Tuesday, September 07, 2010

சித்தர்களின் வழியில்...-குரு நமச்சிவாய சுவாமிகள்-5

அவ்வாறே அர்ச்சகர் மூவரும் குரு நமச்சிவாயரை
அவ்விடத்தில் கொண்டு போய் விட்டுத்திரும்பினர்.
அங்கே யோகத்தில் இருக்கும்போது நமச்சிவாயருக்குப்
பசியுண்டாயிற்று. அப்போது,
'' ஊன்பயிலும் காயம் உலராமல் உன்றனது
வான்பயிலும் பொன்னடியை வாழ்த்துவேன் - தேன்பயிலும்
சொல்லியல் நல்லார் துதிக்கும் சிவகாம
வல்லியே சோறு கொண்டு வா.
-- என்ற இவ்வெண்பாவினைச் சொல்லினார்.
உடனே சிவகாமி அம்மையார் அமுது கொண்டுவந்து நின்று,
'' கொண்டுவந்தேன் சோறு குகை நமச்சி வாயரது
தொண்டர் அடியார் சுகிக்கவே - பண்டுகந்த
பேய்ச்சிமுலை யுண்ட பெருமாளுடன் பிறந்த
நாச்சி சிவகாமி நான்...''
என்ற வெண்பாவினைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறாகவே, சிவகாமசுந்தரி தேவியார்
குரு நமச்சிவாயருக்கு ஒவ்வொரு நாளும்
அன்னம் அளிக்க குரு நமச்சிவாயர்
யோகத்தில் இருந்து வந்தார்.

இவ்வாறாக இவர், சிவயோகத்தில்
இருக்கிற காலங்களில் இவரை காணவரும்
அன்பர்கள் பொன்னையும் பொருளையும்
எதிரில் வைத்துவிட்டுச் சென்றார்கள்.

அவற்றைக் கண்ட குரு நமச்சிவாயர்,
''இவை இவ்விடத்திற்கு என் வந்தன?
இவை ஆட்கொல்லி, இங்கு இது வேண்டாம்''
என்று அந்த நேரத்தில் இருந்தவர்களை
எடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டு விடுவார்.

இவற்றை கண்ட தில்லை மூவாயிரம்
''இவ்வளவு செல்வமும் வீணாகிறதே!''
என்று தம்முடன் கூடிப்பேசிக்
குரு நமச்சிவாயர் இடம் சென்று,
''சுவாமி, நீர் இவ்விடத்தில் இருப்பதனால்,
அன்பர்கள் தரும் பொருள்கள் வீணாகின்றன.
திருக்கோயிலின் உள்ளே வந்து தங்கினால்,
எல்லாப் பொருளும் பல்வேறு வகையான
திருப்பணிகள் செய்வதற்குப் பயன்படும்.
பல கட்டளைகள் நடைபெற வழியுண்டாகும்''
என்று வேண்டிக்கொண்டனர்.

அப்போது குரு நமச்சிவாய தேவர்,
அர்ச்சகர்களை நோக்கி. ''நாம் நமது
குருவின் ஆணைப்படி இவ்விடத்தில்
வந்திருக்கிறோம். ஆதலால் யாம் அங்கு
வர இயலாது'' என்று மறுத்துவிட்டார்.

உடனே, தில்லை மூவாயிரவருள் சிறப்புற்றிருந்த சீவன்முத்தர்,சடாமுத்தர், மகாமுத்தர் ஆகிய
மூவரும் அம்பலத்தாரிடம் சென்று,
''பெருமானே! குரு நமச்சிவாய மூர்த்தி
கோயிலுக்குள்ளே வந்தால் பல திருப்பணிகள்
நடைபெறவும், பல அறக்கட்டளைகள்
தொடர்ந்து நடைபெறவும், வழியுண்டாகும்.''
என்று சொன்னார்கள்.

''நன்று, நீவீர் சென்று அழைத்தால் வாரார்
யாமே சென்று அழைப்போம்'' என்று கூறி,
மூப்பு நிறைந்த அடியவராய்த் தண்டு
கமண்டலம் பிடித்துக் கொண்டு திருப்பாற்கடல்
என்னும் இடத்திற்கு வந்து
குரு நமச்சிவாய மூர்த்தியின் எதிரே நின்றார்.

குரு நமச்சிவாயர்யோகம் தெளிந்து முன்
நிற்பவரைப் பார்த்தார். கண்ணுற்றவுடனே,
''ஐயனே!போற்றி'' என்றார். வந்து நின்ற வரும்
''போற்றி போற்றி''என்றார்.

குரு நமச்சிவாயர், வந்து நின்ற முதுமை
நிறைந்த அடியாரைப் பார்த்து,
''ஐயா! நீங்கள் இருப்பது எந்த ஊர்?'' என்றார்.
அவர் ''நாம் இருப்பது தில்லைவனம்'' என்றார்
உம்முடைய பெயர் என்ன?'' என,
''எம் பெயர் அம்பலத்தாடுவார்'' என்றார்.

''நீர் என்ன அலுவலாக இங்கு வந்தீர்''
என்று கேட்க எனக்கு அன்னம் தேவையாக
இருக்கிறது; இவ்வூர் எங்கும் சுற்றினேன், அன்னம் கிடைக்கவில்லை, இவ்விடத்தில் அன்னம்
கிடைக்கும் என்று சொல்லினர்.
ஆகவே,உம்மிடம் வந்துள்ளேன்'' என்றார்
முதியராய் வந்து நின்ற அடியவர்.

அப்பொழுது குரு நமச்சியாவாய மூர்த்தி,
''ஐயா! என்னிடம் அன்னம் இல்லை.
எனக்குச் சிவகாசுந்தரி அம்மையார்
உணவளித்து வருகிறார். எம்மிடம்
பாத்திரம் கூட இல்லை'' என்று சொல்லினார்.

அப்போது வந்த முதியவர் ''சுவாமி! என்னிடம்
பாத்திரம் இருக்கிறது'' என்று சொல்லிச்
சந்திரனைப் பாத்திரமாக வைத்தார்.

அப்போது குரு நமச்சிவாயர், அன்னை
சிவகாமசுந்தரியைச் சிந்தனை செய்தார்.
அன்னம் வந்தது! முதிய அடியவரை நோக்கி ''இதனை ஏற்றுக்கொள்ளும்''என்றார்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: