Friday, June 30, 2006

காசி யாத்திரை பகுதி--2/2

....இங்கு நவராத்தியும்,சிவராத்திரியும் விசேஷமானது. காசி விசுவநாதர்,அன்னபூரணி,விசாலாட்சி ஆகிய மூன்று ஆலயங்களிலுமே நாதசுர இசை
உண்டு.தமிழ் நாட்டின் முத்திரையை அங்கே மனம் குளிரப் பார்த்து காது குளிர கேட்கலாம்.


விசுவேசம் - மாதவம் துண்டியும் - தண்டபாணிஞ்ச பைரவம்
வந்தே காசிம் குஹாம் கங்காம் பவானிம் மணிகர்ணியம்.
இது காசியில் உள்ள முக்கியமான மூர்த்திகள்.
காசியில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு தெருவுக்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு படித்துறையும் ஒரு புராணத்தின் அங்கமாக விளங்குகிறது. ஑ஒகங்காஒஒ என்றால் ஓடிக்கொண்டு இருப்பவள் என்று பொருளாம்.இந்து மதத்தின் பிரயாணத்தை ஓடிக்கொண்டே கவனிக்கும் புனித நதி கங்கை. அதன் கரையில் அமைந்திருக்கும் மூன்று கோயில்கள்.

மாதவம் :-- திருவேணி சங்கமத்தில் வேணிமாதவர்,காசியில் பிந்துமாதவர்,இரமேசுவரத்தில் சேதுமாதவர் ஆகிய மூன்று மூர்த்திகளின் தரிசனமும்,காசி யாத்திரையில் முக்கியமானது.காசியில் பிந்துமாதவர் ஆலயம் பஞ்ச கங்கா கட்டத்தில் அமைந்திருக்கிறது.கார்த்திகை மாதம் முப்பது நாட்களும் பெண்கள் பஞ்சகங்க கட்டத்தில் கங்கையில் நீராடி விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள்.அகல் விளக்கு ஏற்றி சிறு கூடையில் வைத்து,மூங்கில் நுனியில் அந்தக் கூடையைத் தொங்க விடுகிறார்கள்.இதை ஆகாச தீபம் என்று வணங்குகிறார்கள்.

பஞ்ச கட்டத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து படிகள் மேலே போனால் பிந்து மாதவர் ஆலயத்தை அடையலாம். இங்கே உள்ள மூர்த்தி நாராணயன் சங்கு,சக்கர,கதா பதம சொரூபராகப் பெருமாள் நிற்கிறார்.

மண்டபத்தின் வலது புறம் ஜகஜீவனேசுவர் என்ற சிவலிங்கமும் பூஜைக்கு உரியதாக அமைந்திருக்கிறது.
சிலாவடிவான பிந்து மாதவரின் இரண்டு பாதங்களை வெளியே காணப்படுகின்றன.அங்கு கங்கை நீரை அபிஷேகம் செய்வித்து,மலர்களைப் போடுகிறார்கள். கங்கா நீர், மலர் பிரசாதம் கிடைக்கிறது.

துண்டிம் :-- இது செந்தூர நிறத்தில் உள்ள விநாயகர் கோயில். நாம் சாலை ஓரத்தில் அமைத்து
வணங்கும் சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே, விநாயகர் அமர்ந்திருக்கிற கோலத்தில் காட்சி தருகிறார். விநாயகருக்குச் செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். விநாயகரின் வடிவம் பூரணமாக இல்லை.துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து
வழிபடுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் கணபதி மகராஜிடம் உத்தரவு பெறாமல் போககூடாது என்று
சம்பிரதாயம் இருக்கிறது.

தண்டபாணி :-- கேதாரேசுவரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் தண்டபாணியின் சிறு ஆலயம் அமைந்துள்ளது. இது முழுவதும் சலவைக் கல்லால் இழைக்கப்பட்டிருக்கிறது.முழுங்காலுக்கு நேரே இரு கைகளிலும் ஒரு தண்டத்தைப் பிடித்துக்கொண்டு,சுவாமி குத்திட்டு அமர்ந்திருக்கிறார். கழுத்திலும், தலைச்சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு செய்கின்றன.சிவகணங்களில் ஒருவர் என்று இங்கு வழிபடுகிறார்கள். சிவபெருமானை ஆராதித்துப் பெருமை பெற்ற தண்டநாயகன் இந்தத் தொண்டருக்குக் காசிக்கு வரும் பக்தர்கள் வணக்கம் செலுத்திவிட்டுப் போகிறார்கள்.

பைரவர் :-- காலபைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்துக்கு ஒரு மைல் வடக்கே உள்ளது.காசிப் பட்டணத்துக்கே இவர்தாம் காவல்காரர் என்று சொல்லுகிறார்கள்.கோயில் வாயிலில் காசிக்கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டுகிறார்கள். அது உடல் நலத்திற்கும்,வாழ்க்கை வளத்துக்கும் காப்பாக அமையும் என்று சொல்லுகிறார்கள்.பைரவருக்கு நாய்தான் வாகனம்.காசிக்கு வருபவர்கள் பைரவர்க்கு கணக்குச் சொல்லி விடைபெற்று செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

காசி:-- இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதிகாசி.இது ஒருசிறு கோயில்.. இங்கு லிங்கமும்,
சிவமூர்த்தியும் இருக்கின்றன.கங்கை நீரையை சுவாமி மீது பொழிந்து மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

குஹாம் :- இது சிறு வாயிற்படி கொண்ட குகை.இந்த குகையின் வாயிலில் ஜைகிஷ்வ்யர் என்ற முனிவர்க்கு சிவபெருமான் தரிசனம் கொடுத்து மோட்ச பதவி அளித்ததாகக் கூறுமிறார்கள்.இந்த குகை வழியாகச் சென்று கைலாசத்தை அடையலாம் என்று ஒரு சம்பிரதாயக் கதையும் கூறுகிறார்கள்.விசேஷ
பூஜை எதுவும் இல்லை.தரிசனம் மட்டும்தான் கிடைக்கிறது.

கங்காம் :- இது ஆதிகங்கை இருந்த இடம்.பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தான் என்பது புராணம். இங்கே கங்கையைத் தடாகமாக, நீர் நிலையாகக் கொலுவிருக்கச் செய்திருக்கிறார்கள்
ஆதிகங்கையின் நீரைப் புரோட்சணம் செய்து கொண்டால்தான் கங்கை குளியல் பலன் முழுமையாகும்.

முற்றும்.

அன்புடன்
கிருஷ்ணன்

2 comments:

ஜயராமன் said...

அழகான ஒரு யாத்திரீகர்களுக்கான பயண குறிப்பை கொடுக்கிறீர்கள். அந்த காசி நகரின் சத்தங்களும் காட்சிகளும் எத்துனை வருடம் ஆகியும் என் மனதை விட்டு அகலவில்லை. அந்த துளசிதாஸர் கோவில், ஹனுமான் காட் சவுத் இண்டியன் கோவில், பனாரஸ் பல்கலைகழகம், சங்கடமோசன் ஆஞ்சநேயர் கோவில், கேதாரேஸ்வர்ர் என்று எல்லாவற்றையும் விவரமாக எழுதவும்.

நன்றி

சிங்கை கிருஷ்ணன் said...

காலத்தாழ்வாக்கு வருந்தி,
தங்களின் இடுகைக்கும் கனிவிற்கும்
நன்றி கூறுகிறேன்.

வாய்ப்பும் வசதியும் ஏற்படும் போது,
நீங்கள் குறிப்பிட்டவைகளை எடுத்து
எழுதுகிறேன்.