Tuesday, August 31, 2010

சித்தர்களின் வழியில்.., - குகை நமச்சிவாயர் #1

கன்னட நாட்டில், திருப்பருப்பதம் அல்லது மல்லிகார்ச்சுனம்
என்ற ஊரில் சிவனது திருவருளைப் பெற்றுச் சிறப்புற்றிருந்த
அன்பர் ஒருவர் இருந்தார். அந்த அடியவரிடம்
அண்ணாமலையார் தோன்றி திருவண்ணாமலைக்குச்
சென்று அங்கு ஞானகுருவாக எழுந்தருளி
இருக்குமாறு கட்டளையிட்டார்.

அந்த அடியவர் பெயர் நமச்சிவாயர். உடனே
நமச்சிவாயர் தென்திசை நோக்கிப் புறபட்டார்.
புறப்பட்டு வரும் வழியிலே உடன் வந்த அடியாருடன்
ஓரூரை அடைந்தார். அவ்வூரில் ஒரு திருமணம்
நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அவ்வழியில்
வந்த அடியாரை திருமண வீட்டிற்குரிய தலைவன்,
மாலை அணிவித்து வரவேற்று திருமண வீட்டிற்கு
அழைத்துச் சென்றான்.

திருமண வீட்டாரும் அங்கு வந்திருந்தவரும்,
திருநீறு பெற்றுக் கொண்ட பின், வீடு தீப்பற்றிக்
கொண்டது. தீருநீறு அத்தகைய சக்தியும்,
அனலும் கொண்டது. ''இவ்வடியார் கொடுத்த
திருநீற்றினால்தான் வீடு எரிந்து போயிற்று'' என்றனர்.

அவர்கள் உரைத்தவற்றைக் கேட்ட அடியவர்
சிந்தை நொந்து சிவபிரானை நினைந்து மீண்டும்,
எரிந்தவற்றை எல்லாம் படைத்தருளினார்.
வெந்து போன்வெல்லாம் மீண்டும் உண்டான
அருஞ்செயலைக் கண்டவர்கள்,
இந்த சிவனேயாவர் என்று போற்றினர்.

அங்கிருந்தவர் அனைவரும் அகம் மகிழ,
''நான் இனி ஒருவர் மனையிடத்தும் செல்லேன்''
என்னும் ஒரு விரதத்தினை மேற்கொண்டு
அவ்விடம் விட்டுப் புறப்பட்டார். புறப்பட்ட நமச்சிவாயர்
மாணவரோடும், அடியவரோடும் காலையில்
பூவிருந்தவல்லி வந்து சேர்ந்தார். அவர்கள் அனைவரும்
சிவபூசை செய்யும் பண்பினர். ஆதலால், ஊரில் உள்ள
தோட்டங்கள் எங்கும் உள்ள மலர்களை பறித்தனர்.
அம்மலர்கள் அங்குள்ள கோயில் வழிபாட்டிற்குரிய
மலர்கள். செய்தி அரசுக்கு எட்டியது.

ஆகவே, அவ்வூர் அரசு அலுவர்கள் நமச்சிவாயரை
அழைத்து,''உரியவைக் கேளாமல் தோட்டங்களில்
புகுந்து கோயில் பூசைக்கும் மலரில்லாமல்
பூக்களைப் பறித்தது குற்றமாகும்..
இதற்கு என்ன சொல்கிறீர்?'' என்றனர்.

அப்போது நமச்சிவாயர், தங்கள் மேல் குற்றம்
சுமத்துவோரை நோக்கி,, ''நாங்கள் பறித்த பூக்கள்
எல்லாம் நீங்கள் சொல்லும் கோயிலில் உறையும்
இறைவனுக்கே சார்த்தப் பெற்றன..
அம்மலர்கள் வீணாக்கப்படவில்லை'' என்றார்.

அதற்கு அவர்கள்., ''கேட்ட கேள்விக்கு நேரான
விடை சொல்லாமல் உயர்ந்த தத்துவம் பேசுகின்றீர்;
உங்கள் சொந்தப் பூசையில் உங்கள் வழிபடு தெய்வத்திற்கு
அணியப் பெற்ற பூக்களை இவ்வூர்க் கோயிலில்
உறையும் இறைவன் ஏற்றுக்கொண்டான் என்று
நீங்கள் சொல்வது உண்மையானால், இவ்வூர்க் கோயிலில்
உள்ள சிவலிங்கத்திற்கு அணியப்பெற்றுள்ள மாலையானது
அனைவரும் காணும்படி, உம் கழுத்திடம்வருதல் வேண்டும்'' என்றார்.

அதற்கு நமச்சிவாய மூர்த்தி உடன்பட்டு சிவபிரானுடைய
திருவடிகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சிவபிரான் கோயிலில் உள்ள
அருச்சகர்கள் இறைவனுக்குச் சார்த்தியுள்ள மாலையின்
பின்புறத்தில் ஒரு கயிற்றினைக் கட்டி, ஒரு சிறுவனைச்
சிவலிங்கத்தின் பின் புறமாக அமரச்செய்து, அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்குமாறு செய்தனர்.

நமச்சிவாயர், ''நற்றுணையாவது நமச்சிவாயவே'' என்று
பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டு இறைவன் முன்பாக
நின்று கொண்டிருந்தார். அப்போது அனைவரும் காணச்
சிறுவன் பிடித்திருந்த கயிறு அறுந்து மாலையானது
நமச்சிவாயரின் கழுத்தில் மிளிர்ந்தது.

கண்டவர் அனைவரும் வியப்புற்று நமச்சிவாயரைப்
பெரிய ஞானியாராக ஏற்றுப் பாராட்டினர். இந்நிலையில்,
அந்தப்பகுதியில் ஆட்சி செய்த புறமதத்து அரசன்,
நமச்சிவாயாரையும் அவர் மாணவர்களையும் ஆழமாகச்
சோதனை செய்து பார்க்க விரும்பினான்.

நமச்சிவாயரை பார்த்து, ''உங்கள் சைவ சமயம்
உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட சமயம்; எல்லா
வகையிலும் உயர்ந்து விளங்கும் சமயம் என்று
உம் போன்றவர்கள் பேசப்படுவது உண்மையானால்,
நான் சொல்கின்றவாறு மெய்ப்பித்துக் காட்ட
இயலுமா?'' என்று கேட்டான்

''இறைவன் திருவருளைத் துணையாகக் கொண்டு
உம் விருப்பம் போல் மெய்பிக்காட்ட இயலும்'' என்றார்.
அரசன் நமச்சிவாயரை, ''பழுக்கக் காய்ச்சிய இரும்பினை
கையில் பற்றிக்கொண்டு, சைவ சமயமே சிறந்தது;
அச்சமயத்திற்குரிய தெய்வம் சிவபிரானே!
என்று சொல்ல வேண்டும்,

[தொடரும்]
--
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/
http://singaporekovilgal.blogspot.com/

No comments: