Thursday, May 18, 2006

பாரதியின் சமுதாயப் பார்வை!

''பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை;
குவிக்கும் கவிதைக் குயில்; இந்நாட்டைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை யூற்றாம் கவிதையின் புதையல்!
திறம்பாடி வந்த மறவன்; புதிய
அறம் பாடி வந்த அறிஞன்; நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்பும் கணையா விளக்கவன்! ''

-- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.



மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.
அடிமை இருளை அகற்றத் தோன்றிய 'இளம் ஞாயிறு' 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய'
இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட,அறியாமை இருள் நீங்கிட,சமுதாயம் சீர்பெற்றிட,
வறுமையை வெளியேற்ற 'எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை'
ஆகவேண்டும் என்று கனவு கண்டவர்.

சொல் புதிதாகவும் பொருள் புதிதாகவும் கொண்டு பாடி, ஒப்பில்லாத ஓரு சமுதாயத்தை அமைக்க
முயன்றிட்டார். வயிற்றுக்குச் சோறிடவேண்டும்,பயிற்சி பல கல்வி தந்து தமிழ் சமுதாயத்தை இந்த
பாரையில் உயர்த்திட வேண்டும்.... ஞானமும்,பரமோனமும்,புத்தர் பிரானின் இன்னருளும் பொழிந்த
இந்த பழம்பெரும் பூமியில் மனவளம் பெற்று, கல்வியில் சிறந்திடவேண்டும் என்று தம் கவிதைக்
கனல் கொண்டு போக்கிட முயன்றிட்டான். காலம் படைத் திட்ட சிறந்த கவிஞன் என்றால்
அது மிகையாகாது.



எட்டையபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாளில் தோன்றிய பாரதியார், ஏழாம்
அகவையிலேயே கவிதை எழுதத் தொடங்கினார்.படிபடிப்படியாகப் பாட்டெழுதும் ஆற்றலை
வளர்த்துக் கொண்டார்.தம் 11-ஆம் அகவையில் எட்டைபுரத்துச் சிற்றரசைச் சேர்ந்த புலவர்களால்
''பாரதி'' என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பெற்றார். அன்று முதல் பாரதி கவிதை எழுவதை
தொழிலாகக் கொண்டார்.ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் பெயரால்''ஷெல்லி மன்றம்''
அமைத்தார்.ஷெக்ஸ்பியர், ஷெல்லி, பைரன், விக்டர் யூகோ முதலிய உலகப் கவிஞர்களின்
கவிதைகளைச் சுவைத்து, பாரதியார் தம் கவிதை ஆற்றலை மேலும் வளர்த்துக் கொண்டு
தலைசிறந்த படைப்புக்களையும் உருவாக்கத் தொடங்கினார்.



காலத்தால் அழியாத கவிதைகளைப் படைத்து மக்களுக்கு எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டி,தமிழ்
மொழியின் சிறப்புக்கும், வளத்திற்கும் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றிய இணையற்ற கவிஞராக
மகாகவி பாரதி, ''நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா'' தமிழ் கவிதை உலகில் மட்டுமின்றி- தமிழக
மக்களின் சமூக வாழ்விலும் புரட்சி கருத்துக்களைப் புகுத்தி சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை
ஏற்படுத்தி -அன்னைத் தமிழுக்குச் சொல்லாரம் சூட்டி மகிழ்வன் பாரதி.

உலக மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருஞ் சிந்தனைக் காவியமாகத் திகழ்ந்தவர்,மகாகவி பாரதி.
மக்களிடையே காணப்படும் வேற்றுமைகள் அகலவேண்டும் என்று முரசுகொட்டி,சமுதாயத்தின்
அடித்தளத்தில் உள்ள யாவரும், அறிவிலும் ஆற்றலிலும் வளர்ந்தோங்க வேண்டும் என்று தம்
வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டார்.

''திறமை கொண்ட, தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்,
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே'' என்று முழக்கமிட்டவர்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், கவிதை மறுமலர்ச்சிக்கும் தடையாக இருந்தவற்றை எல்லாம்
தகர்த்திடும் வகையில் எழுச்சி கவிதைகள் புனைந்து,இலக்கியத் தொண்டாற்றி தமிழுக்கு புது நெறி
காட்டிய பெரும் புலவர்.

'கன்னனொடு கொடை போயிற்று - உயர் கம்ப நாடனுடன் கவிதை போயிற்று'
என்று இருந்த காலத்தில், 'ஓராயிர வருடம் ஓய்ந்து வாராது வந்து சிறப்பாக
தமிழுக்கும் தமிழ்மக்கட்கும் பாரதியார் ஆற்றிய பணி அளப்பரியது.
ஒவ்வொரு துறையிலும் அவர் முன்னோடியாகவும்,முன் மாதிரியாகவும் திகழ்ந்தார்.

அவர் ஒரு மகாகவி, தீவிர தேசபக்தர், அரசியல்வாதி, சீரிய சிந்தைனையாளர்,
தத்துவஞானி தீர்க்கதரிசி,பத்திரிகையாசியர், புரட்சியாளர், இலக்கியப் படைப்புகளைப்
படித்து அவற்றின் நயங்களை அனுபவித்து,

ஆன்ற கவிஞர் அனைவோர்க்கும் முன் முதலாய்
தோன்றும் கவிதைச் சுடரொளியே நீ வாழ்க!
பேசுந் தமிழில் பெரும் பொருளைக் கூறிவிட்ட
வாசத் தமிழ் மலரே வாரிதியே, நீ வாழ்க!
தொட்ட தெல்லாம் பொன்னாகத் துலங்கும் கவிக்கடலே
பட்ட மரம் தழைக்கப் பாட்டெடுத்தோய், நீ வாழ்க !
எங்கே தமிழென்று என் தமிழர் தேடுகையில்
இங்கே தமிழென்று எடுத்து வந்தோய் நீ வாழ்க!

என்று கவிஞர் கண்ணதாசன் வாழ்த்தியதில் வியப்பொன்றுமில்லை.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். மரபு வழி வந்தவர் என்றாலும் அவர் மரபைக்
கண்மூடிப் போற்ற-வில்லை.பாமர மக்கள் அணுகும் வண்ணம் எளிய பதங்கள், எளிய நடை,எளிதில்
அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு ஆகியவற்றைக் கொண்டு
இலக்கியம் படைத்தார்.அது உலக இலக்கியமாகதிகழ்கிறது.பாரதியாரே தம்முடைய கவிதைகளில்
பாங்கை உணர்த்த முற்படும்போது,

''சுவை புதிது; பொருள்புதிது; வளம்புதிது;
சொற்புதிது;சோதி மிக்க நவகவிதை;
எந்நாளும் அழியாத மாக்கவிதை.
என்று பூரிப்போடும் பெருமித்ததோடும் கூறியுள்ளார்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் பின்பற்றிய நாயகன் நாயகி தத்துவத்தையும் உணர்வையும் பாரதி
பின்பற்றினார். அதில் அவர் தம்முடைய தனித்தன்மையை வெளிப்படுத்தியுள்ள திறம் வியக்கதற்குரியது.
பாரதி முன்பு இருந்த பாவாணர்கள் தம்மைக் காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் கற்பனை
செய்து பக்தி இலக்கியத்தைப் படைத்தனர்.பாரதி தம்மைக் காதலனாகவும் இறைவனைக்
காதலியாகவும் மாற்றிப் பாடினார்.அது மட்டுல்லாமல் இறைவனை தோழனாகவும்,தாயாகவும்,
தந்தையாகவும்,சேவனாகவும்,விளையாட்டுபிள்ளையாகவும்,ஆண்டானாகவும், குலதெய்வமாகவும்
பாடினார்.இறைக் கோட்பாட்டில் பாரதி பின்பற்றிய முறை,புரட்சி நிரம்பியதாகும்.பக்தி இலக்கியத்தில்
பாரதி செய்த புரட்சியின் விளைவாகப் பிறந்ததே கண்ணன் பாட்டு என்னும் கவிதைத் தொகுதியாகும்.

மக்கள் உணர்வுகளையே கவிதையாகப் பாரதி படைத்தார்;மக்கள் மொழியிலேயே கவிதைகளை
உருவாக்கினார்.பாரதியின் கவிதைகள் நிலைபேறு பெற்றவை. நிலவுலகம் முழுவதையும் நல்வழியில்
செலுத்துபவை.காரணம் சொல் புதிதாகவும் பொருள் புதிதாகவும் கொண்டு பாடி, ஒப்பில்லாத ஓர்
சமுதாயத்தை அமைக்க முயன்றிட்டார்.

பாரதியார் நாட்டு மக்களின் அறிவை வளர்க்க விரும்பினார்.அறியாமையை அகற்ற பாடுபட்டார்.
''மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை'' என்றார்.ஆற்றலைப் பெருக்க முயன்றார்.பொறித் தொழிலையும் மதித்தார். வீணில் உண்டு களிப்போரை நிந்தனை
செய்தார்.பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ந்து சொல்லப்பான்மை கெட்டுக்
கிடக்கும் தமிழ் மக்களைச் சாடினார். வாய் இருந்தும் ஊமையராய்க் காது இருந்தும்
செவிடர்களாய்க், கண் இருந்தும் குருடர்களாய் வாழும் மக்களை வெறுத்தார்.


தமிழ் மக்களை திசையெட்டும் செல்லச் சொன்னார்.கலைச் செல்வங்கள் அனைத்தையும்
கொண்டு வந்து சேர்க்க சொன்னார்.
''சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்''.... என்றும்,

''இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்'' என்றார்.

உலகத் தொழிலனைத்தையும் உவந்து செய்யுமாறு கோரினார்.எண்ணிய முடித்தல் வேண்டும் என்றார்.
திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்றார். தெளிந்த நல்லறிவு வேண்டும் என்றார்.தெருவெல்லாம் தமிழ்
முழக்கம் செழிக்க செய்ய வேண்டும் என்றார். தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை
செய்தல் வேண்டும் என்றார்.வேண்டாத பழைமையை விலக்கினார்.புதுமையைப் புகுத்தினர்.மூடப்பழக்க
வழக்கங்களை வெறுத்தார்.குருட்டு நம்பிக்கைகளை எதிர்த்தார். எல்லாவற்றிலும் சீர்திருத்தம்
வேண்டினார்.புரட்சியை விரும்பினார். புதியதோர் புதுமை உலகம் காண துடிதுடித்தார்.


அதே சமயம் மக்களின் அறிவற்றவர்களாகத் திகழ்கிறார்களே என்பதை எண்ணி மனவேதனை
அடைந்தார்.மனித வாழ்வில் ஆக்க வினைகள் அத்துணையும் அறிவுதான் அடிப்படை என்பதைப்
பாரதியார் வாய்ப்பு அமையும்போதெல்லாம் வலியுறுத்த தவறவில்லை.அறிவைத் தவிர,மனிததை
ஆட்டிப்படைக்கும் ண்டவன் வேறொன்று இருக்க முடியாது என்று சுட்டுகிறார்.

'' ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்- பல்லாயிரம்
வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ''

அறிவை தேடாமல் பல யிரக்கணக்கான தெய்வங்களைத் தேடித்தேடி, அலைந்து அலைந்து திரியும்
மக்களைப் பாரதியார் அறிவிலிகள் என்று அழைகிறார்.தமிழ் மக்கள் பாமரராய், விலங்குகளாய்ப் பலர்
இகழ்ந்து பேசப் பான்மை கெட்டு வாழ்கிறார்களே என்பதை எண்ணி எண்ணி மனம் நொந்து போனார்.

''நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி அஞ்சிச் சாவார் -- அவர்
அஞ்சாத பொருளில்லை அவனிலே!
எண்ணிலா நோயுடையார் -- இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் -- பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் -- பத்து
நாலாயிரம் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே -- இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்''

என்று சொல்லிச் சொல்லி பாரதியார் நெஞ்சம் பதைத்தார்.
அறியாமை,கொத்தடிமை,பெண்ணடிமை,தீண்டாமை,ஏழமை,வறுமை,இல்லாமை, போதாமை,கல்லாமை,
கயமை,மூடபழக்கம், மூடநம்பிக்கை,பேதமை,தீய பண்புகள் போன்ற சமுதாயக் கேடுகளை களைய
பாடுபட்டார்.

' 'தமிழ் மக்களுக்கு இயற்கை கடவுள்
நிலமும் வச்சான், பலமும் வச்சான்,
நிகரில்லாத செல்வமும் வச்சான்.,
ஒன்று வைக்க மறந்திட்டான்,

ஒன்று வைக்க மறந்திட்டான்,
அதுதான், புத்தியில்லை!புத்தியில்லை!''

பாரதியாரின் பாட்டை கேட்டு எல்லோரும் வியப்பும்,சிரிப்பும் கொண்டார்களாம். தமிழ் மக்கள்
அறிவற்றவர்களாகத் திகழ்கிறார்களே என்பதை எண்ணி, பாரதியார் எப்படி எல்லாம் மன
வேதனையுற்றிருந்தார் என்பதற்கு, மேலே சுட்டிக்காட்டிய நிகழ்ச்சியே தக்கதொரு சான்றாகும்.

''மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்- எதன்
ஊடும்நின் றோங்கும் அறிவொன்றே
தெய்வமென்று ஓதி யறியீரோ''

**********************************
'' சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ -- பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?''

***************************************
''மெள்ளப் பலதெய்வம் கூட்டிவளர்த்து
வெறும் கதைகள்சேர்த்துப் பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மை
காட்டவும் வல்லீரோ?



என்பது பாரதியின் வாக்கு.மாடன்,காடன், வேடன் போன்ற பெயர்களைச் சொல்லி, அவற்றை
கடவுள்களாய்ப் போற்றி வழிபடுபவர்களைப் பாரதியார் ''மதியிலிகள்''என்று குறிப்பிடுகிறார்.எந்த ஒரு
உயிரினத்திலும் பொருந்தியிருந்து வளர்ந்தோங்கும் அறிவு ஒன்றேதான் தெய்வமாகும் என்று
வலியுறுத்திக் கூறுகிறார்.சுருதிகளெல்லாம் சுத்த அறிவுதான்
சிவமென்று கூறுகின்றன என்றும், மக்கள் பல பித்த மதங்களிலே மயங்கி தடுமாறிப் பெருமை
இழக்க கூடாது என்றும் மொழிகிறார். மூட மக்கள் வெறுங் கதைகள் பலவற்றைக் கட்டி வளர்த்து
வருகின்றனர் என்றும், கள்ள மதங்கள் பலவற்றைப் பரப்புவதற்கு, மறைகள் பல காட்டவும் குருட்டு
நம்பிக்கை கொண்ட மக்கள் உரைக்கின்றார்.

சமுதாய மூடப்பழக்க வழக்கத்தில்,முதல் முட்டுக்கட்டையாகப் பாரதிக்குப்பட்டது, சமயத்துறை.சமயத்
துறை ஒரு சங்கட துறையாக பாரதிக்கு பட்டது.சமயத்தின் வேராக விளங்கும் அடிப்படையையே
ஆட்டிவிடவேண்டும் என்று முரசு கொட்டினான்.கையால்தான், சாதிகளில்லையிடி பாப்பா- குலம் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல் பாவம்''.என்றான். பாரதி நாட்டு விடுதலைக்காகவும்,மொழி வளர்ச்சிக்காவும்
மட்டுமின்றிச் சமுதாய விடுதலைக்காவும் பாடுபட்ட தமிழ் மறவர். அவரது பாடல்களில் காணப்படும்
பொதுவுடைமைக் கருத்துக்களின் எதிரொலியாகப் புதிய ஆத்திசூடி எழுத முற்பட்டான்.சமுதாய
மூடப்பழக்க வழக்கத்தில்,முதல் முட்டுக் கட்டையாகப் பாரதிக்குப் பட்டது.சமயத்துறைதான். சமயத்துறை
ஒரு சங்கடத் துறையாகக் கவிஞனுக்குப்பட்டது. சமயத்தின் வேராக விளங்கும் அடிப்படையையே
ஆட்டிவிட வேண்டும் என்று முரசு கொட்டினான் பாரதி.அவன் துடித்த உள்ளத்திலிருந்து வெடித்து
எழுந்தன... சில வரிகள்.

சோதிடந் தனைஇகழ்
தெய்வம் நீ என்றுணர்
பேய்களுக்கு அஞ்சேல்
மெளட்டியந் தனைக்கொல்

சோதிடமும்,அஞ்ஞானமும்,பேயும்,மாயமந்திரங்களையும் சமுதாய முன்னேற்றத்தின் முட்டுக் கட்டைகள்
என எண்ணினான் பாரதி.இவற்றை வைத்து வாணிகம் நடாத்தும் கும்பல் பாரதியின் கண்முன்
தென்பட்டது.கணக்கு அறிவியலாகிய சோதிடத்தை வைத்து காசு பறிக்கும் கயமைப் பாரதி
கண்டித்தான். தெய்வத்தைக் காட்டித் தன் இனத்தை உயர்த்தி,மற்றைய இனங்கள் அனைத்தையும்
தாழ்த்தும் நயவஞ்சகரைப் பாரதியின் பார்வை சுட்டெரித்தது. பேய்,பிசாசு என்று சொல்லிப் பூசை
கொடுக்கும் பூசாரிகளின் பொல்லாங்கு பாரதியைப் புல்லரிக்கச் செய்தது.மாய மந்திரங்களைக்
காட்டி மக்களை மயக்கி ஏமாற்றும் மந்திரவாதிகள் பாரதியின் முதல் எதிரிகளாய் காட்சி அளித்தனர்.

புதிய ஆத்திசூடியில் தொடங்கிய பாரதியின் சமுதாய சீர்திருத்தத் தொண்டு,அடுத்துச் சாதி ஒழிப்பில்
வளரத் தலைப்பட்டது.ஆதியிலே வந்ததல்ல சாதி, நீதியிலே வந்தது இந்தப் பாதகம். அதை வீதியிலே
வீசியெறிய வேண்டும் என்றான.்

சாத்திரம்','சாதி' என்ற சொற்கள்,மிக நீண்ட கால மக்கள் வழக்கத்தில் பல பொருள் மாற்றங்களைப்
பெறுள்ளன. ''சாத்திரங்கள் குப்பைகள்''என்றும் ''சாதிகள் தீயன''என்றும் சொல்லும் அளவுக்கு

இவ்விரண்டு சொற்களும் தம் உண்மைப் பொருளை இழந்து நிற்கின்றன.

சாத்திரம் கண்டாய்,சாதிகள் உயிர்த்தலம்
சாத்திரம் இன்றேல் சாதியில்லை

என்று பாடினார். பாரதியார் கொண்ட பொருள் அவர் காலம் வரை வழக்கத்தில் இல்லை. சமய
வழிச் சாத்திரங்கள்,தமிழர்களுக்குள்ளேயே பல வகைச் சாதிகளும் நிலவி வந்தன.இந்தப்
பொய்மைச் சாத்திரத்தைப் பின்பற்றியதாலேயே தாழ்ந்த நிலை தமிழினத்துக்கு வந்தது.

'பொய்மைச் சாத்திரம் புகுந்திடில் மக்கள்
பொய்மையாகிப் புழுவென மடிவர்
என்று பாடிய பாரதி, தான் சாத்திரம், சாதி ஆகியவற்றுக்கு பொருள்படி மக்கள் வாழ்ந்து அந்த
நிலையில் ஒரு கேடுவரினும் அதற்குக் கழுவாய் உண்டு என்றும் பாடினார்.சாத்திரம் என்பதற்கு
பாரதி கொண்ட பொருள்,

''அறிவோடு பொருந்திய கொள்கை;
அக்கொள்கையால் சமூகம் முழுவதற்கும் கருணை'' என்பதே,

''சாத்திரம்-அதாவது மதியிலே தழுவிய
கொள்கை, கருத்து குளிர்ந்திடு நோக்கம்,''

சாத்திரம் என்பதற்கு வழக்கத்தில் சமயவழி ஆசாரங்கள் என்றே பொருள் கொள்கிறோம்.
பிறிதோரிடத்தில் பாரதியார் ''சாத்திரம் ஏதுக்கடி கண்ணம்மா'' என்று கேட்கும்போது சமயவழி
ஆசாரத்தையே குறிப்பிடுகிறார்.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><>

இதே போல், சமுதாய அடிமைத்தனத்திலிருந்து பெண்களை விடுவிப்பது என்பதும் பொதுவுடைமைக்
கொள்கையின் அடித்தளங்களில் ஒன்றாகும். இன்றைய பொதுவுடைமைச் சமுதாயங்களில் அனைத்திலும்
பெண் விடுதலை என்பது அனைத்துத் துறைகளிலும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு நிலை நாட்டப்

பட்டுள்ளதைக் காண்கிறோம். வரலாற்றை நோக்கும்போது பெண்மைக்கு உயர்வும் தாழ்வும் மாறி,மாறி
கற்பிக்கப்பட்டன என்ற உண்மையை உணரலாம்.உலோப முத்திரை போன்ற பெண்களை அறியும்போது
வேதகாலத்தில் பெண்மைக்கு மதிப்பிருந்ததை உணரலாம். இடைக் காலத்தில் பெண்மை மதிப்பப்பெறவில்லை.

கேள்வி மிகவுடையோர்,கேடில்லா நல்லிசையோர் கூடியிருக்கும் அவையில் பாஞ்சாலியை அவமானப்
படுத்தும் முயற்சியும் நிகழ்ந்திருக்கிறது.''நுண்ணறிவுடைய நூலோடு பழகினும் பெண் அறிவு என்பது
பெரும் பேதமைத்து'' என்று பாடும் காலமும் இருந்தது.பரிமேலழகர் போன்று ''இயல்பாக அறியும்
அறிவு இல்லை'' என்று குறிப்பிடக்கூடிய அளவுக்குப் பெண்மை தாழ்வாகக் கருதப்படுகிறது.

பெண்மையை இழிவுபடுத்தும் போக்கை நிறுத்தி, பெண்மையைப் போற்றினால் அது ''உயிரைக் காக்கும்;
உயிரினைச் சேர்த்திடும்;உயிரினுக்கு உயிராய் இன்பமாகிடும்!'' என்று அறிவுறுத்திப் புதுமையை
நிகழ்த்தினார். பாரதியார்.ஆண்மை தன் கடமையில் தவறிட்டால் பெண்மை சீறியெழுந்து அனைத்தையும்
அழித்துவிடும்கண்ணகி,சீதை,பாஞ்சாலி ஆகிய காவிய நாயகியர் வரலாறு இந்த உண்மையை உணர்த்து
உள்ளது. பாரதியார் இதனை,

''பெண் அறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிற்கொரு தாழ்வில்லை'' என்று பாடினார்.

பெண்கள் எழுச்சி கொள்ளவேண்டும் என்று பொதுப்படக் கூறாமல், எழுச்சியுற்ற பெண்மைக்கு ஆண்மை
பாதுகாப்புத் தரவேண்டும் என்பதே பாரதி செய்த புதுமை,பாரதியின் சமுதாயப் பார்வை. பெண் விடுதலை
பெற என்ன வழி? பழமை மாயவது எப்போது? புதுமை புலர்வது எப்போது?பாடுகிறார் பாரதி,

''அறவி ழுந்தது பண்டை வழக்கம்
ஆணுக் குப்பெண் விலங்கெணும் அஃதே
விடியும் நல்லொலி காணுதி நின்றே
மேவு நாக ரிகம்புதி தொன்றோ
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு, தாம் முதல் என்றன ரன்றே
அடியோ டந்த வழக்கத்தைக் கொன்றே
கடமை செய்வீர், நந்தேசத்து வீரக்
காரி கைக்கணத் தீர் துணி வுற்றே...''

இப்படி மூட நம்பிக்கையின் முகமூடியைக் கிழித்தெறியத் தன் பாட்டையும், உரை நடையையும்
பயன் படுத்தினான் பாரதி.புதுமையைச் செய்ய விழையும் பாரதியார் அதைப் பொறுப்புடன்
செய்திருக்கிறார் என்பது ஒரு தனிச் சிறப்பு. புதுமையை மேற்கொள்ளும் முயற்சியில் பெண்மை
வரம்புகடந்து விடுமோ என்ற அச்சத்தையும் பாரதியார் போக்குகிறார். எழுச்சியுற்ற பெண்மை
அறநெறியினின்றும் திரும்ப மாட்டார்கள் என்று கூறுகிறார்.

''நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞான்ச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்''

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்த தமிழ்மொழியைப் புகழிலேற்றும் புலவர்கள்
இனி வரப்போவதில்லை.தமிழ்மொழியின் வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டபோது
''நான் இருக்கிறேன்'' என்று மார்தட்டும் பெருமாளாக வந்தார் பாரதி.

இப்படி சமுதாய நோக்கில் மூடநம்பிக்கையின் முகமூடியைக் கிழித்து எறிய தன் பாட்டை,உரை
நடையும் பயன்படுத்தினான்.ஆனால்,அவன் கண்ட கனவு முழுவதும் நிறைவேறவில்லை. அரை
குறையாகத்தன் நிறைவேறியிருக்கிறது.அந்த பைந்தமிழ்ப் பாவாணன் கனவு நிறைவேற, அவன்
கண்ட கனவு நனவாக நாமும் பாடுபடுவோமாக!

அன்புடன்
சிங்கை கிருஷ்ணன்

No comments: