Thursday, September 02, 2010

சித்தர்களின் வழியில்...- குரு நமச்சிவாய சுவாமிகள் -2

அருகிலிருந்த குரு நமச்சிவாய மாணவ சீடன்,
''சுவாமி! குறை வெண்பாவையும் முடிக்கலாமே''
என்றார். அப்போது குகை நமச்சிவாயர்.

''அப்பா நமச்சிவாயம்! எஞ்சியுள்ள அரை
வெண்பாவையும் நீயே முடிப்பாயாக!''என்றார்.
ஆசிரியர் கூறியன கேட்டசீடன், ''பெருமானே!
குருவின் வாக்கிற்கு அடாத எதிர்வாக்கினை
அடியேன் கூறுதல் பொருந்தாதே'' என்றார்.

அப்போது குரு '' நீ அருள்நிறை மாணவன்,
ஆதாலால் எஞ்சிய வெண்பா அடிகளைப்
பாடுக!'' என்றார்.

அப்போது மாணவர், நல்லாசிரியன்
கட்டளைக்கு கட்டுப்பட்டு,
''சால்வன
செய்யா வொருத்தாருடன் சேர்ந்து மிருப்பீரோ
வையா நமசிவா யா'' -- என்று முடித்தார்.

அருள்நிறை மாணவரைப்பற்றி அறிய
வேண்டுவனவற்றை தெளிவாக அறிந்துகொண்ட
ஞானாசிரியர், ''அப்பனே! நமசிவாயம்! உனக்கு
ஒப்பான மாணவனை எங்கும் காண்டல் அரிது;

ஆகையால் இன்றுமுதல் நீ குரு நமச்சியாய
மூர்த்தி எனத் திருப்பெயர் பெற்றாய்!'' என்று
தழுவிக்கொண்டு,''என் கண்ணுட் கருமணியே!''
ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுதல்
கூடாது; ஆகையால் அறியாமையை நீக்கி
அறவொளியை வழங்கும் அம்பலவாணர்
எழுந்தளிருயிருக்கும் திருத்தில்லை எனப்பெறும்
சிதம்பரத்திற்குச் செல்க! அங்கு உம்மால்
நடைபெற வேண்டிய பல திருப்பணிகள்
உள்ளன'' என்று கட்டளையிட்டார்.

அப்போது குரு நமச்சிவாயர் ஞானாசிரியரை
நோக்கி, ''ஐயனே! ஞானாசிரியர் திருவடிகட்குப்
பணி செய்யும் பேற்றினை இழந்து, நாள்தோறும்
செய்யும் குரு தரிசனத்தை இழந்து வேறொரு
நகர்க்கு எவ்வாறு செல்வேன்'' என்றார்.

குகை நமச்சிவாயர் மாணவரை நோக்கி,
''நீர் பெருமான் எழுந்தளியிருக்கும் சிதம்பரத்திற்குச்
சென்று பொன்னம்பலத்தின் முன்னே நின்று
கூத்தப்பெருமானை வணங்கி நிற்பீராக!

அங்கே, அப்பெருமான் நம்மைபோல்
தரிசனம் கொடுத்தால் இருப்பீராக;
இன்றெல் இவ்விடம் வந்து சேர்க!''
என்று சொல்ல. மாணவர்,''நன்று! என்று
நவின்று பத்துப்பாடல்களால் ஆசிரியர்க்கு
வணக்கம் தெரிவித்து நினறார்.

ஆசிரியரிடமிருந்து ''புறப்படலாம்'' என்ற சொல்
பிறந்தது. உடனே குரு நமச்சிவாயர் தனியாக
சாயுங்கால் நேரத்தில் புறப்பட்டுக் கிழக்கு நோக்கி
ஒரு காத தூரம் நடந்தார். இருள் வந்தது.

அங்குத் தகுதியானதொரு இடம் பார்த்து ஒரு
ஆலமரத்தின் கீழ் சிவயோகத்தில் அமர்ந்தார்.
பின் பசி மேலிட்டு, உண்ணாமுலை அம்மையாரை
நோக்கி ஒரு வெண்பா பாடினார்.

''அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும், போற்றிசெய நின்னடிய ருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா...''

எனறு குரு நமச்சிவாய சுவாமிகள்
இவ்வண்பாவினைப் பாடிய நேரத்தில்,
அண்ணாமலையாருக்குச் சர்க்கரைப் பொங்கல்
செய்து பொன்தபாளத்தில் இட்டு நிவேதித்துக்
கோயிலில் வைத்து அதனை எடுத்துச் செல்ல
மறந்தவராய்க் காப்பிட்டு அர்ச்சகர் முதலியோர்
அவரவர் வீடு சேர்ந்தனர்.

அதனை அறிந்த உண்ணாமுலைத் தாயார்
அந்நிவேதனத்தைத் தட்டுடன் கொண்டு வந்து
குரு நமச்சிவாயமூர்த்திக்குக் கொடுத்துவிட்டு சென்றார்.

விடிந்தபின் அர்ச்சகர் முதலியோர், கோவிலுக்குச்
சென்று கதவைத் திறந்து பார்த்தபோது,
பொற்றாம்பாளம் காணப்படவில்லை.

அர்ச்சகர்களும், ஊரின் உள்ள பெரியோரும்
திகைப்புற்று, ''யாரோ கள்வர்தாம் களவாடி
இருக்கவேண்டும்'' என்று கருதி ஆராய்ந்து
பார்க்கலாயினர். இதனால் இருபது நாழிகை
மட்டும் கோயில் பூசை நடைபெறாமல்
இருந்தது.

அப்போது அங்கிருந்த ஒரு அர்ச்சகர்
சிறுவன் தெய்வமுற்று, ''நமச்சிவாயா மூர்த்தி
சிதமபரத்திற்கு செல்லும் வழியில் ஒரு
ஆலமரத்தின் கீழ் இருக்கிறார்.
அவருக்கு உண்ணாமுலைத் தாயார்
அமுது கொண்டு போய்க் கொடுத்தார்.
அங்கே தாம்பாளம் கிடக்கிறது எடுத்துக்
கொண்டு வரவும்! என்றான்.

அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

No comments: