Thursday, September 02, 2010

சித்தர்களின் வழியில்...- குகை நமச்சிவாயர் #6

ஒருநாள் குகை நமச்சிவாயர், அண்ணாமலையார்
சந்நிதிக்குச் சென்று வழிபாடு, செய்து கொண்டு தம்முடைய குகை நோக்கித் திரும்புகையில்
ஒருபெண் தன் கணவனை இழந்து கண்ணீர் சொரியக்
கதறி அழுதுகொண்டு நமச்சிவாய சுவாமிகளை
விழுந்து வணங்கித் தன் கணவனை எழுப்பித்
தருமாறு மன்றாடினாள்.

அந்தப் பெண்ணின் ஆற்றோணாத் துயரினைக்
கண்ட சுவாமிகள் உள்ளம் உருகி,
அண்ணாமலையாரை திருவடிகளை நினைந்து உருகிபாடினார்.
பிறகு, அந்தப் பெண்ணினை நோக்கிக்
''குழந்தாய்! அண்ணாமலையார் எனக்கு
கூடுதலாக நூறு வயதினை தந்துள்ளார்;
அந்த நூறு ஆண்டுகளுள் எழுபத்தைந்து
ஆண்டுகளை உனக்கும் உன் கணவனுக்கும் தந்தேன்,
உன் கணவன் உயிர்ப் பெற்று எழுவான்,
வீடு நோக்கிச் செல்க!'' என்றார்.

அந்தப் பெண் நம்பிக்கையுடன் வீட்டிற்குச்
சென்றாள். கணவன் உயிர் பெற்று
எழுந்தனைக் கண்டாள்; பெருமகிழ்ச்சிக் கொண்டாள்.

கணவனுடன் சென்று குகை நமச்சிவாய
சுவாமிகளுடைய திருவடிகளில் வீழ்ந்து
வணங்கி, அவருடைய அருள்
நோக்கத்தினைப் பெற்று வீடு திரும்பினாள்.

இவ்வாறாக குகை நமச்சிவாயர்
அண்ணாமலையில் வாழ்ந்து வருங்காலத்தில்
நகித் எனப் பெயர் கொண்ட மிலேச்ச மன்னன்
ஒருவன் அண்ணாமலைக்குவது சேர்ந்தான்.

அவன் மதங்கொண்ட யானையை போன்று காணப்பட்டான். அவன் அழகுமிக்க பெண்களைப் பல சாதிகளிலிருந்து
வன்முறையில் கவர்ந்துகாவலில் வைத்து
அறநெறிக்கு மாறாக நடந்து வந்தான்.

அவன் அழிவதற்குரிய காலம் வந்து விட்டபடியால், அண்ணமலையார் திருக்கோயிலுனுட் புகுந்து
சில வருந்தத்தக்க செயல்களைச் செய்யத் தொடங்கினான்.

இவற்றை எல்லாம் கண்ணுற்ற குகை
நமச்சிவாய சுவாமிகள்,'' மூன்று சுடர்களையும்
மூன்று கண்களாகக் கொண்ட சிவபிரானுடைய
நெற்றிக்கண்ணும்ஆழ்ந்த உறக்கம்
கொண்டுவிட்டதோ'' என்ற கருத்தினை
அமைத்துப் பாடினார்.

அன்றிரவில் அண்ணாமலைப் பெருமான்
மிலேச்சன் கனவில் தவசியாகத்தோன்றி, ஒரு படையினால் முதுகிடத்தில் சிறிது குத்தினார்.
மிலேச்சன் விழித்து எழுந்தான்.

முதுகில் ஏதோ ஒரு சிறிது ஊறல்
தோன்றுவது போல் அவனுக்குத் தோன்றியது. பிறகு அவ்விடத்திலொரு வேர்க்குருதோன்றியது.

பின்னர் அவ்வேர்க்குரு முதுகுப் பிளவையாக
உய்க் கொண்டது. அதனைக் கண்ட மிலேச்சன்
வருந்தினான். அவனுடன் வந்த சில பெரியவர்களிடம்
அதனைக் கூறினான்.

'' நீ இவ்வாலயத்திற்குள் இருத்தல் கூடாது''
என்றவுடன் கோயிலை விட்டு வெளியேறினான்.
பிறகு உணர, துன்பமுற்றுப் புழுக்கள் பெருகிடத்
தாங்கொணாதவனாகி, ஓரிரவில் துடிதுடித்து
இறந்தான்.

இதனைக் கேள்வியுற்றமக்கள் பெருமகிழ்ச்சியுற்றனர்.
அவன்இறந்த தினத்தன்று மக்கள் அனைவரும்,
இராவணன் இரணியன் போன்றவர்கள் அழிந்த நாளில்
உலகம் எவ்வாறு மகிழ்ந்ததோ அவ்வாறு மகிழ்ந்தனர்.

கருவுற்ற காலத்தில் விதிக்கப்பெற்ற நூறு வயதும்
கழிந்தாற் போலவே, பிறகு சிவபிரான் அளித்த நூறு
வயதும் கழிந்து போயினமை அறிந்து,
தமக்குத்தலைவராயும், தந்தை, தாய்,
தெய்வமாகவும் விளங்கும் திருமலையில்
அன்று இயற்றப் பெற்ற குழியில்கண் புகுந்தார்.
புகுந்தவர், அங்கிருந்த அன்பர்களை நோக்கி, ''என்னை, இவ்வுடல் என்று நினையாதீர்.
இவ்வுடல் நான் அல்லேன்'' என்று
சொல்லிக்கொண்டே அருவம் ஆனார்.
பிறகு அங்கிருந்தவர்கள், அவ்விடத்தே
இலிங்கம் அமைத்து வழிபாடாற்றினர்

குகை நமச்சிவாயர் தொடர் - நிறைவு
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: