Wednesday, November 29, 2006

திருவண்ணாமலை தீபம் - இலக்கிய விளக்கீடு!


அன்பர்களே,

எதிர்வரும் 03-12-06 திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாள் விழா.
அதனைமுன்னிட்டு கார்த்திகை தீபம் குறித்த எண்ணங்களை தமிழ் உலக
அன்பர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.


இலக்கியத்தில் விளக்கீடு. #1



இலக்கிய ஆதாரங்கள்.

தீபம் + ஆவளி = தீபாவளி. 'ஆவளி' என்றால் வரிசை என்று பொருள்!
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்பதே அர்த்தம்.தீபங்களை ஏற்றி
வரிசையாக வைத்து வழிபாடு நிகழ்வு, திருக்கார்த்திகை தீபவிழாவின் போதுதான்
நிகழ்ந்து வருவது கண்கூடு.
எனவே தமிழர்க்கு உண்மையான தீபாவளி - கார்த்திகை தீப விழாவே ஆகும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்,கார்த்திகை விளக்கு பற்றிச் சங்க
இலக்கியங்களிலும் காணமுடியும்.மலையே சிவனாக-சிவனே மலையாகத்
தோன்றிய திருத்தலம் திருவண்ணாமலை. இங்குதான் முதன் முதலாக
திருக்கார்த்திகை மகாதீப விழா நடந்தது. இதற்கு ஆதாரமாக சங்க
இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடல்.


மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !
என்று கூறுகிறது. இப்பாடல் இயற்றியவர் நக்கீரர்.
இப்பாடலில் 'பழவிறல் மூதூர்' எனக் குறிப்பிட்டது திருவண்ணாமலையைத்தான்.
'நற்றினை'யில் பாலைப் பாடிய பெருங்கடுங்கோ என்ற பெரும் புலவரும்,
'அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்
செஞ்சுடர் நெடுங்கொடி'
என்று திருவண்ணாமலை தீபம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஒளி வழிபாட்டு நெறி பற்றிச் சங்க இலக்கியமான 'நெடுநல்வாடை'யும்,
''இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கை தொழுது''
என்று எடுத்தியம். மேலும் ஞான சம்பந்தரும், மயிலாப்பூர் தேவாரத்தில்,
''கார்த்திகை விளக்கீடு காணாது
போதியோ பூம்பாவாய்!''
என்று கார்த்திகை விளக்கு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சிலப்பதிகாரமும் ஒளி வழிபாட்டை, 'திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும்'
என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், 'அழல் சேர் குட்டம்' என்று சிலம்பும் செப்பும்.

'நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட நாள் விளக்கு' எனக்கூறும் கார் நாற்பது.
'கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்' எனக் கூறும்
சீவக சிந்தாமணி பின்னாளில் வள்ளலாரும் ' அருட்பெரும் 'அருட்சோதி -
தனிப்பெருங்கருணை' என்றார்.

எனவே சங்க இலக்கியங்கள்,சிலப்பதிகாரம்,சிந்தாமணி,கார் நாற்பது தேவாரம்
முதலான இலக்கியங்கள் தமிழரின் உண்மையான தீபாவளி திருக்கார்த்திகை தீப
விழாவே எனக்கோடிட்டுக் காட்டுகிறது.

'குரு நமச்சிவாயர்' என்ற சைவப் பெரும் புலவர் திருவண்ணாமலை மகிமையைப்
போற்றி 102 பாடல்கள் கொண்ட 'அண்ணாமலை வெண்பா' என்ற அற்புதமான பாடல்
தொகுப்பை வழங்கியுள்ளார்.அண்ணாமலை வெண்பா நூலில் ஓரு வெண்பா:
'கண்டங் கரிய மலை கண்மூன்று உடைய மலை
அண்டர் எலாம் போற்றற்கு அரிய மலை - தொண்டர்க்கு
தோற்றுமலை நாளும் தொழுவோர் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணாமலை!'
அண்ணாமலை வெண்பா பாடிய குரு நமசிவாயாரின் பிரதமச் சிடரே
குகை நமசிவாயர் என்பதும் அறிந்ததே.

எத்தனை எத்தனை தீபங்கள்...! தீபங்களில் 16 வகையுண்டு
அவை :--
தூபம்,மகாதீபம், அலங்கார தீபம், நாக தீபம், விருட்சப தீபம்,
புருஷா மிருக தீபம், ஓல தீபம், கமடதி தீபம்,
கனு தீபம், வியான்ர தீபம், சிம்ம தீபம், மயூர தீபம், ஐந்தட்டு தீபம்,
நட்சத்திர தீபம்,மேரு தீபம் ஆகியன.
இந்த 16 வகை தீபங்களில் மகாதீபம் ஏற்றும் விழா மிகவும்
சிறப்பாக நிகழும் தலமே திருவண்ணாமலை.

வீட்டு விளக்கடு மூன்று வகைகள்
'குமாராலய தீபம்', 'சர்வாலய தபம்', 'வீட்டுவிளக்கீடு
வீட்டைச் சுற்றியுள்ள விளக்கேற்றி வைப்பது ' வீட்டுவிளக்கீடு
முருகன் கோயில்களிலும் விளக்கு ஏற்றுவது, சொக்கப்பனை
கொளுத்துவதும் ''குமாரலய தீபம்''
மற்றைய கோயில்களில் தீபம் ஏற்றி,சொக்கப்பனை கொளுத்துவது சர்வாலய தீபம்.

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பு ஆய்ந்தேறி - நொடியுங்கால்
இன்னதென அறியா ஈங்கோயே ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.

திருச்சிற்றம்பலம்

[தீபம் நாளையும் சுடர் விடும்....]


அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

2 comments:

ஸ்ரீ சரவணகுமார் said...

நல்லதோரு பதிவு..
ஆவலுடன் அடுத்த பதிவிற்காய் காத்திருக்கிறேன்

சிங்கை கிருஷ்ணன் said...

அன்புடையீர்
தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்
மிக்க நன்றி.

அன்புடன்
கிருஷ்னன்