Thursday, September 02, 2010

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #5

இந்த நிகழ்ச்சி பல காத தூரத்தில்
நடைபெற்றதென்றாலும், அண்ணாமலையில்
குகைக்குள் இருந்த நமச்சிவாயர் ஞானநோக்கால்
அறிந்து திடீரென நகைத்துக் கனல் பிழம்பு
போன்ற கவியொன்றை இயற்றினார்.
உடனே அந்த வைணவ குருவின் கண்கள்
ஒளியிழந்தன.

அந்த வைணவ குரு சில திங்கள் வரை
அல்லலுற்று, பின்னர் அண்ணாமலையில்
அமர்ந்திருக்கும் மாபெரு ஞானியாகிய
குகை நமச்சிவாய தேவர்வாயிலாகத்
தனக்குக் கிடைத்த தண்டனை என்று
அறிந்ததும் அண்ணாமலைக்கு வந்து
குகை நமச்சிவாயரிடம் அடைக்கலம் புகுந்தார்.

அப்போது குகை நமச்சிவாய தேவர்
அந்த வைணவ குருவை நோக்கி,
''நீர் எந்த மலையைக் கண்ணாலும்
பார்க்கக் கூடாதென்று திரையிட்டு
மறைக்கக் கட்டளையிட்டீரோ அந்த
மலைக்கே சென்று அங்கு எழுந்தருளியிருக்கும்
திருக்காளத்தி இறைவனை வணங்குவீரானால்
மீண்டும் கண்ஒளியைப் பெறுவீர்!'' என்றார்.

அவரும் அவ்வாறே சென்று வணங்கி
கண் ஒளியைப் பெற்றார். இவ்வாறாகவே,
பல அருட்பெருஞ்செயல்களை செயல்களைச்
செய்து அண்ணாமலையில் வாழ்ந்து வரும்
நாளில், அண்ணாமலையாரிடம் தம்மிடம்
ஈடுபாடுடைய மன்னன் ஒருவனைக் கொண்டு
குகை நமச்சிவாயர்க்கு பொன்னும் மணியும்
அணியும் பல்லாக்கும் அளித்துத்தனக்கு
முன்னே செல்லுமாறு பணித்தருளினார்.

இந்த நிலையில் குகை நமச்சிவாயருக்கு
வயது நூறு ஆயிற்று. விதிக்கப்பெற்ற ஆயுள்
முடிந்த பின்னரும் இங்கிருந்தல் பிழையாகும்
என்று சொல்லி முறைப்படி முன்பாகவே
அமைக்கப் பெற்றிருந்த சமாதிக் குழியில்
தாமே இறங்கினார். பரம்பொருளாகிய
சிவபெருமான வானத்தில் இருந்து அசரீரியாக
அங்கு வந்திருந்த பலரும் கேட்குமாறு, '' அன்பனே!
நீ இவ்வுலகில் மேற்கொண்டு நூறாண்டுகள் வாழ்வாயாக'' என்றுரைத்தருளினார். இறைவன் திருவுளப்
பாங்கினையுணர்ந்த குகை நமச்சிவாயர்,
அப்பெருமானைப் பாடிமகிழ்தார்.

அவர் காலத்தில் வேற்று மதத்தினரால் சைவ
சமயத்திற்கு வந்துற்ற இடையூறுகளை எல்லாம்
நீக்கி சைவத்தின் சிறப்பினை நிலைநாடினார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: