Thursday, September 02, 2010

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள் -1

அண்ணாமலைக்கு வாவென்று அழைத்து
ஆட்கொண்ட ஞான தபோதர்
குகை நமச்சிவாயர் ஒரு சிவயோகியாக,
சித்தராக சமாதி முக்தி அடைந்தார்.
அவர் அண்ணாமலையில் ஒரு குகையில்
சிவயோகத்தில் இருந்து வந்தமையால்
குகை நமச்சியாவ மூர்த்தி எனக்
கூறப்பட்டார்.

அவருக்கு நமச்சிவாயர் என்றொரு மாணவ
சீடன் இருந்தார். அவர் ஞானாசிரியரின்
அருகிலிருந்து அன்புடன் பணி செய்து வந்தார்.
குகை நமச்சிவாயர் குகையின் பக்கத்தில்
வளர்ந்தோங்கி இருந்த ஆலமரத்தில் மரத்தில்
ஊஞ்சலிட்டு அதில் யோக நித்திரை
கொள்வது வழக்கம்.

[இன்றும் ஒரு வளர்ந்தோங்கி ஆலமரம்
கோயில் நுழைவாயிலிலும்,
குகை நமச்சிவாயர் சமாதி
அருகிலும் இருக்கிறது.]

அதன்போது ஞானாசிரியன் அருகிலிருந்து
பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது
ஆசிரியர் அருகில் இருந்தபோதும்
'குலுக்' என்று நகைத்தார்.
''நமச்சிவாயம் என்ன அதிசயம் கண்டு
நகைத்தாய்?'' என்று குகை நமச்சிவாயர் கேட்டார்.

அப்பொழுது மாணவ சீடராகி நமச்சிவாயர்,
''ஐயனே திருவாரூரின் கண் தியாகராசப்
பெருமானைத் திருவீதியின் கண்
எழுந்தருளச் செய்து உலா வரும் போது,
நாட்டியப் பெண்கள் ஆடிக்கொண்டு வர,
அவர்களுள் ஒருத்தி கால் இடறி விழுந்தாள்;
அங்கிருந்த அவைவரும் நகைத்தார்.
யானும் நகைத்தேன்'' என்றார்.

இதுபோன்று ஒருநாள் ஞானாசிரியரின்
அருகில் இருந்தபோது, தம் ஆடையைப்
பற்றி தேய்த்தார். ''ஏன் இவ்வாறு ஆடையைப்
பற்றித் தேய்த்தனை" என்று குகை நமச்சிவாயர்
கேட்ட போது. ''பெருமானே! தில்லை மாநகரிலே
பொற்சைபையிலே திரைச்சிலை இட்டிருந்தார்கள்.

அதன் அருகில் குத்துவிளக்கு சுடர் விட்டு
எரிந்துகொண்டிருந்தது, அதனை ஓர் எலி பற்றி
இழுத்துகொண்டு சென்றது, அச்சுடர்
திரைசீலையில் பட்டதனால் அத்திரைச்சிலையில்
தீப்பற்றிக்கொண்டது. அங்கிருந்தவர்கள் அத்தீப்
பரவாமல் சீலையைப் பற்றிக் கசக்கினர்,
யானும் கசக்கினேன்'' என்றார்.

பின்பு ஒருநாள் குகை நமச்சிவாயர் மாணவர்
உள்ளத்தை அறியவும், சோதனை செய்யவும்
தேர்ந்து அறியவேண்டி வாந்தி எடுத்து
அதைத் திருவோட்டில் பிடித்து, ''இதை மனிதர்
கால் அடிபடாத இடத்தில் இட்டுவருக'' என்று
கட்டளை இட்டார். அதை நமச்சிவாயர்
ஏற்றுக்கொண்டு மனிதர் உலவாத, கால்
அடிப்படாத இடம் எதுவென ஆராய்ந்து பார்த்தார்.

அப்படி ஒரு இடம் இல்லை என்று அறிந்து,
அதனைத் தாமே உட்கொண்டார்.

ஆசிரியர் இந்த அருஞ்செயலைக் கண்ணுற்று,
''அன்பனே! அடிபடாத இடத்தில் வைத்தணையோ?''
என்று கேட்டார்.

அதற்கு பதிலாக, ''அய்யனே, அதனை வைக்க
வேண்டிய இடத்தில் வைத்தேன்...'' என்று மிகவும்
பணிவாக விடை அளித்தார்.

மாணவர் செய்த மூன்று அருஞ்செயல்களையும்
கண்ட நமச்சிவாய மூர்த்தி, மாணவருடைய
ஞான நிலை நாளுக்கு நாள் உயர்ந்து அறிந்து
''அவரை அவர்க்கேற்றதொரு புனிதமான
இடத்திற்கு அனுப்பிவைத்தல் வேண்டும்'' என
முடிவு செய்தார். உடனே ஒரு வெண்பாவில்
பாதி வெண்பாவினைக் குகை நமச்சிவாயர்
இயற்றி பாடினார்.

நேரிசை வெண்பா....

''ஆல்பழுத்துப் பக்கியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்றநிலை வீணிலெனச் --------
என்று பாடி நிறுத்தினார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: