Monday, September 11, 2006

பாரதியார்-2

நல்லதோர் விணை

''பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை;
குவிக்கும் கவிதைக் குயில்; இந்நாட்டைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை யூற்றாம் கவிதையின் புதையல்!
திறம்பாடி வந்த மறவன்; புதிய
அறம் பாடி வந்த அறிஞன்; நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்பும் கணையா விளக்கவன்! ''
-- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்.
அடிமை இருளை அகற்றத் தோன்றிய 'இளம் ஞாயிறு' 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய'
இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட,அறியாமை இருள் நீங்கிட,சமுதாயம் சீர்பெற்றிட,
வறுமையை வெளியேற்ற 'எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை'
ஆகவேண்டும் என்று கனவு கண்டவர்.

சொல் புதிதாகவும் பொருள் புதிதாகவும் கொண்டு பாடி, ஒப்பில்லாத ஓரு சமுதாயத்தை அமைக்க
முயன்றிட்டார். வயிற்றுக்குச் சோறிடவேண்டும்,பயிற்சி பல கல்வி தந்து தமிழ் சமுதாயத்தை இந்த
பாரையில் உயர்த்திட வேண்டும்.... ஞானமும்,பரமோனமும்,புத்தர் பிரானின் இன்னருளும் பொழிந்த
இந்த பழம்பெரும் பூமியில் மனவளம் பெற்று, கல்வியில் சிறந்திடவேண்டும் என்று தம் கவிதைக்
கனல் கொண்டு போக்கிட முயன்றிட்டான். காலம் படைத் திட்ட சிறந்த கவிஞன் என்றால்
அது மிகையாகாது.
............................................................................

1921ம் ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதம் திருவல்லிக்கேணி கோயில் யானை தும்பிக்கையால்
தள்ளிவிட குவளை கண்ணன் காப்பாற்றுகிறார். அதிர்ச்சியால் நோயுறுகிறார். பின்னர் குணமாகி
அலுவலகமும் செல்கிறார். ஆனால் செப்டம்பர் மாதம் வயிற்றுக் கடுப்பு கண்டு படுத்த படுக்கையாகிவிடுகிறார்.
செப்டம்பர் 11ம் தேதி நோய் கடுமையாகி விட, பாரதி மருந்துண்ண மறுக்கிறார்.

செப்டம்பர் 12ம் தேதி இரவு அவர் எழுதி அவரால் மிக விரும்பப்பட்ட
"நல்லதோர் வீணை செய்து " பாட்டை பாடச் சொல்லி கேட்டிக்கார்.

பாரதியார் நல்ல,ஆரோக்கியமான உடலினை பெறாதவர் ஆகையால் தமது உடலுக்கு வலிமைத்
தருமாறு பராசக்தியிடம் வேண்டுகிறார்.மனித உடலை வீணையோடு ஒப்பிடுகிறார் பாரதியார். மனித
உடலை வீணையோடு ஒப்பிட்டு, அதனை சங்கீத சாத்திரப்படி நிரூபித்து காட்டுகிறார் இசைப்
புலவரான தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்.

பாரதியார், நல்லதோர் விணைக்கு நிகராக தம் உடலை கற்பனை செய்து,
'அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
என்று பராசக்தியிடம் கேட்கிறார்.ஆரோக்கியமற்ற உடலை புழுதியில் எறிப்பட்ட
நல்லதோர் வீணைக்கு பாரதியார் ஒப்பிடுகிறார்.
''வல்லமை தாராயோ?'' என்றும் காளியைக் கேட்கிறார்.

தமது உடலுக்கு வலிமை தருமாறு கேட்பது தாமும் தமது குடும்பத்தாரும் வாழ்வதற்காக
அல்ல என்பதனையும் நாடு பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ? என்று கேட்கிறார்.

உயர்ந்த இலட்சியங்களை கொண்ட நாட்டுப் பற்றுகொண்டவரானும் உறுதியுடைய
உடலை பெறாதவர் பூமிக்கு பாரந்தானே!

நல்லதோர் வீணைசெய்தே - அதனை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?
சொல்லடி சிவசக்தி! -எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்;
வல்லமை தாராயோ; - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
''உடலுக்கு வல்லமை தாராயோ?'' எண்டு கேட்கும் பாரதி, எப்படிப்பட்ட வல்லமை என்பதையும் விளக்குகிறார்.

''விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்!
தசையினை தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்;
அசைவறு மதிகேட்டேன்; - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

ஆம். விசையுறு பந்தினைப்போல் தம்முடைய உடம்பு தாம் விரும்புகிறபடி எல்லாம் வேகமாக
நடைபோட்டு, நாடு விடுதலை பெற உழைக்க வேண்டும்!துன்பங்களைக் கண்டு அஞ்சாத மனம்
வேண்டும், நித்தம் நித்தம் புத்துணர்ச்சியைப் பெறும் சக்தி தமது உயிருக்கு வேண்டும் என்று
வேண்டுகிறார்.

