Friday, October 23, 2009

முத்தொள்ளாயிரம் - 2

உறையூருக்கு வடக்கே, ஏதோ பத்து மைல்
தூரத்தில் ஒரு சிறு ஊர். அந்த ஊரிலுள்ள ஒரு பெண்
உறையூருக்கு வந்து போவது வழக்கம். வந்தால், காவேரியில் குளிப்பாள்.தண்ணீரிலுள்ள வாளை மீன்கள் கரையில்
மெள்ள மெள்ள ஏறி, அகப்பட்ட இரையைக் கவ்விக்கொண்டு,
பிறழ்ந்து, தண்ணீருக்குள் மறுபடியும் விழுந்துகொள்ளும்.

இந்த வளமான இடத்தில் ஒரு நாள் சோழமன்னன்
நீராட வந்தான். அவனைப் பார்த்து காதல் கொண்டு
விட்டாள் பெண்; பிறகு தன் ஊருக்கு சென்றுவிட்டாள்.

அங்கேயுள்ள குளத்துக்கு ஒருநாள் நீராடப் போனாள்.
வட திசையிலிருந்து பறந்து வந்த நாரை குளத்தில்
இறங்கி நின்றது. பெண் எண்ணுகிறாள்;
"நாரை சிறிது நேரத்தில் குளத்தை விட்டுக்
கிளம்பித் தெற்கேயுள்ள உறையூருக்குப் போகும், என்பதாக".
காதல் வெறி அவளை எப்படி பேசச் செய்கிறது..., பாருங்கள்.

செங்கால் மடநாராய்!
தென் உறந்தை சேறியேல்,
நின் கால்மேல் வைப்பான் என்
கையிரண்டும் - வன்பால்க்
கரை உரிஞ்சி மீன் பிறழும்
காவிரி நீர் நாடற்(கு),
உரையாயோ யான் உற்ற

( அழகிய நாரையே, தெற்கேயுள்ள
உறையூருக்குச் செல்வாயானால்,
உன் காலைப் பிடித்துக் கும்பிடத் தயார்.
தேகத்தின் வலிமை காரணமாகக் கரையின்
மேல் உராய்ந்து, உராய்ந்து ஏறிய மீனானது
மறுபடியும் நீரில் விழுந்து விடுகிற மீனின்
தேகக்கொழுப்பு சோழனுக்கு யான்
உற்ற காதல் கூறுவாயக!)

{காதலுற்ற பெண் தோழியைப் பார்த்துப்
பேசினாள் என்றால் சாமானய உண்மை.
நாரையைப் பார்த்துப் பேசினாள் என்னும் போது,
காதல் வெறியை வேகத்தை நன்றாய்
எடுத்து காட்டுகிறது செய்யுள்.

காதலும் சோகமும் கலந்த சாயல்,
கவியில் நயமாக அமைந்துள்ளது.
கடைசி அடியை பாடிப் பார்த்தால்
பாவம் தெரிந்துவிடும்.}
================================================

2
பெண் யானை ஒன்றின் மேல் ஏறி
வந்தான் பாண்டியன். ஒரு கன்னிகை அவனைப்பார்த்துக்
காதல் கொண்டு விடுகிறாள். யானை நடந்து வந்ததும்,
அரசன் அதன்மீது இருந்தும் மனசை
விட்டு அகலவில்லை.

அரசனுடைய உருவம் முழுதும் அப்படியே
நிற்பது ஒரு காரியமல்ல, அவன் ஏறி வந்த
யானையின் உறுப்புகள் ஒவ்வொன்றும்
அப்படி அப்படியே உள்ளத்தில் நிற்கின்றன.
அவைகளில் ஈடுபடுகிறாள்

யானையினுடைய கால், அடடா,
துடி (உடுக்கை) போவே இருக்கிறது
செவியோ, தோலினால் செய்த கேடயம்
போலவே இருக்கிறது. துதிக்கை
எப்படியெல்லாமே ஆடுகிறது. வாய்
தொங்குகிற அழகோ தனி, யானையை
இப்படியெல்லாம் அனுபவிக்கிறாள்

நீராடப் போயிருந்த இடத்தில்,
குளிப்பாட்டுவதற்குகாக, யானை வந்திருந்தது
அரசனும் நீராட வந்திருந்தான். அப்போது
யானையைப் பார்த்துச் சொல்லுகிறாள்.

துடியடி, தோல்ச்செவி தூங்குகை, நால்வாய்ப்
பிடியே! யான் நின்னை இரப்பால், கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும், எம்
சாலேகம் சார் நட.


(கெஞ்சி கேட்டுக்கொள்ளுகிறேன்.
வாசனை கமழும் மாலை சூடிய,
சந்தனம் பூசிய பாண்டினோடு,
ஊருக்குள் பிரவேசிக்கவும் அதாவது,
நீராடிவிட்டு உன்மேல் ஏறி
ஊருக்குள் மன்னன் புகும் போது,
எங்கள் வீட்டு ஜன்னலை ஒட்டி
நடந்து வரவேண்டும்.
நான் அங்கு நின்று கொண்டிருப்பேன்
விஷயம் தெரிகிறதா, பிடியே?)

