் வேண்டிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
நடைப்பயணத்தின் போது இயற்கை அழகு
மனதுக்கு இதமாக இருந்தது.

சலசலத்துபாறையின் ஊடே ஓடும் ஓடை,
கானகத்தின் குளிர்ச்சி நமக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
சுமார் ஒருமணி நேர நடைப் பயணத்திற்குப் பின்
நம்மை சுற்றிலும் நாலாபுறமும் மலைகள்தான்.

அம்மலைகளுக்கு நடுவில் எங்கள் பயணம்
தொடர்ந்தது. போகிற பாதை வலது பக்கம் திரும்புதல்,
இடது பக்கம் திரும்புதல், மேடு, பள்ளம் எனக் காணப்பட்டாலும்
அங்கிருந்து அனைத்து மலைகளையும் கடந்துதான்
சென்றுள்ளோம் என்ற விஷயம், நாங்கள்கீழே இறங்கிவந்த
போது உணர்ந்தோம். போகப் போக பாதையும், பயணமும் நீண்டு கொண்டுதான் இருந்ததே தவிர, மலை உச்சி வந்த பாடிலில்லை.

"...புல்வரம்பாய பல்துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாததோர் பொருளது கருதலும்
ஆறுகோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின..."
....போற்றித் திருவகவல்: திருவாசகம்


"தெய்வத்ததேடி அடைவதே' என்ற எண்ணம் வந்து,
பரம்பொருளைத் தேடும்போது, ஆறுகோடி மாயாசக்தி
எனக்கெதிராக படை திரட்டு கின்றனவே
எனக்கெதிராக படைதிரட்டுகின்றனவே என்கிறார் மாணிக்கவாசகர்.
அந்த நிலைதான் எனது நிலை.

செங்குத்தான பாறையின் மீது மூச்சை தம்கட்டி ஏறும்போது
உடலும், காலும் சோர்ந்து விடுகிறது.

இன்னும் எவ்வளவு என்று ஆதங்கத்தில் கேட்டால்,
உடன் வந்தஅன்பர்கள் சலிக்காமல் 'இதோ வந்துவிட்டது,
அந்த வளைவைத் தாண்டிவிட்டால்...,
அவ்வளவுதான் இடம்வந்துவிடும்'' என்பார்கள்.

அது நம்மை சோர்வடையாமல் இருக்க உற்சாகம்
மூட்டுவது. இப்படிப் பல முறை சொல்லி வந்த
நண்பர்களுக்கு நானும் ஒரு கதை கூறினேன்.
பட்டணத்து ஆசாமி ஒருவர் கிராமத்திற்குச்
செல்ல பேருந்தை விட்டு இறங்கி
அங்கிருந்து கிராமத்து ஆளிடம்
கிராமத்துப் பெயரை கூறி எவ்வளவு
தூரமப்பா என்று கேட்டிருக்கிறான்.

கிராமத்தான் பக்கந்தானுங்க, கூப்பிடும்தூரம்தான்.
ஒரு கி.மீ. துரம்தாங்க இருக்கும், எனக்கும் அந்த கிராமம்தாங்க என்றுகூறியவாறு பேசிக்கொண்டேநடந்துள்ளார்கள்.
நீண்ட தூரம் நடந்தும் கிராமம் வரவில்லை.
பட்டணத்து ஆசாமி, என்னப்பா பக்கம், கூப்பிடும் தூரமின்னு
சொன்ன இன்னும் கிராமமே தெரியவில்லை என்று கேட்டான்.

அதற்கு அந்த கிராமத்தான் ''அய்யா, நான் கூப்பிட்டாலே
ஒன்னறை கி.மீட்டர் வரை கேட்கும் என்றானாம்.
நண்பர்கள் சிரித்துக்கொண்டு இதே வந்துவிட்டோம்
என்றார்கள். உண்மையில் இடைவேளை,
சாப்பாட்டு வேளைவந்துவிட்டது.

கோரக்கர் சித்தர் குகை
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

No comments: