Monday, October 27, 2008

சபரி நடை பயணம் - #2

காலம் ஓடுகிறது நதியின் வேகத்தில்;
நதியைப் போலவே ஓசையில்லாமல்.
பன்னிரண்டு வயதுப் பாலகனானார்
மணிகண்டன்.

மன்னன் இராஜசேகரன் முதுமையின்
காரணமாக ஆட்சியதிகாரத்தைக் கொடுத்து
மணிகண்டனுக்கு முடி சூட்டுவதுதென்று
தீர்மானித்தான்.

முடிசூட்டுவிழாவிற்கான ஏற்பாடுகளைச்
செய்யும்படி உத்தரவிட்டான் மன்னன்.
அதிகாரத்தை தன் கையில் வைத்துக்
கொண்டால் பிற்காலத்தில் அரசை
நாம் கைக்கொண்டு விடலாம் என்ற
நம்பிக்கையில் இருந்தான் அமைச்சன்.

முடி சூட்டு விழாவிற்கு முன்
மணிகண்டனைக் கொன்றுவிடவும்
துணிந்தான்.

மாந்திரீகர்களைக் கொண்டு சில
துர்தேவதைகளை மணிகண்டன் மீது
ஏவிவிட்டான். அதனால் மணிகண்டனுடைய
உடலில் பிணிகள் தோன்றலாயிற்று.
மனிதப் பிறவி எடுத்தால் அதற்குரிய
வினைகளையும் அனுபவித்தாக
வேண்டுமல்லவா. கொப்புளம் சிரங்கு, கட்டி வந்து
அவதிப்பட்டார்.

ஐந்தெழுத்து மந்திரத்தில் வாராத
நலனுண்டா? தீராத பிணியுண்டா?.
அத்தனை மந்திரங்களுக்கும்
உயிர்ப்பியப்பான மந்திரமன்றோ அது.
சிவனே அனைத்துக்கும் மூலம்.
சிவனின் அருளால் தீயசக்திகள் விலகி,
நோயும் குணமடைந்தது.

தன்னுடைய கொலைத் திட்டம்
தோற்றதில் அமைச்சன் மேலும்
அழிவுப் பாதையிலேயே சிந்தனையை
ஓடவிட்டான்.

மணிகண்டனை எப்படியும் கொன்று
தீர்ப்பதில் குறியாய் இருந்தான்.
இன்னொரு சதித்திட்டம் அவனுள் உருவானது.
கோப்பெருந்தேவியை அந்தப்புரத்தில்
கண்டு தான் தீட்டிய திட்டத்தைச்
சொன்னான் அமைச்சன்.

''அரசி, தாங்கள் தவறாக நினைக்காவிட்டால்
ஒன்று சொல்வேன். அரச மரபிலுதித்த
இராஜராஜன் இருக்க, வனத்தில்
கண்டெடுத்த யாரோ ஒருவனுக்கு
முடிசூட்டுவது முறையாகத் தெரியவில்லை''
என்றான்.

அரசி அவனுடைய சொற்களை
ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.
''கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்''
என்பது போல் அமைச்சன் அவளை
வேறு விதமாய் சிந்திக்க விடவில்லை.
தொடர்ந்த துர்போதனைகள் செய்து
அவளுடைய அறிவை மழுங்கடித்தான்.

அமைச்சன் ஒரு புதிய சூழ்ச்சித்
திட்டத்தை அரசியிடம் விவரித்தான்.
அதன்படி, "அரசி கடுமையான
தலைவலி அவதிப்படுவது போல
நடிக்க வேண்டும். அரண்மனை
வைத்தியர்கள் அளிக்கும் சிகிச்சைகளிலும்
பலனில்லை என்றாக்க வேண்டும்.
அப்போது அமைச்சன் அழைத்துவரும்
மருத்துவர் புலிப்பால் கொடுத்தால்தான்
அந்நோய் தீரும் என்பார்கள்.
மணிகண்டன் தாய்ப்பாசத்தில்
தானே புலிப்பால் கொண்டு வருவதாய்ச்
சொல்வான். அவன் புலியைத் தேடி
வனஞ்சென்று அங்கே புலிபோன்ற
கொடிய விலங்குகளால் கொல்லப்படுவான்.''

அமைச்சனின் யோசனை அரசிக்குத்
தகுதியாய் தெரிந்தது. அவள் அன்றே
தலைவலி நாடகத்தை அரங்கேற்றினாள்.
அரசிக்குக் கடுமையான தலைவலி
என்ற செய்தியை அறிந்த அரசன்
அந்தப்புரத்துக்கு விரைந்தான்.
உடனே மருத்துவர்களை அழைத்து
வர ஆணை பிறப்பித்தான்.
மருத்துவர்கள் வந்து வகைவகையாய்
மருந்துகள் கொடுத்தும் அரசியின்
தலைவலி தீரவில்லை.
எப்படித் தீரும்? உண்மையான நோயாக
இருந்தாலல்லவா மருந்தில் தீரும்.

இத்தருணத்தில் அமைச்சனின் ஏற்பாட்டில்
போலி மருத்துவன் அரசியின்
உடல் நிலையைப் பரிசோதிப்பது போல்
பாசாங்கு செய்தான்.

''அரசே! பெண்களுக்கு இத்தகைய
தலைவலி வெகு அபூர்வமாகவே வரும்.
இது சாதாரண மருந்துகளில் தீரக்கூடிய
தலைவலியல்ல இது. அரசே நான்
ஒரு மூலிகை தருவேன் அதைப் புலிப்பாலில்,
அதுவும் அப்போது கறந்த பாலில்
கரைத்து குடித்து விட்டால்
பிறகு அடுத்த பிறவிக்கும்
அரசியாருக்குத் தலைவலி தலைகாட்டாது."
என்றான் போலி மருத்துவன்.

வெளுத்ததெல்லாம் பால் என்று
நம்பும் அரசன் செய்வதறியாது கலங்கினான்.

மணிகண்டனை அழைத்து,
'புலிப்பாலை எப்படிக் கொண்டு வருவது?' -
அதைக் கொண்டு வந்தால்தான் உன்
அன்னையின் தலைவலி தீரும்
என்று மருத்துவர் சொல்கிறார்.
உனக்கு ஏதும் வழி தெரிந்தால்
சொல் என்றான்.

மணிகண்டன் அரசனைப் பார்த்து,
'தந்தையே இதற்காகவா வருந்துகிறீர்கள்?'
நானே சென்று புலியைக் கொண்டு
வருவேன் என்றார்.

'மகனே! இது ஆபத்தான வேலை.
நான் உன்னை இதில் பணயம்
வைக்கமாட்டேன்' என்றான்
அரசன் பதற்றத்துடன்.

'தந்தையே இது ஒரு மகன்
தாய்க்குச் செய்கிற கடமை.
நான் காட்டில் கண்டெடுக்கப்பட்டவன்.
எனக்குக் காட்டு மிருகங்களிடம்
அச்சமில்லை' என்றார்.

அமைச்சனின் சூழ்ச்சியும்,
அரசியின் தலைவலி நாடகமும்
மனிதர்களிடையே இயல்பாய்
உள்ளதுதான் 'புலிப்பாலுக்கு மணிகண்டன்
கானகம்செல்வது'
இறைவனின் திருவுள்ளப்படியேயாகும்.

வனத்தில் முடிக்க வேண்டிய காரியம்
ஒன்றையும் இறைவன் திட்டமிட்டிருந்தான்.
அது மணிகண்டனின் அவதார நோக்கம்.

மணிகண்டனை புலிப்பால்
கொண்டு வருவதற்கு காட்டுக்கு
அனுப்பியது முதல்,
மன்னன் இராஜசேகரன் அளவற்ற
மனத்தவிப்புடன் இருந்து வந்தான்.

மணிகண்டனைப் பற்றி எந்த செய்தியும்
தெரியவில்லையே என்று வருந்திக்கொண்டு இருந்த சமயம், மணிகண்டன் வருகிற
செய்தி அரசனுக்கு எட்டியது.

