Monday, August 11, 2008

பொதிகை புனித யாத்திரை #4

மறுநாள் பயணம் அதிகாலை 5 மணிக்கே ஆரம்பித்து விடும்.
கருக்கலாக இருப்பதால் டார்ச் லைட் வெளிச்சத்தில்
நடைபயணம் தொடர்ந்து விடும்.

முப்பது நிமிட பயணத்தில் கன்னிகட்டி
சிற்றாறு குறுக்கிடும். அங்கு காலைக் கடனை
முடித்துக்கொண்டு, நீண்டு வானளாவிய மரங்களை
இரசித்துக்கொண்டும், சந்தனமரங்களின் சுகந்தத்தை சுமந்து
கொண்டும்,
''குறுமுனிக்கு அரோகரா,
கும்பமுனிக்குஅரோகரா''
என்று பாடிக்கொண்டும் செல்வதால்
அகஸ்தியரின் திருவருள் கிட்டுவதுடன்,
மனமும் உடலும் உற்சாகம் பெறுகிறது.

அத்துடன் வனவிலங்களையும் விரட்டவும் உதவுகிறது.
சுமார் எட்டு மணிபோல் பேயாறு வந்தடையலாம்.
கோடைக்காலங்களிலும் இந்த ஆற்றில் நீர் நிறைந்தே ஓடும்.

இந்த ஆற்றில் குளித்துவிட்டு காலை உணவினை
முடித்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டும்.

90நிமிடநடைப்பயணத்திற்குபின் கல்லாறு
என்ற இடத்தை அடையலாம். இங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், அடுத்தஇலக்கு பயண ஆரம்பமாகும்.

அடுதத இலக்கு சங்கு மித்திரை. கல்லாற்றிலிருந்து
சங்குமித்திரை அடையும் வரை மூங்கில் காடுகள்.

இங்கு கல்தாமரை என்னும் அபூர்வ மூலிகைகளை
காணலாம். உயரமான பகுதியால் நடையில் தளிர்வும்
சோர்வும் ஏற்படும்.

90 நிமிட நடைக்குப் பின் சங்கு மித்திரை அடையலாம்.
சசங்கு மித்திரை கேரளாவின் எல்லை ஆரம்பமாகிறது. மலையாளிகள் பொங்கலப்பாறை என்று அழைப்பார்கள்.

இதன் பொருள் சமையல் செய்யுமிடம் என்பதாகும்.
இங்கிருந்து கேரளாக்குச் செல்லலாம்.
போனக்காடு நென்மன்காடு சென்று திருவனந்தப்புரத்தை
அடையலாம்.

சிறிய ஓய்வு, உண்வுக்குப்பின் சற்றே களைப்பை போக்கிக்கொண்டு பயணம்தொடரும். மீண்டும் கடுமையான பயண மலை ஏற்றம்.

வெறும் காலுடன்தான் செல்லமுடியும். அபாயகரமான
பாறைகளைக் கவனமாக கடந்து செல்லவேண்டும்.
இருபுறமும் படுபாதாளம். காற்று பலமாக வீசுவதால்
மெதுவாக ஊர்ந்தும், குனிந்தும் நடந்து செல்ல வேண்டும்.

இப்படி மெல்ல நடந்து 6125 அடி கொண்ட பொதிகை மலை உச்சிஅடையவேண்டும். பயணத்தின் போது நாகபொதிகை,
ஐந்து தலைப்பொதிகை மற்றும் இதரபொதிகை மலையின்
முழு தரிசனம் கிடைக்கும்.

இந்த இடம் கேரளா அரசுக்கு சொந்தமானது.
இங்குதான் அகஸ்தியர் சிலைகம்பீரமாக இருக்கிறது.
சிலையைக் கண்ட பக்தர் ஓடிச் சென்று அகஸ்தியர் சிலை வணங்கியும், கண்ணீர் மல்கியும், கீழே வீழ்ந்தும் புரள்வார்கள்.

நினைத்த பொழுது சென்று பார்க்க இயலாத
இடத்திலிருக்கும் இவ்விடம் ஆண்டுக்கு ஒருமுறைதான் சென்று காணமுடியும், வழிபடமுடியும்.

தற்போதுள்ள அகத்தியர் சிலை கேரள அரசுக்கு சொந்தமானது.
கேரள யாத்திரிகர்கள் சிவராத்திரிக்கு வந்து வணங்கி செல்வதுண்டு.

அகஸ்தியர் சிலைக்குப் பட்டு ஆடைகள் அணிவித்து,
வாசனை திரவியங்கள், பால்அபிஷேகம்,
தீபார்த்தினை காட்டி இரண்டு மணி நேரம் அகத்தியர் வழிபாடும், பன்னிருதிருமுறை பதிக பாடலையும் பாடியும் பிரார்த்தினைகளும் நடைபெறும்.

வானிலை ஒரு பொழுதுக்கு மறு பொழுது மாறும்.
மேகங்கள் கூடும், மழை பெய்யும். குளிர்வாட்டும்,
பின்னர் நீங்கும். மீண்டும் மேகம் கூடும்,
மழை பெய்யும் இப்படி மாறி மாறி நிகழும்.
பொதிகை மலையில் எவ்வளவு மழையில் நனைந்தாலும்,
கடுங்குளிரில் வாடினாலும் எவர் உடம்பும், உடல் நலமும் பாதிக்கப்படுவதில்லை.

இதற்கு அகத்தியர் திருவருளே என்று
இங்கு வரும் சாதுக்கள் கூறுகிறார்கள்.
பயணத்தின் போது கோடை மழை
கண்டிப்பாகப் பெய்யும்.

மழை இல்லாத பயணம் இல்லை என்றுகூறலாம.
பிரயாணத்தில் அட்டையின் பாதிப்பு தவிர்க்க இயலாது.

நம்மை அறியாது நம் இரத்ததைஉறிஞ்சிவிடும்.
இந்த அட்டைகள் நம்மைப் பற்றாது இருக்க காலில்
வேப்பெண்ணை, புகையிலை போன்றவற்றைத்
தடவிக்கொண்டால் சிறிது பாதுகாப்பு அளிக்கும்.

சிறந்தவைத்தியம் உப்பு. நீரில் கரைத்த உப்பை தடவினால்
உடன் பயன் தரும். [சமீப கால விஞ்ஞானம் இந்த அட்டை கடித்தால் அதனால் பல நோய் நீங்குகிறது என்கிறது.
சில நாடுகளில் இந்த அட்டை வைத்தியம் நடக்கிறது]

பொதிகை மலை செல்ல இரண்டு நாட்களாகும்.
பொதிகையிலிருந்து திரும்ப ஒரு நாள்போதும்.
காலை ஆறு மணிக்கு புறப்பட்டால் மாலை
காரையார் வந்து விடலாம்.

குறுமுனி அகஸ்தியார் அடியார்களுடன்
என்றும் இருக்கிறார் மனத்தளவில்.
"என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி
நல்வினைப் பயனிடை முழுமணித்
தரளங்கள் மன்னு காவிரி சூழ்
திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி
ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே."

-திருஞானசம்பந்த நாயனார்-- நிறைவு ---

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
.......................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

1 comment:

jeevagv said...

பயணத்தினைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
வாழ்க வையகம்.