Thursday, July 10, 2008

சதுரகிரி யாத்திரை #6

சுந்தரமாக லிங்க, மகா லிங்க மலையில் காலை
பத்து மணிக்கும், மாலை நான்கு மணி, மற்றும் ஆறு மணிக்கு
பூஜைகள் நடைபெறுகிறது.

மகாலிங்க மலை ஆலயத்தில்
மூலஸ்தானம் சுயம்புலிங்கம்.

லிங்கம் சற்று சாய்ந்தநிலையில் இருப்பதைக் காணலாம்.
இது குறித்த விபரம் கேட்டபோது, அறிந்த கதையைத்தான் சொல்லப்பட்டது.

புற்றின் மீது பசு பால் சுரந்த செய்தி.
புற்றின் மீது பால் சுரந்த போது பசுவை அடித்து இழுத்த போது
அதன் கால் சிவ லிங்கத்தின் பட்டு சுயம்பு லிங்கம் சற்று சரிந்ததுடன் லிங்கத்திலிருந்து இரத்தம் பீறியிட்டு வந்துள்ளது.

அபிஷேகத்தின் போது இந்த வடுவினை
(பசுவின் குளம்பு) தெரிகிறது. நிறைய பலாமரங்கள்,
மாமரங்களை கோவிலைச் சுற்றி இருப்பதைக் காணலாம்.

பலாமரங்களில் நிறைய பலாக்கள், பழுத்த
பலாப்பழங்கள் இருக்கின்றன. மரநிழலின் கீழ் அமர்ந்து
அண்ணாந்து பார்த்து இரசித்த போது
பாரதிதாசனின் ''கோரிக்கையற்று கிடக்குதண்ணே
வேரில் பழுத்த பலா'' என்ற வரிகள்தான்
நினைவுக்கு வந்தது.

*சிவ சித்தர் குடிகொண்டிருக்கும் புண்ணிய
கங்கை ஊற்றுக் கிணறு* புனித கங்கை ஊற்று.
இந்த ஊற்றில் இருந்து காலங்காலமாக தீர்த்தம்
எடுத்து எல்லாம் வல்ல, சித்தர்களுக்கு சித்தன்,
எம்பிரான் சுந்தர மகாலிங்கத்திற்கும்,
சுந்தர மூர்த்திக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த புண்ணிய ஊற்றில் சிவனும், சித்தர்களும்
குடிகொண்டு இருப்பதால் இந்தநீர் மருத்துவ குணமும்,
புனிதத் தன்மையும், மகத்துவமும் கொண்டது.

இந்த நீரைப் பருகுவதால் உடல் பிணியும்,
மன நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
இந்த நீரை வீடு, தொழில் நடைபெறும் இடங்களில்
தெளிப்பதால் எல்லா தோஷங்களும் தீரும்.
இந்த புண்ணிய நீரைஎல்லோரும் பருகி உடல்,
மன ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஊற்றை ஆழப்படுத்தி,
செம்மைப்படுத்தி நீரை நிலைத் தொட்டியில்
தேக்கி மலை முழுவதும் குழாய் மூலமாக
எல்லோருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காலை 10.45 புறப்பட்ட நாங்கள், மாலை 4.15 தான்
மலையை அடைந்தோம். ஏறக்குறைய ஐந்துமணி
நேரப்பயணம். ஒரு மணி நேரத்தில் ஏறி வரும்
அன்பர்களும் உண்டு.

அன்றாடும் செல்லும் அன்பர்கள்,
சுமை தூக்கும் மலைவாசிகள் ஒரு மணி
நேரத்தில் ஏறிவிடுவார்களாம்.

நண்பர் திரு.தணுஷ்கோடி இரவு உணவுக்கு
மடத்தில் ஏற்பாடு செய்து இருந்ததால்
மடத்தில் அருமையான இரவு உணவு
படைத்தார்கள். காலத்தால் செய்த உதவி
ஞாலத்திலும் மானப்பெரிது என்பார்கள்.

உண்மைதான். இரண்டு பெரியல், சாம்பார்,
இரசம் பெரிய விருந்துக்கு சமம்.
நாங்கள் அன்றிரவு தங்கி மடத்தில் தங்கினோம்.
உடல் களைப்பு, அசதி.

சாதாரண தரையில் படுத்த ஞாபகம்.
மற்றவைதெரியாது அதிகாலை வரை.
உறங்குவது போலும் சாக்காடு,
உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
அனுபவ உண்மை. மறுநாள் காலை பூஜையில்
கலந்து கொண்டு, மதிய உணவையும்
முடித்துக்கொண்டு சுமார்பதினொரு
மணிபோல் இறங்கத் தொடங்கினோம்.

ஏறுவதில் ஒரு வகை சிரமம் இருந்தது போல்
இறங்குவதிலும், வேறு வகை சிரமம் இருந்தது.
FallingForce எனப்படும் கீழ் நோக்கி தள்ளப்படும்
சிரமம் இருந்தது. ஆகவே, கையில் ஒரு கோலுடன்
ஊன்றிய வண்ணம் இறங்கினோம்.

ஏறும் போது சுமார் ஐந்து மணி நேரமாகியது,
இறங்கும் போது சுமார் 3 மணிநேரமாகியது.
அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷ காலங்களில்
அதிகமான பக்தர்கள் கூட்டம் இருக்கும்
என்கிறார்கள். நடைப்பாதை நிறைந்து இருக்கும்.
மலை மேலேறும் பக்தர்கள், கீழிருக்கும் பக்தர்கள்
என மலையே அதிரும் என்கிறார்கள் உடன் வந்த அன்பர்கள்.
நாங்கள் சென்ற நேரம் கத்திரி வெயில் காலம்.
ஆகையால் கூட்டம் அதிகமில்லை.
ஆகையால் சற்று சாவகாசமாக - தாராளமாக இறங்கினோம்.--

அன்பொடு,
கிருஷ்ணன்
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore

2 comments:

வடுவூர் குமார் said...

ரொம்ப நாள் கழித்து வருகிறீர்கள் போலும்..

சிங்கை கிருஷ்ணன் said...

ஆமாம்.
நேரம் கிடைப்பது மிகக் குறைவு.
வருகைக்கு நன்றி.
அன்புடன்
கிருஷ்ணன்