மின்னல் வேகத்தில் அரண்மனை
வாயிலுக்கு விரைந்தான். வேங்கைப் புலி
மேல் அமர்ந்து மணிகண்டன்
வருவதை, அவனது முன்னும் பின்னும்
இரு பக்கங்களிலும் புலிகள் கூட்டமாய்
தொடர்வதைக் கண்டான் மன்னன்.
ஓடிச்சென்று மைந்தனைத் தழுவினான்.

மணிகண்டன் அரசனை வணங்கி,
'தங்கள் ஆணைப்படி,
புலிகளைக் கொண்டு வந்துவிட்டேன்.
மருத்துவரைஅழைத்து தேவையான
அளவு பால் கறந்து எடுத்துக்கொள்ளச்
சொல்லுங்கள் ' என்றார்.

மணிகண்டன் காட்டுக்குச் சென்றதுமே
அரசியின் தலைவலி நீங்கிவிட்டது என்றும்,
இனி புலிப்பால் தேவைப்படாது,
புலிகளைக் காட்டுக்கே அனுப்பிவிடலாம்
என்று அரசன் கூறினான்.

அரசியும், அமைச்சனும் கண்களில் நீர்மல்கி, 'தேவரீரை இன்னாரென்று அறியாமல் பிழை புரிந்து
விட்டோம். எங்களை மன்னித்து நற்கதி அருளவேண்டும்' என்று மண்டியிட்டு வேண்டினர்.

மணிகண்டன் அரசியையும்,
அமைச்சனையும் மன்னித்து அருளினார்.
உலகில் மன்னிக்க முடியாத தவறென்று
எதுவும் இல்லை.

மன்னித்தல் மாண்பு,
மன்னிப்பதற்கும் கருணை மனம் வேண்டும்.
மன்னிப்பதன் மூலம் தவறு செய்தவர்
திருந்தி வாழ வாய்ப்பளிக்கிறீர்கள் என்று தம்முடைய செய்கையின் மூலம் மணிகண்டன்
உலகோருக்கு உணர்த்தி விட்டார்.

மணிகண்டன் மன்னரைத் தழுவி,
''தந்தையே, ஒரு தெய்வீக காரியமாகவே
நான் இங்கே வந்ததும்,
தங்களுடைய அரண்மனையில்
தங்கியிருந்ததும்,
இப்போது அந்தக் காரியம் நடந்தேறியதும்
என் மனித அவதாரத்தன்மையை
பூர்த்தியாக்கியுள்ளது" என்றார்.

மணிகண்டன் தெய்வத்தின் அவதாரம்
என்பதனை மக்கள் உணர்ந்தனர்.
என்னை தரிசிக்க என் திருக்கோயிலுக்கு
வரும் பக்தர்கள் விரதங்களை முறையாகக்
கடைப்பிடித்தால்தான் பலன்கிடைக்கும்.
புண்ணிய தினமான மகர சங்கராந்தியன்று
என்னைத் தரிசிப்பது சிறப்பு.

கேரளத்திலுள்ள பதினெட்டுத்
திருக்கோயில்களில் நான் குடிகொண்டிருப்பேன்.
அவற்றுள் சபரிமலையே முக்கிய திருத்தலமாகும்.

பதினெட்டு தத்துவங்களையும் கடந்து
வருபவர்கள்தான் என்னை அடைய முடியும்.

'' நான் உங்களை எல்லாம் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதோ புறப்படுகிறேன்.
எமது பிரிவை எண்ணி வருந்தாதீர்கள்.
உமக்குள்ளே யாம் பூரணமாய்
வியாபித்திருக்கிறோம்'' என்று கூறிப்
பேரொளிப் பிழம்பாய் மாறி மறைந்தார்.

உலகம் தர்மநெறியைக் கடைப்பிடிக்கும்
வரை அமைதியாய் இருக்கும். மக்கள்
அதர்ம வழியில் நடக்கத துவங்கினால்
அமைதி குலைந்து விடும்.

(தொடரும்)

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை

தமிழ் எமது மொழி இன்பத்தமிழ் எங்கள் மொழி

http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com
http://singaporekovilgal.blogspot.com

No comments: