Thursday, November 30, 2006

திருவண்ணாமலை தீபம் - இலக்கியத்தில் விளக்கீடு - 2

பாடல் பெற்ற தலம்

திருஞான சம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,குகை நமைசிவாயர், அருணகிரிநாதர்,வள்ளல், பெருமான் என திருவண்ணாமலைப் பாமழை பொழிந்து வழிபட்டோ ர் பட்டியல் மிகவும் நீளமானது.

திருவண்ணாமலையை அடுத்த அடி திருவண்ணாமலையில்தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவை, திருஅம்மானை ஆகிய பாடல்களைப் பாடினார்.

சைவ எல்லப்ப நாவலர் என்ற பெரும் புலவர் 'அருணாசலப் புராணம்' எழுதியுள்ளார்.அதில் உள்ள உண்ணாமுலை அம்மை பற்றிய அற்புதப் பாடல் இதோ :-

கார் ஒழுகும் குழலாளை, கருணை வழிந்து
ஒழுகும் இரு கடைக் கண்ணாளை
மூரல் இள நிலவு ஒழுக புழுகு ஒழுக
அழகு ஒழுகும் முகத்தினாளை
வாரல் ஒழுகும் தனத்தாளை வடிவு ஒழுகித்
தெரியாத மருங்குழ லாளை
சீர் ஒழுகும் பதத்தாளை அருணை உண்ணா
முலையாளைச் சிந்தை சேர்ப்போம்.

புராணிகர் சோணாசல முதலியார் என்னும் பெரும்புலவர் திருவண்ணாமலை தீபம் பற்றிக்
கார்த்திகை தீப வெண்பா படைத்துள்ளார்.

கங்கை அணி தீபம் கற்பூரத் தீபமலை
மங்கையொரு பங்கில் வளர்தீபம் - பங்கயன் பால்
விண்பாரு தேடும் வண்ணம் மேலிய அண்ணாமலையில்
பண்பாரும் காத்திகை தீபம்

இப்பாடலில் உமையம்மை சிவனின் இடப்பாகம் பெற்றதையும்,பிரம்மாவும்,திருமாலும் அடிமுடி தேடிய நிகழ்வையும் கோடிட்டும் காட்டியுள்ளார் புலவர்.

உமாதேவி இடப்பாகம் பெற்ற பவழக்குன்று ஒருநாள் உமாதேவி சிவனின் இரு விழிகளையும் வேடிக்கையாக மூட, இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. பல்லுயிர்களும் துன்புற்றன.இந்தப் பாவம் நீங்கிட,

''உமையே! காஞ்சியில் மண் லிங்கம் செய்து,கடுந்தவம்
புரிந்து,பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து தவமியற்றி,
என் இடப்பாகம் பெறுவாய்!''

எனப் பணித்தார் சிவன்

அவ்வாறே காஞ்சியில் மண்லிங்கம் பிரதிஷ்டை செய்து,பின்னர் திருவண்ணாமலைக்கு வந்தார்.அன்னை உமாதேவி.திருவண்ணாமலை துர்க்கை அம்மன் ஆலயம் அருகே உள்ள பவழக்குன்று மலையில்

பர்ணசாலை அமைத்து,கவுதம முனிவரின் அருளாசியுடன் கடுந்தவம் மேற்கொண்டபோது,ஆசையால் அட்டகாசம் செய்த அசுரர் தலைவன் மகிடாசுரனை அழித்தாள் உமை.

கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கிருத்திகை,பிரதோஷநேரத்தில் மலைமேல் சிவனின் சோதி தரிசனம் கண்டு வணங்கி,சிவனின் இடப்பாகம் பெற்றாள் உமாதேவி.

அப்படி அன்னை உமாதேவி சிவனின் இடப்பாகம் பெற்ற பவழகுன்றும் பகுதி திருவண்ணாமலையில் காட்சி தருகின்றது.பகவான் ரமணர் சில காலம் பவழக் குன்றில் தங்கித் தவம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆழ்வார்கள் ஏற்றிய ஞானத் தமிழ் விளக்கு.

திருக்கார்த்திகை தீபவிழா சைவர்களுக்கு மட்டுமல்ல;வைணவர்கலும் போற்றி வழிபாடு செய்யும் விழாவாகும்.பொய்கைஆழ்வார்,பூத்தாழ்வார்,பேயாழ்வார் ஆகிய மூவரையும் 'முதல் ஆழ்வார்கள்' என்று வைணவம் கொண்டாடும்.விழுப்புரம்,திருக்கோவிலூர் வைணவத் தலங்களுள் சிறப்பிடம் பெற்றது.

மகாபலிச் சக்கரவர்த்தியின் கர்வத்தைப் போக்கத் திருமால்
திரிவிக்ரமனாக-அதாவது உலகளந்த பெருமாளாத் தரிசனம் தந்த
தலமே திருக்கோவலூர் ஆகும்.இங்கேதான் முதல் ஆழ்வார்களாகிய
பொய்கை ஆழ்வார்,பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகிய மூவருக்கும்
திருமால் உலகளந்த கோலத்தில் திருக்காட்சி வழங்கினார்.

அப்போது உலகளந்த பெருமானை ஞானத்தமிழ் விளக்கை
ஏற்றி முதல் ஆழ்வார்கள் போற்றி செய்தனர்.



பொய்கை ஆழ்வார் பாசுரம்:-
வையம் தகளியாக வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நிங்குகவே என்று

பூதத்தாழ்வார் ஞானத்தமிழ் விளக்கு:-
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா நண்புருகி
ஞானச் சுடர் விளகேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நாள்.

போழ்வார் ஏற்றிய ஞானதீபம்.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
[தகளி - அகல்விளக்கு]

இவ்வாறக ஒளிவடிவினாக இறைவனைப் போற்றும் திருக்கார்த்திகை நாளை நாம் அனைவரும் இல்லங்களில் திருவிளக்கேற்றி கொண்டாடுவோம்!



ஆதி அந்தமில்லாப் பரமன் சோதி வடிவாக தோன்றி
குளிந்த தலம் திருவண்ணாமலை.

அண்ணாமலை யில் ஏற்றப்படும் அகன்ற சோதியை கண்டு
தரிசிப்பவருக்கு, வினையாவும் தீரும் வேண்டியவை கிட்டும்

அன்புடன்
கிருஷ்ணன்

1 comment:

ENNAR said...

ஆன்மீக நண்பரே தங்களது தளத்தை இன்றுதான் கண்டேன் ஆனால் அடிக்கடி எனக்கு தங்களது மின்னஞ்சல் வந்து கொண்டு இருக்கிறது பதிவு நன்றாக உள்ளது தொடருங்கள் தங்கள் பணியை