{அரசனைக் கண் குளிரப் பார்த்துவிட வேண்டுமென்ற
ஆத்திரம் அப்படி இருக்கிறது அந்த பெண்ணுக்கு !}
===============================================
3

இன்றைய காலத்தில், இரவில் வெளியே போக
நேர்ந்தால், காற்றில் விளக்கு அணைந்து
விடாதபடி விளக்கு வசதிகள் உண்டு.
பூர்வ காலத்தில் கை விளக்குதான்.
அதைக் காற்றாடிக்கிற காலத்தில் குடத்துக்குள்
இட்டு கவனமாய் பெண்கள் எடுத்துச்
செல்வார் பெண்கள். எடுத்துச்
செல்லும் பெண்ணுக்கு மாத்திரமே
அந்தக் குடவிளக்கு வெளிச்சம் கொடுக்குமே யல்லாது
மற்றவர்களுக்கு ஒளி இருப்பது தெரியாது.

வெளியிலே வெளிச்சம் இல்லை என்றால்,
குடத்துக்குள் விளக்கு இல்லை என்றாகுமா?

பாண்டியன் மேல் வைத்த காதல்
நோய் பெண்களிடம் சாதாரணமாக வெளிப்படத்
தெரியாது. ஆனால், இதயத்தில் மறைவாக
இருந்துகொண்டேதான் இருக்கும்.
பாண்டியன் பவனி வருவதற்காக
அரண்மனையிலிருந்து புறப்பட்டு வீதி வழியாக
வந்துவிட்டலோ, அவர்களுடைய காதல்
நோய் ஊராரது பேச்சுகிடமாய் வெளிப்
பட்டுவிடும். நின்ற நிலையிலே நிற்பார்கள்
அந்த பெண்கள், வெறித்துப் பார்ப்பார்கள்.
சோர்ந்து படுப்பார்கள். இதைவிட வெளிப்படையான
காரியம் என்ன வேண்டும்.

" குடத்து விளக்கே போல்க்
கொம்பன்னார் காமம்
புறப்படா; பூந்தார்
வழுதி புறப்படில்,
ஆபுகு மாலை
அணிமலையில்த் தீயே போல்
நாடறி கெளயை தரும்.

( பாண்டியன் மேல் பெண்கள் வைத்த
காதல் வெளியே தெரியாது.
மாலை சூடிய பாண்டியன் பவனி
வருவதற்காகப் புறப்பட்டு விட்டாலோ
பசுக்கள் மேய்ச்சல்ப் புலங்களிலிருந்து
ஊருக்குக்குள் புகும் மாலை நேரத்தில்

ஊருக்குப் பக்கத்தில் உள்ள மலைச்சரிவில்,
நாட்டார் எல்லோரும் அந்த பெண்களது
காதல் நோயைத் தெரிந்து,
வம்பளப்பதற்கு வாய்விடும்)
==========================================
4

நம்மவருக்குள் சில வேடிக்கையான
கொள்கைகள் உண்டு. அவைகளில் ஒன்று
தேங்காயைப் பற்றியது. தேங்காய்க்குள்
ஒரு வகையான காளான் எப்படியோ
போய், தேங்காய்ச் சத்தையெல்லாம்
தின்றுவிடுகிறது. தேங்காயை உடைத்தால்
உள்ளே வெறும் கொட்டாங்கச்சியாய் இருக்கும்.
இத்தகையத் தேங்காயைத் ‘'தோரோடி'' என்று
சொல்லுவார்கள். தேரையே சத்தைத் தின்றுவிட்டதாக
என்பார்கள. பழி எப்படியோ தேரையின் தலைமேல் விழுந்து விடும்.

சரி, இப்போது ஒரு பெண்
சொல்லுகிறதைப் பார்ப்போம்.

அவள் சோழன் மேல் காதல் கொண்டுவிட்டாள்.
அவனையே எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.
ஆனால், அவன் தனக்குக் கிட்டவா போகிறான்,
இல்லை. தனக்கும், அவனுக்கும் உறவு உண்டு
என்று தாயானவள் கோல் கொண்டே அடிக்கிறாள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் தனக்கும் அரசனுக்கும்
சம்பந்தம் உண்டு என்று சதா
தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தன் ஆத்திரத்தில், இப்படி என்ன சொல்லுகிறாள்:
''அடிக்கட்டும், தூற்றட்டும், கவலையில்லை.
சோழனை அணைத்தேன் என்று இருந்தால்
போதும். அது இல்லையே !''

அன்னையுங் கோல்கொண்(டு) அலைக்கும்; அயலாரும்
என்னை அழியுஞ்சொல்ச் சொல்லுவார்; உள்நிலைய
தெங்(கு) உண்ட தேரை படுவழிப் பட்டேன் யான்.

( அன்னை அடிக்கிறாள். அயலார் சொல்லும்
தன்னை வருத்துகிறது சோழனோடு கூடி
அனுபவித்திருந்தால் அதுவும் சொல்லலாம்.
அந்த அனுபவமும் இல்லாது போனது.
தேரைக்கு எட்டாத படி உள்ள தேங்காயின்
சத்தை உண்ட தேரைக்கு வந்த பழி மாதிரி
எனக்கும் பழி வந்தது. )

அனுபவபூர்வான உண்மையினை செய்யுள் வடிவில் கவிஞர் காட்டியுள்ளார்.

--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com

1 comment:

Anonymous said...

வணக்கம்
அன்பர் கிருஷ்ணன் அவர்களுக்கு தாமரைசெல்வன் எழுதியது.
தங்கள் இணையத்தை கண்டு படித்து தங்களின் தமிழ் ஆர்வம் என்னையும் கவர்ந்தது.

நானும் சிங்கப்பூரில் தான் வசிக்கிறேன்.

தங்களை காண ஆவலுடன் தங்கள்
அன்பன்

98128301