''தசையினை தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் அகங்கேட்டேன்''
என்னும் வரிகளிலே, பெரு நெருப்பு உடம்பை எரித்துக்கொண்டிருக்கும் நேரத்திலும் பராசக்தியைப்
பாடி பக்தி செய்கின்ற உள்ளம் தமக்கு வேண்டும் என்கிறார்.அத்துடன் மதியும் சலனமற்றுச்
செயல்பட வேண்டும் இன்பத்தைக் கண்டு மயங்காமல்,துன்பத்தைக் கண்டு மருளாமல் மதி
துணிவோடு செயல்பட வேண்டுகிறார். இவ்வளவுவையும் சொல்லிவிட்டு...,
-- ''இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ''
என்றும் பராசக்தியிடம் நெஞ்சுரத்தோடு கேட்கிறார்.

வள்ளலார் ஆன்மிகத்தில் பாரதியாருக்கு முன்னோடியாக விளங்கியவர் எனலாம்.
மரணமிலாப் பெருவாழ்வு வேண்டுவதிலே பாரதியாருக்கு வழிகாட்டியவர் வள்ளலார்தான்
காற்றாலே அசைக்கப்படாத,புனலாலே மூழ்கடிக்கப்படாத, கனலாலே எரிக்கப்படாத,
கதிராதியாலே பாதிக்கப்படாத உடல் தமக்கு வேண்டுமென்று அம்பலவாணரிடம் முறையிட்டார்.

''காற்றாலே புவியாலே சுகனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே''

எந்நேரமும் தமிழ்க் கவிதைகளையேப் பாடிப்பாடி பராசக்தியை பக்தி செய்து வழிப்பட்டவர் பாரதியார்
''சக்தியென்று நேரமெல்லாம்
தமிழ்க்கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால்
பயமனைத்தும் தீரும்...'' என்று முழக்கமிட்டவர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஆன்ற கவிஞர் அனைவோர்க்கும் முன் முதலாய்
தோன்றும் கவிதைச் சுடரொளியே நீ வாழ்க!
பேசுந் தமிழில் பெரும் பொருளைக் கூறிவிட்ட
வாசத் தமிழ் மலரே வாரிதியே, நீ வாழ்க!
தொட்ட தெல்லாம் பொன்னாகத் துலங்கும் கவிக்கடலே
பட்ட மரம் தழைக்கப் பாட்டெடுத்தோய், நீ வாழ்க !
எங்கே தமிழென்று என் தமிழர் தேடுகையில்
இங்கே தமிழென்று எடுத்து வந்தோய் நீ வாழ்க!
என்று கவிஞர் கண்ணதாசன் வாழ்த்தியதில் வியப்பொன்றுமில்லை.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். மரபு வழி வந்தவர் என்றாலும் அவர் மரபைக்
கண்மூடிப் போற்ற-வில்லை.பாமர மக்கள் அணுகும் வண்ணம் எளிய பதங்கள், எளிய நடை,எளிதில்
அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு ஆகியவற்றைக் கொண்டு
இலக்கியம் படைத்தார்.அது உலக இலக்கியமாகதிகழ்கிறது.பாரதியாரே தம்முடைய கவிதைகளில்
பாங்கை உணர்த்த முற்படும்போது,

''சுவை புதிது; பொருள்புதிது; வளம்புதிது;
சொற்புதிது;சோதி மிக்க நவகவிதை;
எந்நாளும் அழியாத மாக்கவிதை.

என்று பூரிப்போடும் பெருமித்ததோடும் கூறியுள்ளார்.


மூட நம்பிக்கையின் முகமூடியைக் கிழித்தெறியத் தன் பாட்டையும், உரை நடையையும்
பயன் படுத்தினான் பாரதி.புதுமையைச் செய்ய விழையும் பாரதியார் அதைப் பொறுப்புடன்
செய்திருக்கிறார் என்பது ஒரு தனிச் சிறப்பு. புதுமையை மேற்கொள்ளும் முயற்சியில் பெண்மை
வரம்புகடந்து விடுமோ என்ற அச்சத்தையும் பாரதியார் போக்குகிறார். எழுச்சியுற்ற பெண்மை
அறநெறியினின்றும் திரும்ப மாட்டார்கள் என்று கூறுகிறார்.

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்த தமிழ்மொழியைப் புகழிலேற்றும் புலவர்கள்
இனி வரப்போவதில்லை.தமிழ்மொழியின் வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டபோது
''நான் இருக்கிறேன்'' என்று மார்தட்டும் பெருமாளாக வந்தார் பாரதி.
இப்படி சமுதாய நோக்கில் மூடநம்பிக்கையின் முகமூடியைக் கிழித்து எறிய தன் பாட்டை,உரை
நடையும் பயன்படுத்தினான்.ஆனால்,அவன் கண்ட கனவு முழுவதும் நிறைவேறவில்லை. அரை
குறையாகத்தன் நிறைவேறியிருக்கிறது..அந்த பைந்தமிழ்ப் பாவாணன் கனவு நிறைவேற, அவன்
கண்ட கனவு நனவாக இந்த பாரதி நினைவு நாளில் நாமும் பாடுபடுவோமாக!
நன்றி, வணக்கம்.

அன்புடன்,
கிருஷ்ணன்,
சிங்கை
..........................................
இன்பத் தமிழ் எங்கள் மொழி.
தமிழ் எமது மொழி.
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/

No comments: